பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்கள்#Women’sDay

வீடு, அலுவலகம், பொது இடங்கள், சோஷியல் நெட்வொர்க்குகள், என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பது பாதுகாப்பிற்கு உதவும். இதோ அவை…

குற்றங்களே யதார்த்தம்!

எண்ணிக்கையில் சரிபாதியாக இருந்தாலும், பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் மட்டும் இரு மடங்காக இருக்கிறது. ஆம், முந்தைய பத்து ஆண்டுகளில் இருந்ததைவிட, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப் பதிவுகள் ஆணையத்தின், 2015-ம் ஆண்டுக்கான புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. பெண்களின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2012-ல் 41.7 சதவீதம் ஆக இருந்தது, 2015-ல் 53.9 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிராக, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 26 குற்றங்கள் நடப்பதாகவும், ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு புகார் பதிவாவதாகவும், இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை கூறுகிறது.

பாலியல் ரீதியாக, பணி தொடர்பாக, உளவியல் ரீதியாக என, அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் 40 சதவீதம், தெரிந்த நபர்களாலேயே ஏற்படுகின்றன. மொத்தக் குற்றங்களில் 33 சதவீதம் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர்/உறவினர்களால் தான் நிகழ்த்தப்படுகிறது. பெண்களுக்கு நம் சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான், மேலே சொன்ன புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த நிலையில், பெண்களின் உரிமைகளை காக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உதவும் சட்டங்களை அறிந்துகொள்வது, பல பிரச்னைகளில் இருந்து காக்கும். சில முக்கியமான சட்டங்களை e1life.com உங்களுக்காக பட்டியலிடுகிறது.

பெண்ணுக்கு சொத்தில் சம பங்கு

பொதுவாக பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க, இந்தியப் பண்பாட்டில் இடமில்லை. நகைகள் போட்டுத் திருமணம் செய்து வைப்பதோடு கடமை முடிந்தது என்றுதான் வசதியான பெற்றோரும் நினைக்கின்றனர். தான் சம்பாதித்ததாக இருந்தாலும் பூர்விக சொத்தாக இருந்தாலும், பெண் வாரிசுகளை உரிமையாக்க குடும்பத்தினர் துணிவதில்லை. இந்த அவல நிலையை மாற்றியது ‘இந்து வாரிசுரிமை சட்டம், 1956’.

அதன்படி, தன் குடும்பத்தினர் மற்றும் முன்னோரின் சொத்துகளுக்கு வாரிசாக பெண்களும் ஆகலாம். அதாவது தன் குடும்பத்தினரின் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு.

சொத்து தராமல் வீட்டார் ஏமாற்றினாலோ, குறைவாகக் கொடுத்தாலோ, சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தொடரலாம். ஷரியத் சட்டம் 1937ன் கீழ் இஸ்லாமியப் பெண்களும், இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-ன் கீழ் கிறிஸ்தவப் பெண்களும் சொத்துரிமை கோர முடியும். பொம்பளப்புள்ளைக்கு சொத்தெல்லாம் தர முடியாது யாராவது சொன்னால் சட்டப்படிப் பேசுங்கள்.

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், 2005

பிறந்ததோ, புகுந்ததோ பெண்கள் தங்கள் வீட்டுக்குள், குடும்பத்தினரால் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்கும் சட்டம் இது.  பெண்களுக்கு உடல், மனம், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக  நடக்கும் துன்புறுத்தல்களையும், வரதட்சணை மற்றும் சொத்து தொடர்பாக இழைக்கப்படும் கொடுமைகளையும் சரியாக வரையறுத்து, பாதிக்கப்படும் பெண்கள் தீர்வு தேட இச்சட்டம் உதவுகிறது.

இச்சட்டம் கணவர் வீட்டில் வாழும் உரிமையை நிலைநாட்டுகிறது. கணவரின் குடும்பம் பெண்ணை வாழ அனுமதிக்காத பட்சத்தில் பண உதவி, பாதுகாப்பான புகலிடம், மருத்துவ மற்றும் சட்ட சேவைகளை ஈடாக அளிக்க வகை செய்கிறது.

கன்னத்தில் அறைதல் முதல் கீழே தள்ளிவிடுதல், கைகளை முறுக்குவது, உதைப்பது, உடலை உலுக்கி பயமுறுத்துதல், தலைமுடியை பற்றி இழுத்தல், கண்மூடித்தனமாக தாக்குதல் போன்ற  பல்வேறு வன்முறை செயல்களை செய்யும் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கணவன், சகோதரன், மகன் அல்லது குடும்பத்தில் உடன் வாழும் எந்த ஆணும்,  வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கவும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்(2005) வகை செய்கிறது.

பணி புரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம், 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013)

வேலை செய்யும் இடத்தில் பெண்களை பாதுகாக்கவும், நேரடியாக அல்லது மறைமுகமாக பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் கீழ் பாலியல் கொடுமை என்பது தொடுதல், பாலியல் உறவுக்கு அழைப்பு விடுப்பது அல்லது துன்புறுத்துவது, பாலியல் ரீதியான பேச்சுகள், பாலியல் ரீதியான படங்களை காட்டுவது, உடலாலோ, பேச்சினாலோ தீய நடத்தையாலோ வன்புணர்வில் ஈடுபடுதல் என வரையறுக்கப்பட்டுள்ளது.

பணி இடத்தில் ஒரு பெண் துன்புறுத்தப்படும்போது, அவர் இச்சட்டத்தின் கீழ் முறையீடு செய்யலாம். பெண்கள் பணி புரியக்கூடிய அனைத்து அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என்று எல்லா நிலைகளிலும், ஐ.சி.சியை (ICC- Internal Complaints Committee) கட்டாயம் அமைக்க இந்த சட்டம் வலியுறுத்துகிறது.  பெரிய நிறுவனங்களில் 3 பேர் கொண்ட, ‘உள்கட்டமைப்பு புகார் குழு’ அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும், வீட்டு வேலை செய்யும் பெண்களும் பயன்பெற தாலுகா அளவில், ‘உள்கட்டமைப்பு புகார் குழு’ செயல்படுகிறது. அங்கு தரப்படும் புகார்களை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து, குற்றம் உண்மையாக இருக்கும் நிலையில், அதற்கேற்ப தண்டனை விதிக்கும்.

மகப்பேறு பலன்கள் உறுதிச் சட்டம், 1961, (திருத்தப்பட்டது 2017)

கருவுற்ற பெண்கள் பிரசவத்துக்கு முன்பும் பின்பும் முழு சம்பளத்துடன், 26 வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள வழி செய்கிறது இச்சட்டம். இந்த விடுப்பை அரசு ஊழியர்களுக்கு 9 மாதமாக அதிகரித்துள்ளது தமிழக அரசு.

மேலும் கிரெஷ் வசதி, வாய்ப்பிருந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி, போன்ற அம்சங்களும் புதிய சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, மகப்பேறுக்கு முன்பும் பின்பும் கடினமல்லாத வேலையை அளிக்கும்படி கோர உரிமையுண்டு.

சம ஊதியமும், குழந்தைகள் பாதுகாப்பும்

ஒரே மாதிரியான வேலைக்கு, ஆண்களுக்கு இணையான ஊதியத்தைப் பெண்களும் பெற உரிமையுண்டு என்கிறது ‘சம ஊதியச் சட்டம் 1976’.

30 பெண் ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மையம் அவசியம் என்கிறது, ‘தொழிற்சாலைகள் சட்டம், 1948’.

திருமணம் & விவாகரத்து உரிமைகள் சட்டங்கள்

உடலாலும் மனதாலும் துன்புறுத்துவது, கணவனுக்கு மனநல பாதிப்பு மற்றும் மனநோய், கணவன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்வது, மனைவியுடன் உடலுறவை தவிர்த்தல், வேறொருவரை திருமணம் செயதல் அல்லது உறவு வைத்திருத்தல், பிரிந்து செல்லுதல், தொழுநோய், பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல், துறவறம் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக விவகாரத்து கோர சட்டம் அனுமதிக்கிறது. திருமண உறவை மேலும் தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கருதும் கணவன்- மனைவி, ஒருமித்து விவாகரத்து கேட்கலாம்.

இந்து திருமணச் சட்டம் 1955-ன் கீழ் இந்துக்களும், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் 1869-ன் கீழ் கிறிஸ்தவர்களும், ஷரியத் மற்றும் இஸ்லாமிய திருமணங்கள் ரத்துச் சட்டம் 1939-ன் கீழ் இஸ்லாமியர்களும், மத கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன் கீழும், விவாகரத்துக் கோர வழியுண்டு.

குடும்பநல நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வழங்கும். இதனால், ஒத்துவராத வாழ்க்கையை விட்டு விலக முடியும். முடிந்தவரையில் இருவரும் இணைந்து வாழ ஆலோசனை வழங்கப்படும். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நீதிமன்றம் விவாகரத்து வழங்கும்.

இணையம் & சமூக வலைதளங்களில் பெண்களை பாதுகாக்கும் சட்டப் பிரிவுகள்

இணையதளம் வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கபப்டுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 (E), மற்றும் பிரிவுகள் 67, 67 (A) ஆகிய சட்டப்பிரிவுகள் வழி செய்கின்றன. பெண்ணின் அந்தரங்கத்தை, அவரது தனிமையை இணையம் வழியாகப் பகிர்ந்து கொள்ளுதல்,  சுதந்திரத்தில் தலையிடுதல், அதை மற்றவர்களும் பார்க்க, பகிர்ந்துகொள்ள வழி செய்தல், பாலியல் உணர்வுகளை தூண்டுதல் ஆகிய செயல்களில் ஈடுபடுவோருக்கு, ரூ 2 முதல் 5 லட்சம் வரையில் அபராதம் விதிப்பதோடு, 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.  தொடர்ந்து இந்த குற்றத்தை செய்தால், 7 வருட சிறை, ரூ 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

சேர்ந்து வாழும் (லிவ்-இன்) பெண்கள் மற்றும் இரண்டாம் தாரமாக இருக்கும் பெண்களின் உரிமைகள்

திருமணம் என்கிற வாழ்க்கை ஒப்பந்தத்தை மட்டுமே சட்டப்பூர்வமானது, செல்லத்தக்கது என சட்டம் அங்கீகரித்துள்ளது. வயது வந்த ஆணும் பெண்ணும் மனம் ஒத்து தம்பதியராக வாழ்ந்து வந்தாலும், திருமண உறவுக்கு கிடைக்கும் முழுமையான உரிமைகள் சேர்ந்து வாழ்பவர்களுக்கு (லிவ் – இன் உறவு) கிடைப்பதில்லை.  எனினும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தையின் உரிமையைக் காக்கும் வகையிலும், சில பாதுகாப்பு ஏற்பாடுகளை சட்டம் அளிக்கிறது. அதன்படி, சேர்ந்து வாழ்கையில், ஆண் துணைவரால் பாதிக்கப்படும்போது பாதுகாப்பு பெற, ‘குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005’ உதவுகிறது.

இப்படிபட்ட உறவின் மூலம் பிறந்த குழந்தைக்கு பிரிக்கப்படாத மூதாதையர் சொத்தில் உரிமை இல்லையென்றாலும், பெற்றோரின் சுய வருமானத்தில் அவர்களுக்கு உரிமையுண்டு. இக்குழந்தைகளை சட்டம் அங்கீகரிக்கிறது.

மேலும், சேர்ந்து வாழும் உரிமையை தடுக்க இயலாது என்றும், சேர்ந்து வாழ்பவர்களுக்கு உரிய பாதுகாப்பையும், உரிமைகளையும் வலுப்படுத்த சட்டம் கொண்டு வரவேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு சேர்ந்து வாழும் பெண்களுக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமை வேண்டும் எனவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

ஜீவனாம்சம் பெறும் உரிமை

தாய், மனைவி, மகள் என எந்த உறவில் இருந்தாலும், தங்களது நெருங்கிய ஆண் உறவிடமிருந்து வாழ்வாதாரத்திற்கு பண உதவிப் பெற, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 125, 126, 127, 128 பிரிவுகள் வழிகாட்டுகின்றன. இஸ்லாமியப் பெண்கள், ‘இஸ்லாமியப் பெண்கள் உரிமைக் காப்பு மற்றும் விவாகரத்துச் சட்டம் 1986’-ன் கீழ் ஜீவனாம்சம் கோரலாம்.

தன்னைத்தானே பராமரிக்க முடியாதபோது, தனக்கு உதவும் நிலையில் வசதியாக இருக்கும் ஆண் வழி உறவு, அதைச் செய்யத் தவறினால் வழக்குத் தொடரலாம்.  வயதான தாய், தன்னை கவனிக்காத மகன் மீது கூட வழக்கு தொடுக்க முடியும். குடும்பநல நீதிமன்றம் அல்லது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்யலாம்.

பிற முக்கிய சட்டங்கள்

பெண்களை ஈவ் டீஸிங்கில் இருந்து காப்பாற்ற, கேலி-வதைத் தடுப்புச் சட்டம், ஆள்கடத்தல் வியாபாரத் தடுப்புச்  சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், பெண்களை இழிவாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டம்  போன்றவை முக்கியமானவை.

நிர்பயாவிற்கு நேர்ந்த கொடுமையால் – இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சியியல் சட்டம் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏதுவான சட்டத்  திருத்தங்கள் கொண்டுவரப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

இந்த சமூகத்தால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள், தங்களை காத்துக்கொள்ள சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை பெற்றிருக்க வேண்டும். மகளிர் நல ஆணையம் மற்றும் சமூக நல ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்தும் தெரிந்துகொள்வது உரிய நேரத்தில் கைக்கொடுக்கும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g