e1 Food Court ; வெஜிட்டபிள் சூப்களில் அசத்தும், வள்ளலார் சூப் ஸ்டால்!

e1 Food Court ; வெஜிட்டபிள் சூப்களில் அசத்தும், வள்ளலார் சூப் ஸ்டால்!

இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சூப், சுவைக்கும் மட்டுமல்ல, உடல்நலனுக்கும் சூப்பரானது. பசியை தூண்டும், உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கும், கொழுப்பைக் கரைக்கும், என சூப்பின் நன்மைகள் ஏராளம். இப்படிபட்ட சூப் வகைகளை தயாரித்து வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது,  தி.நகரில் முத்துகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும், வள்ளலார் சூப் ஸ்டால்.

பொதுவாக அசைவ சூப் கடைகளில் தான், மாலை நேரங்களில் கூட்டம் கூடும். ஆனால் சைவ சூப் கடையான இங்கு, நிற்பதற்கு கூட இடமில்லை. சிறிய கடைதான் என்றாலும், சுத்தமும், சுவையும் இங்கு உத்தரவாதம். காய்கறிகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வெஜிடபிள் சூப், கீரை சூப்,  வாழைத்தண்டு சூப், தக்காளி சூப், பேபி கார்ன் சூப், காளான் சூப், ஆனியன் சூப் உள்ளிட்ட சூப்களை, தினசரி இங்கு சாப்பிடலாம். அதுதவிர, ஒவ்வொரு நாளும் இரண்டு ஸ்பெஷல் சூப்கள் இங்கு விற்பனை செய்கிறார்கள்.

திங்களன்று, 15 வகையான மூலிகை சூப்கள் மற்றும் சாமை சூப், செவ்வாயன்று கார்லிக் பெப்பர் சூப் மற்றும் தினை சூப், புதனன்று வல்லாரை மற்றும் கொள்ளு சூப், வியாழனன்று தூதுவளை மற்றும் கறிவேப்பிலை சூப், வெள்ளிக்கிழமை அன்று  ஆறு வகையான மூலிகை சூப்கள் மற்றும் முளைக்கட்டிய தானிய சூப், சனிக்கிழமையில் முருங்கைக்காய் மற்றும் முடக்கத்தான் சூப் என பரிமாறப்படுகின்றன.

அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை  என, ஆறுவகை கீரைகளை சேர்த்து கீரை சூப் தயாரிக்கிறார்கள். அதுபோல வெஜிடபிள் சூப்பில் கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ்  என, அனைத்தையும் பச்சையாக சேர்க்கிறார்கள். இங்கு தயாராகும் அனைத்தும், முழுக்க முழுக்க இயற்கையாகவே செய்வது ஸ்பெஷல்.

இதுகுறித்து வள்ளலார் சூப் ஸ்டாலின் உரிமையாளர் அகஸ்டீனிடம் பேசினோம், “1993-ல் ஸ்ரீனிவாசா சாலையில் முதன்முதலில் சூப் கடையை பிளாட்பாரத்தில் தொடங்கினோம். அதன் பிறகு, முத்துகிருஷ்ணன் சாலையில் கடையெடுத்து, 13 வருடமாக இங்கு நடத்தி வருகிறோம். சூப்பில் செயற்கை நிறமிகள் சேர்ப்பதில்லை. இயற்கைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிறது.

மூலிகை சூப் செய்வதற்கு,  15 வகையான மூலிகைகள் சேர்ந்த பொடியை, நாட்டு மருந்துக் கடையில் வாங்கி பயன்படுத்துகிறோம். மற்றபடி, வல்லாரை, பிரண்டை, மணத்தக்காளி என, அனைத்துப் பொருட்களையும் பச்சையாக பயன்படுத்துகிறோம்” என்றார்.

-நீலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g