காலம் மாறிவிட்டதா? களத்தில் நிற்கும் பெண்கள் சொல்வதென்ன? #Women’s Day

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றாகிவிட்டது. நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருப்பதைப் போல நிஜமாகவே காலம் மாறிவிட்டதா?  கோலோச்சிய துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்களின் அனுபவம் என்ன சொல்கிறது…?

 

ரோஷினி ஹரிஹரன் (பேபி ஃபோட்டோகிராஃபர்)

ஆண்கள் மட்டுமே அதிகம் இருந்ததால் இந்த துறையில் பெண்களை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது. பெண் கேமராவை தூக்கினாலே வித்தியாசமாக பார்க்கும் மக்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள். ஆண் பல ஆண்டுகளாக தக்க வைத்திருக்கும் இடத்திற்கு பெண் வரவேண்டுமெனில், ஏதேனும் ஒரு தனித்துவத்தை காட்ட வேண்டும். அதிகம் உழைக்க வேண்டும். இருப்பினும் இதுபோன்ற சவால்கள் தேவை என்றே நினைக்கிறேன். அப்போதுதான் முன்னேறுவதற்கான வெறி உண்டாகும். எல்லாமே எளிதாக கிடைத்துவிட்டால், அதை தக்க வைத்துக் கொள்வதற்கான வேலைகளை மட்டுமே செய்வோம். அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர மாட்டோம்.

நான் பேபி போட்டோகிராஃபர் என்பதால் எனக்கு இந்த துறையில் எந்த பிரச்னையும் வந்ததில்லை. இயல்பாகவே பெண்கள் குழந்தையை பாதுகாப்பாக கையாளுவார்கள் என்ற எண்ணம் இருப்பதால், பெற்றோர்கள் தைரியமாக என்னிடம் ஒப்படைப்பார்கள். சில வீடுகளில், நான் வேலை செய்வதைப் பார்த்து கவலைப்படுவார்கள். ’பாவம் இந்த பொண்ணு இவ்ளோ நேரம் நின்னு வேலை செய்யுது’ என வருத்தப்படுவார்கள். அதே ஒரு ஆண் செய்தால் இந்த மாதிரியான எண்ணம் தோன்றாது. பெண் என்பதால் கிடைக்கும் அனுதாபங்களை நான் ஏற்பதில்லை.

சுமதி ராமகிருஷ்ணன் (ஃபேஷன் டிசைனர்)

துறை ரீதியாக பார்த்தால் எனக்கு சாதகங்கள்தான் அதிகம். ஃபேஷன் என்பது குறிப்பாக பெண்களுக்கானது என்பதால், அதில் பிரச்னை வந்ததில்லை. கற்றுக் கொள்வதற்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் பிசினஸாக பார்க்கும் போது நிறைய பிரச்னைகளை சந்திக்கிறேன். ஓர் ஆண் பிசினஸ் செய்தால் குடும்பத்திற்காக கஷ்டப்படுவதாகவம், பொறுப்பான மனிதனாகவும் கருதுகின்றனர். அதே பெண் செய்தால் அது ஏதோ ஹாபி-க்காக செய்வதாக நினைத்துக் கொள்கின்றனர். எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று பேசுகின்றனர்.

உதாரணத்திற்கு நான் ஆர்கானிக் ஆடை டிசைன் செய்ய பருத்தியை வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்கிறேன். தமிழ்நாட்டிலேயே பருத்தி விளைச்சல் இருக்கிறது, இங்கிருக்கும் பருத்தியை பயன்படுத்தலாமே என்று யோசித்தேன். அதற்காக ஒருவரை அணுகினேன். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் என்னைப் பற்றி கூறியதும், இரண்டு கேள்வி கேட்டார் . ’நீ இந்த சாதியைச் சேர்ந்த பெண்ணா? சும்மா இருப்பதால் இதை செய்கிறாயா ? என்றார். அந்த கேள்விகள் என் சுயமரியாதையை பாதித்தது. பெண்கள் சும்மா இருக்க முடியாமல் தான் வேலைக்குப் போகிறார்களா, என்ன! இதுபோல் பல அனுபவங்கள்… பெண்ணை பின்னோக்கி தள்ளும் இப்படியானக் கேள்விகளோடும் பேச்சுகளோடும் தான் பந்தயத்தில் ஓட வேண்டியிருக்கிறது.

உஷா கிருஷ்ணன் ( திரைப்பட இயக்குனர் )

திரைத் துறையைப் பொருத்தவரை பெண் என்பதால் எளிதில் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவார்கள். ஸ்கிரிப்ட் சொல்வதற்கு முன்பே, ‘பெண் என்றால் இவ்வளவுதான் தெரியும், முடியும்’ என்கிற எண்ணத்தோடுதான் அணுகுவார்கள்.  காஸ்டியூம், மேக் அப் , டப்பிங் போன்ற வேலைகளைத் தான் திரைக்குப் பின்னால் பெண்கள் பார்க்கிறார்கள். கிரியேட்டிவ் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு பெண்களை நம்புவதில்லை.  குறிப்பாக திரைப்பட இயக்கம் என்பது பெண்களால் முடியாது என்றே ஒட்டுமொத்த உலகமும் நம்புகிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான்.

பல சவால்களுக்கு மத்தியில் தான் நான் ராஜா மந்திரி படத்தை இயக்கினேன். அடுத்த பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். பல பெண்களுக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை. உதவி இயக்குனராக இருந்துவிட்டு, அப்படியே விலகிவிடும் சூழல் தான் இன்றும் நிலவுகிறது. பெண்கள் என்றால் ஃபேமிலி சப்ஜெக்ட் தான் எடுப்பார்கள். ஆண் இயக்குனர்களை போல முழுநீள மசாலா படமோ, ஹீரோயிஸக் கதைகளையோ, நகைச்சுவை, ஆக்‌ஷன் படமோ எடுக்க வராது என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. வாய்ப்பளிக்கப்பட்டால் எல்லா ஜானர்களிலும் பெண்களால் படம் எடுக்க முடியும்.

1950 களிலேயே கூட பானுமதி போன்ற பெண்கள் திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.   காலம் உண்மையாகவே மாறியிருக்குமானால், இந்த 70 ஆண்டுகளில் எத்தனை பெண் இயக்குனர்கள் வெளிவந்திருக்க வேண்டும்! என்னைப் பொறுத்தவரை சூழல் எதிர்மறையாக இருந்தாலும், நாம் பாசிட்டிவாக முன்னே நகர்ந்து போக வேண்டும். நிறைய பெண்கள் தைரியமாக திரைத்துறைக்கு வந்து கொண்டே இருந்தால் சீக்கிரம் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.

சுமதி ஸ்ரீனிவாசன் (வி மேகஸின் ஆசிரியர் மற்றும் சமூக தொழில்முனைவோர்)

பத்திரிகைத் துறையில் ஆண்களுக்கான இடம்தான் அதிகம். உயர் பதவிகள் அளிக்கும்போது ஆணா பெண்ணா என்று வரும்போது, ஆணுக்கான வாய்புகள்தான் அதிகம். இருப்பினும் தற்போது பல இடங்களில் பெண்கள் உயர்பதவிகளில் இருக்கின்றனர். ஆனால் அவை பல முயற்சிகளுக்குப் பிறகே சாத்தியமாகிறது.

ஆண்கள் நிறைந்த தொழில் களத்தில் ஒரு பத்திரிகையை நடத்துவதென்பது தொடர் சவால். 15 வருடங்களாக அதை அனுபவித்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் நிறைய நிராகரிப்பு, அலட்சியங்கள், பொருட்படுத்தாமை என எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறேன்.

பத்திரிகை தொடங்கிய ஆரம்பத்தில், தொலைக்காட்சியோடு   இணைந்து நிகழ்ச்சி  நடத்துவதற்கான வாய்ப்பு வந்தது. அப்போது பெரிய நிறுவனம் எங்களுக்கு ஸ்பான்ஸர் அளிப்பதாகக் கூறியது. நானும் மிகவும் மகிழ்ச்சியோடு மும்முரமாக பணியைத் துவங்கினேன். எல்லா வேலைகளும் முடிந்து டெலிகாஸ்ட் செய்யும் தருணத்தில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைவிடுவதாகக் கூறி அழைப்பு வந்தது. ஏன் எனக் கேட்டதற்கு அலட்சியமான பதில் வந்தது. அப்போது பெண் தானே, என்ன செய்துவிடப் போகிறார் என்கிற தொனியில்தான் அவர்களின் நடவடிக்கை இருந்தது.

இதே ஒரு ஆணாக இருக்கும் பட்சத்தில் இத்தனை அசாதாரணமாக கைவிடுவார்களா எனத் தெரியவில்லை.  ஸ்பான்ஸர்ஷிப் கேன்சல் செய்வது மீடியா தொழிலில் சகஜம்தான். இருப்பினும், பெரிய அளவில் செய்யும் போது அதுவும் பணம், எல்லோருடைய உழைப்பு என அளித்து பெருமூச்சு விடும் சமயத்தில், இப்படியான செயல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் செய்தது என்னை வேண்டுமென்றே பின்னோக்கி தள்ளுவதாக இருந்தது.

இருப்பினும் அதற்கு சவாலாக முதல் ஷோவை ஸ்பான்ஸர் இன்றி தொடங்கினோம். அடுத்தடுத்து ஸ்பான்ஸர்ஷிப் பிடித்து, 13 பாகங்களை வெற்றிகரமாக முடித்தோம். அந்த சமயம நான் பின் வாங்கியிருந்தால், அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறியிருக்கும். இதேபோல் மற்ற பெண்களையும் வளரவிடாமல் தடுத்திருப்பார்கள்.

ரேகா (டுவிஸ்டி டெயில் ரெஸ்டாரன்ட் சி.இ.ஒ)

சொந்தமாக ரெஸ்டாரன்ட் தொடங்க வேண்டுமென்பது என் சிறு வயது கனவு. ஆனால் அது எனக்கு அத்தனைச் சுலபமாக சாத்தியப்படவில்லை. நான்கு வருட போராட்டத்திற்குப் பிறகே அதை சாத்தியப்படுத்த முடிந்தது.  ‘பெண் என்பதால் என்னை நம்பி எப்படி ரெஸ்டரன்ட் பொறுப்பைப் ஒப்படைப்பது என்கிற தயக்கம் என் குடும்பத்தாருக்கு இருந்தது. நான் திறமைசாலி என என் பெற்றோர்களே சொல்வார்கள். இருப்பினும் சமூகச் சூழல் மற்றும் ஆண்கள் நிறைந்த தொழில் என்பதால், இதை சமாளித்து முன்னேறுவேனா என்கிற தயக்கமே அவர்களை யோசிக்க வைத்தது.

பின் நான் எடுத்த முடிவு சரி என புரிய வைத்து, என் மீதான நம்பிக்கையை வரவழைக்க நான்கு வருடங்கள் முயற்சி செய்தேன். அதன்பிறகு என் அப்பாதான் இன்றளவும் பெரிய உதவியாக இருந்து ஆலோசனை வழங்குகிறார். என் இரு ஆண் நண்பர்கள் பக்கபலமாக இருந்து உதவிகள் செய்கின்றனர். சில நேரங்களில் தொழில் பிரச்னைத் தொடர்பாக இரவு 11 மணிக்கு மேல் மீட்டிங் நடந்தால், அதில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போகும். உடனிருந்து கவனிக்க முடியாது. அப்போது என் நண்பர்கள்தான் அதை பார்த்துக் கொள்கின்றனர். 

இரவு என்பது இன்றும் பெண்களின் எதிரிதான். என் பிசினஸில் வரும் பிரச்னைகளை நானே இருந்து தீர்க்க நினைத்தாலும், சமூக மற்றும் குடும்ப சூழல் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. ஆண் துணை தேவைப்படுகிறது. யாரையும் சார்ந்திருக்காமல் முன்னேறுவது இன்றும் சவாலான விஷயம்தான். 

பார்வதி (ரேடியோ ஜாக்கி)

மீடியா துறையைப் பொருத்தவரை பெண்கள் தினமும் சந்திக்கும் சவால், பிறரின் பொறாமைகள்தான். ஆரோக்கியமான போட்டிக்கும் திறமைக்கும், அங்கீகாரம் அளிக்கும் நிறுவனங்கள் இருந்தாலும், உள்ளுக்குள் நடக்கும் அரசியல் அதை நசுக்குகிறது.

பெண்கள் சமூகம் சார்ந்தோ அல்லது அரசியல் சார்ந்தோ அறிவுப் பூர்வமான விஷயங்களை முன் வைக்கும்போது அதை அங்கீகரிக்கும் மனம் பலருக்கும் இருப்பதில்லை. எவ்வளவு சிறப்பாக எழுதினாலும்,பேசினாலும் வெளியே வரவிடாமல் தடுப்பதற்கு பார்ப்பார்கள். இல்லையெனில் நல்ல விஷயங்களை நீக்கிதான், அதன் ஃபைனல் அவுட்புட்டை வெளியிடுவார்கள். என்னுடைய துறையில், பெண் ஆர்.ஜே என்றால் கிசுகிசுக்கள் பேச வேண்டும், சினிமா, பெண்கள் சார்ந்த விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என எழுதப்படாத விதியே இருக்கிறது. எவ்வளவு அறிவுடன் வந்தாலும், அது மாதிரியான நிகழ்ச்சிகள்தான் வழங்குவார்கள். ஆனால் நான் அதை உடைத்தெறிய விரும்பினேன். சமூகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசுவது என முடிவு செய்தேன்.

அதேபோல் என்னுடைய ஷோவில் அரசியல், சமூகம் சார்ந்த பிரச்னைகளைப் பேசுவது, சமூக ஆர்வலர்கள், போராளிகளோடு பேசுவது என, என்னுடைய நிகழ்ச்சியை கட்டமைத்திருக்கிறேன். இதை தடுக்க பல பேர் பாலிடிக்ஸ் பண்ணினாலும், மிக கவனத்துடன் செயல்படுகிறேன். அதுமட்டுமல்ல பொதுவாக பெண்களுக்கு பிரைம் டைம் ஷோக்களை தொகுத்து வழங்க அனுமதி கிடைக்காது. பல முயற்சிகள், போராட்டங்களுக்கு பின்னால் அதையும் தட்டிப் பறித்திருக்கிறேன்.

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும்…இது மாதிரி தகுதியால் முன்னேறி வரும் பெண்களுக்கு எதிரி ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். அவர்கள் தனக்கான போட்டியாக ஆண்களை நினைக்காமல் ஒரு பெண்ணை முன்னிறுத்தி, அவளுக்கு எதிராக எல்லா பிரச்னைகளையும் கிளப்புகின்றனர். இது பெண்களுக்கானப் போராட்டத்தை மேலும் சவாலாக்குகிறது. பெண்கள் சாதிக்க, பெண்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

-ஏ.சிவரஞ்சனி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g