அமைதியான வாழ்க்கைக்கு… அழகான ஜென் இன்டீரியர்!

அமைதியான வாழ்க்கைக்கு… அழகான ஜென் இன்டீரியர்!

வாழ்வின் எளிமையை உணர்த்துகிறது ஜென் தத்துவம். அதன் அடிப்படையில் இயற்கையுடன் ஒன்றுவது, எப்போதும் விழிப்புடன் இருப்பது, எதிலும் எளிமை, இந்த பண்புகளை நாம் வாழும் இடங்களில் வெளிப்படுத்துவதுதான் ஜென் இன்டீரியார்.  

அவசரகதியான வாழ்க்கைமுறையில் சிக்கிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறை, வீட்டில் நுழைந்தவுடன் மன அமைதியைத் தேடுவதால், இந்த ஜென் அலங்காரத்தை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். வீட்டில் ஜென் அலங்காரத்தைப் பின்பற்ற நினைப்பவர்களுக்காக e1life.com சொல்லும் எளிய ஆலோசனைகள்.

இயற்கை வெளிச்சம் வீட்டை ஆளட்டும்!

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமாக வெளிப்படைத்தன்மையை ஜென் தத்துவம் முன்வைக்கிறது. அதில் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. அதனால், இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி வீட்டை வடிவமைக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, வரவேற்பறையில் கண்ணாடி பேனல்களான சுவர்களை அமைப்பது, இயற்கையான வெளிச்சத்தை அறைக்குள் கொண்டுவரும். வீட்டின் ஜன்னல்கள், கதவுகளையும் கண்ணாடியில் அமைப்பதால் சூரிய வெளிச்சம் தாராளமாக வீட்டில் விளையாடும். வெளிச்சம் குறைவாக தேவைப்படும் போது, திரைச்சீலைகளை பயன்படுத்தி அறையின் வெளிச்சத்தை குறைத்துக் கொள்ளலாம்.

ஜென் வீட்டு அலங்காரத்தை இப்போது உலக அளவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஜென் அலங்காரத்துக்கு என்று கடுமையான விதிகள் எல்லாம் கிடையாது. குறைவான பொருட்கள், எளிமை, தூய்மை என மூன்று அம்சங்கள் தான் அடிப்படைகளாக செயல்படுகின்றன. ஜென் தத்துவத்தின் வெளிப்பாடாக உங்கள் வீட்டு உள் அலங்காரம் மாறும்போது,  அது வீட்டையே ஜென் தியானக்கூடம் போல மாற்றிவிடும்.

சுஜாதா மனோகரன், இன்டீரியர் டிசைனர்.

மன அமைதி தரும் படுக்கை!

ஜென் வடிவமைப்புகளில் மேடைப் படுக்கைகள் ஒரு பொதுவான அம்சம். இந்தப் படுக்கை தரைத்தளத்தில் வைக்கும்படி மரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் படுத்து உறங்கும்போது, உடலுக்கு இதமும், மனதுக்கு அமைதியும் கிடைக்கும். தரைக்கும் நாம் படுக்கும் படுக்கைக்கும் சரியான இடைவெளி இருந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இந்த மேடைப் படுக்கைகள் அதற்கு உத்ரவாதம் அளிக்கின்றன. படுக்கையறையில் தேவையற்ற பொருட்களை வைப்பது, ஆடம்பரமான அலங்காரம் போன்றவை ஜென் வீட்டு அலங்காரத்திற்கு எதிரானது. வீட்டை எளிமையாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வதால் இயற்கை வாசம் செய்யும் இடமாக, நமது வீடு அமைகிறது.

நிம்மதி தரும் நீரூற்று!

வீட்டில் நீராலான அமைப்பு ஒன்றை நிறுவலாம். வீட்டுக்குள் ஓடும் நீரின் சத்தம் கேட்பது ஒருவித மென்மையான இசையை உருவாக்கும். இந்த ஓடும் நீரின் இசை மனதை அமைதிப்படுத்தும். ஒருவேளை, வீட்டின் மத்தியில் நீராலான அமைப்பை உருவாக்க முடியவில்லையென்றால், மின்சாரத்தில் இயங்கும் சிறிய உட்புற நீருற்றுகள் அமைக்கலாம். வரவேற்பறை, முற்றம் போன்ற இடங்களில் இந்த நீருற்றை அமைக்கலாம்.

மகத்தான மண்ணின் வண்ணங்கள்!

ஜென் தத்துவங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இடத்தில் வசிப்பது அமைதியான சூழலில் வசிக்கும் உணர்வை ஏற்படுத்தும். இந்த அமைதியை உருவாக்க வெள்ளை, சாம்பல், இளஞ்சந்தனம், இளஞ்சிவப்பு போன்ற மண்ணின் வண்ணங்கள் (earthy colors) மற்றும் நடுநிலை வண்ணங்களை பயன்படுத்தலாம்.  கவனச் சிதறல்களைத் தவிர்க்கும் பண்புகள் இந்த நிறங்களுக்கு உண்டு. சுவர்களின் வண்ணங்களில் மட்டும் இதைப் பயன்படுத்தாமல் அறைக்கலன்கள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் போன்றவற்றுக்கும் இந்த மண்ணின் வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.

எளிமையின் அழகே பேரழகு!

எளிமையான வாழ்க்கையே ஜென் தத்துவத்தின் முக்கியக் கோட்பாடு. தேவையற்ற பொருட்கள் அனைத்தையும் அகற்றிவிடுவது, வீட்டில் அசுத்தமான இடங்கள், எதிர்மறையான எண்ணங்கள் உருவாவதைத் தடுக்கும். தேவையில்லாத பொருட்கள் இடம்பெறாமல் இருக்கும் போது, வீட்டில்  அழகியல் அம்சம் அதிகரிக்கும்.

‘மினிமலிசம்’ என்னும் இந்த உச்சபட்ச எளிமைக் கோட்பாட்டை வீட்டில் நிறுவுவதற்கு, வீட்டில் அடைந்துகிடக்கும் தேவையற்ற பொருட்களைக் களைய வேண்டியது அவசியம். பயன்படுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை தேவை இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடலாம். எப்போதாவது தேவைப்படும் மற்ற பொருட்களை பரன்மீது எடுத்து அடுக்கி வைத்துவிடலாம். இதனால், தேவையற்ற பொருட்கள் வீட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதைத் தவிர்க்கலாம்.

பசுமையின் தாக்கம் எப்போதும் இருக்கட்டும்!

இயற்கையுடன் இணைந்து வாழ்வது ஜென் தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. அதனால், வீட்டுக்குள் ஜென் மனநிலையை கொண்டுவருவதற்கு, செடிகள், மரங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். மணல், கூழாங்கற்கள், மென்பாறைகள், மரம், மூங்கில் போன்றவற்றையும் வீட்டுக்குள் கொண்டுவரலாம். சமையலறை, ஜன்னலோரம் போன்றவற்றையும் செடிகள் வளர்க்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அம்சங்கள் வீட்டில் இயற்கையின் மனம் எப்போதும் வீசுவதற்கு உதவும்.

– தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g