விடுதலை அளிக்கும் சோலோ பயணம்!

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் ஒருமுறையேனும் தனித்து பயணிக்க வேண்டும். ஆம், பெண்கள் தங்களுடைய கட்டுகளிலிருந்து விட்டு விடுதலையாவதற்கும், தனக்கான திறமைகளை வெளிக் கொணர்வதற்கும், தான் யார் என்பதைப் புரிந்து கொள்வதற்கும், தனது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், எண்ணங்களை விசாலமாக்குவதற்கும், இந்த சோலோ பயணம் திறவுகோலாக இருக்கும்.

ஒவ்வொரு பெண்ணின் மனநிலையையும், விருப்பத்தையும் பொறுத்து பயணம் செல்லும் இடங்களின் தேர்வும் அமைகிறது. இதில், அமைதியான இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கொண்டாட்டங்கள் நிறைந்த இடங்கள், சாகசங்கள் நிறைந்த இடங்கள் சிலவற்றை உங்களுக்காக அறிமுகப்படுத்துகிறோம். எந்த இடத்துக்கு சென்றாலும், அது நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பது முதன்மையானது. எனவே பாதுகாப்பான இடங்கள் என்பதை பொது முக்கியத்துவம் வாய்ந்த காரணியாக வைத்து, இவ்விடங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.

அமைதியைத் தேடி…
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின், ஜிரோ, சுற்றுலாப் பயணிகளால் அதிகம் கைகொள்ளப்படாத கனவு பிரதேசம். சுற்றிலும் மலைகளின் அழகு, பைன் மரங்கள், மீன் பண்ணைகள், நெல் வயல்கள், எங்கு நோக்கிலும் பசுமை, இவற்றுடன் நீங்கள் செய்ய வேண்டியது, அன்பும், எளிமையும் மிகுந்த அபாடனி பழங்குடி மக்களின் குடியிருப்பில் அமைதியாக பொழுதைக் கழிப்பதுதான்.

அடுத்து நாங்கள் பரிந்துரைக்கும் அமைதிப் பிரதேசம், சீன இமயமலைப் பகுதியில் உள்ள யுபெங் கிராமம். இது இயற்கை எழிலும், அமைதியும் நிறைந்தது. யுபெங் கிராம மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வாஞ்சையுடன் வரவேற்கின்றனர். பல இளம் கிராமவாசிகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பதால், ஆர்வத்துடன் உங்களுடன் பழகி உபசரிப்பார்கள். இந்த கிராமத்தை, நடைபயணமாகவோ அல்லது குதிரை மூலமாகவோதான் அடைய முடியும். அதுதான் யுபெங் பயணத்தின் சிறப்பே.

மற்றொரு அமைதிப் பிரதேசம் அமெரிக்காவின் மேற்கில் பசிபிக் கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள். பகல் முழுதும் புன்னகைக்கும் சூரிய ஒளி, படுத்து புரள வெண்மணல்வெளி, துள்ளி விளையாட பசுமை மலைகள், எப்போதும் பக்கபலமாக நட்போடு ஊர் மக்கள்… வேறு என்ன வேண்டும் தனிமைப் பயணம் மேற்கொள்ள? அப்படிப்பட்ட இடம்தான் அமெரிக்காவின் சொர்க்கம் என்றழைக்கப்படும் ஹவாய் தீவுகளில் உள்ள ஆஹு தீவு.

வரலாற்றைப் பின்தொடர்ந்து…
வரலாற்றின் தடத்தைத் தேடி புறப்படுபவர்களுக்கு, சோலோ டிராவல்தான் சிறந்த சாய்ஸ். ரோம் நகரம், பழங்கால ரோமானியப் பேரரசைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டடங்களையும், அருமையான மக்களையும், காதல் வயப்படுத்தும் டெலீஷியஸ் உணவு வகைகளையும் கொண்டது. இது, தனிமனிதரின் ஐம்புலன்களையையும் சுறுசுறுப்பாக்கும். பாந்தியான், ரோமன் போரம், கொலீசியம், வாட்டிகன் சிட்டி, செயின்ட் பீட்டர்ஸ் பாஸிலிகா ஆகியவை நீங்கள் தவறவிடக்கூடாத இடங்கள்.
இஸ்தான்புல், துருக்கியின் கலாச்சார, பொருளாதார, வரலாற்று சிறப்புமிக்க நகரம். கிரேக்க, ரோமானிய, எகிப்தியப் பேரரசுகள் இந்நகரத்தை ஆட்சி செய்தனர் என்பதால் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் இருக்கும். புளூ மாஸ்க் என்று அழைக்கப்படும் சுல்தான் அகமது பள்ளிவாசல், ஒட்டோமன் சுல்தான் குடும்பத்தின் இல்லமாக இருந்த டாப்கபி பேலஸ், ஜொலிக்கும் மொசைக் கற்களால் உருவாக்கப்பட்ட ஹாகியா சோபியா அருங்காட்சியகம், வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரான்ட் பஜார், 336 மார்பிள் தூண்களைக் கொண்ட பாசிலிகா சிஸ்டர்ன் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்கள்.

கொண்டாட்டம்.. கொண்டாட்டம்..
கொண்டாட்டம் என்பது ஒரு உற்சாக மனநிலை மட்டுமே. அதற்கு துணை தேவை இல்லை என்று எண்ணும் பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய இடங்கள் இவை. அமெரிக்காவின் சூதாட்ட நகரம் லாஸ் வேகாஸ். இது கேம்பிளிங், பார்ட்டி, ஆட்டம் – பாட்டம் என கொண்டாடித் திளைக்கும் நகரம். திறந்தவெளி நீச்சல் குளத்தில் நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசையுடன் குளித்துக் கொண்டாடலாம். லாஸ் வேகாஸ், வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து வருபவர்களை மகிழ்ச்சியுடன் வழியணுப்பும் நகரம்.

கொண்டாட்டங்கள் நிறைந்த நகரங்கள் அனைத்தும், தூங்கா நகரங்களே. ஆசியாவின் தூங்கா நகரம் என்றழைக்கப்படும் பாங்காக், குதூகலமான நகரம். ஆண்டு முழுவதும் உலகின் பல நாடுகளில் இருந்து, பல லட்சம் சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். இங்குள்ள கடைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. தாய்லாந்து தெருவோரக் கடைகளில் சுவையான உணவுகளை உண்டு மகிழலாம். இசையுடன் நடனமாடி இன்பமாக பொழுதைக் கழிக்கலாம்.

சாகசம்.. சகஜம்..
சாகசப் பயணம் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சாகசங்கள் செய்ய ஒரு தனி பேஷன், ஒரு த்ரில் மனநிலை இருந்தால்தான் முடியும். அதுபோன்ற இடங்களுக்கு செல்ல விரும்புவோர் செல்ல வேண்டிய இடங்கள் இவை.

நியூசிலாந்து நாட்டில் உள்ள குயின்ஸ்டவுன் பகுதியில் மலையேற்றம், மலையிலிருந்து பள்ளத்தாக்கில் கயிறு கட்டி குதித்தல், ஆற்றுக்குள் குதித்தல், இரண்டு மலைகளுக்கிடையே கயிற்றில் தாவிச் செல்லுதல், காட்டாற்றில் ஜெட்போட் பயணம் ஆகிய சாகசங்களில் ஈடுபடலாம். நியூசிலாந்தின் சவுத் ஐலாண்டில் உள்ள குயின்ஸ்டவுனின் கவாரூ பாலம் இதற்காகவே உருவாக்கப்பட்டது.

ஸ்கூபா டைவிங் என்பது ஆழ்கடல் அதிசங்களைப் பார்ப்பது. கடலுக்குள் ஒரு தரை உள்ளது. அந்த தரையில் கடல்வாழ் தாவரங்கள் உள்ளன. கடல் முழுவதும் பலவகையான வண்ண வண்ண சிறிதும், பெரிதுமான மீன்கள் உள்ளன. நீருக்குள் பல ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள ஒரு புதிய உலகத்தைப் பார்க்க நீங்கள் வெகுதூரம் செல்லத் தேவையில்லை. கண்ணாடி போன்ற நீரும், வெண்மணலும், பளிச்சிடும் பவளப்பாறைகளையும் கொண்ட அந்தமான் சென்றாலே போதும். அதுமட்டுமல்லாமல், ஸ்நோர்கிளிங், ஜெட் ஸ்கையிங் போன்ற மற்ற த்ரில் விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g