இந்தியாவின் சுவை: கலக்கல் கர்நாடகா

தமிழ்நாட்டு உணவுகளை போலவே, கர்நாடகாவின் உணவுகளும் தனித்துவமானவை. மாறுபட்ட புவியியல் அமைப்புகள், பல்வேறு கலாசாரங்களின் கலப்பு போன்ற காரணங்களால், இடத்துக்கு இடம் உணவுகளின் சுவையும் தன்மையும் மாறுபடுகிறது. அசைவம் என்றாலும், சைவம் என்றாலும், இந்தியாவின் சுவைகளில் தனித்துத் தெரியும் கர்நாடகாவின் சுவை.

நம் நாட்டில், இந்திய உணவு என்று எதையும் அறுதியிட்டுக் சொல்ல முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பகுதியிலும், உணவு தயாரிக்கும் முறை சிறிது வித்தியாசத்துடன் காணப்படுகிறது. ஒவ்வொரு உணவு வகையும், புவியியல் சூழல் சார்ந்து தயார் செய்யப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் சைவ மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மக்கள் சமவிகிதத்தில் உள்ளனர் எனலாம். கர்நாடகாவில் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, மக்கள் எந்த வகையான உணவு சாப்பிடுகிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும். பெங்களூரு, மங்களூரு, தார்வாட் ஆகிய பகுதிகளில் அதிகமாக சைவ உணவு சாப்பிடுகின்றனர். புகழ்பெற்ற சைவ உணவுகளான உடுப்பி உணவுகளின் தோற்றம் கர்நாடகாவில்தான் உருவானது. கர்நாடகாவின் துளு நாடு பகுதியில் உள்ள ஒரு ஊரின் பெயரைக்கொண்டு, உடுப்பி உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

கர்நாடக மாநில உணவுகள் என்றால் தோசை, சாம்பார், உடுப்பி உணவுகள், காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் பிசிபெலெபாத் இல்லாமல் முற்றுப்பெறாது. கன்னடிகா ஊட்டா எனப்படும் தாலி, மிகவும் புகழ்பெற்ற உணவு வகையாகும். சாதம், சாம்பார், போண்டா, ஊறுகாய், இனிப்புகள், நெய், சாறு, கூட்டு ஆகியவை இதில் பரிமாறப்படுகின்றன. இந்த உணவுகள் அனைத்தும் வாழை இலையில் பரிமாறப்படுவதால், மேலும் சுவையைப் பெறுகின்றன எனலாம். கர்நாடகாவின் வடக்குப் பகுதி உணவு முறைகள், தெற்குப் பகுதியில் இருந்து வித்தியாசப்படுகின்றன.

ரொட்டி, ராகி போன்ற உணவுகள், வடக்கு கர்நாடகாவில் தயாரிக்கப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலம், வடக்கு எல்லையில் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். மைசூர் மசாலா தோசை, நீர் தோசை, கோழிச்சாறு, மைசூர்பாக் ஆகியவை கர்நாடகாவின் புகழ்பெற்ற உணவுகளாகும். அதேபோன்று, உடுப்பி உணவுகளில் ரசம், ரவா இட்லி, ஆலு கெட்டா, முறுக்கு, பால் பாயாசம் ஆகியவை பிரசித்தி பெற்றவை. கடல் உணவுகளையும் கர்நாடகா மக்கள் விரும்பி உண்கின்றனர். கடலோரம் வசிக்கும் மக்களில், இறைச்சி சாப்பிடாதவர்கள் கூட மீன் மற்றும் பிற கடல் உணவுகளை சாப்பிடுகின்றனர். பல பிளேவர்களில் உணவு தயாரிப்பதே, இவர்களின் தனிச்சிறப்பு என கூறப்படுகிறது.

கர்நாடகாவின் சில புகழ்பெற்ற உணவு வகைகள்:

நீர் தோசை

கர்நாடகாவின் துளு பகுதியை சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற உணவு வகையான நீர் தோசை, மாநிலம் முழுவதும் மிகவும் பிரபலம். அரிசியை 5 மணி நேரத்திற்கு ஊறவைத்து, அரைத்து, நீர் தோசை தயார் செய்யப்படுகிறது.

மற்ற தோசைகள் செய்வதற்கு மாவினை புளிக்க வைக்க வேண்டும். ஆனால், நீர் தோசை செய்வதற்கு மாவை புளிக்கச் செய்வதில்லை. சட்னி, சாம்பார், தேங்காய்ப் பால், குருமா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குண்டபுரா கோழிச்சாறு

கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் சமைக்கப்படும் புகழ்பெற்ற உணவு. கிரேவி போன்று தயாரிக்கப்படும் இந்த டிஷ் உடன், நீர் தோசை, ரொட்டி, சாதம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சிக்கன், தக்காளி கிரேவி, தேங்காய் மற்றும் நறுமணமுள்ள மசாலாக்கள் சேர்த்து, கர்நாடகா ஸ்டைலில் சமைக்கப்படுகிறது. மங்களூர், உடுப்பி, குண்டபுரா பகுதி மக்களிடையே புகழ்பெற்ற உணவு என்பதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

பிசி பெலே பாத்


காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் சாப்பிட உகந்த சத்தான சைவ உணவு. பல வகையான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் அரிசி சேர்த்து சமைக்கப்படுகிறது.

அப்பளம் அல்லது ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால், பிசிபெலே பாத் கூடுதல் சுவையாக இருக்கும்.

 

ஆலு கெட்டா


உருளைக்கிழங்கை வேக வைத்து, பிசைந்து தயாரிக்கப்படும் எளிமையான உணவு. இது எளிய, ஆனால் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ் உணவாகும்.

வேக வைத்த உருளைக்கிழங்குடன் மசாலாக்கள், கருப்பு உளுந்து மற்றும் தக்காளி சேர்த்து இந்த டிஷ் சமைக்கப்படுகிறது. பூரி அல்லது முறுகலான தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கேன் ரவா பிரை

மங்களூர் பகுதியில் தயாரிக்கப்படும் புகழ்பெற்ற மீன் உணவு. மீனை இஞ்சி, பூண்டு, பேஸ்ட், எலுமிச்சை சாறு, முட்டை, சோள மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்ந்த கலவையில், 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.

நன்கு ஊறியதும், மீனை ரவாவில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கேன் ரவா பிரை தயார். கர்நாடகாவின் சுவையான மற்றும் தனித்துவ மீன் உணவு இதுவாகும்.

மைசூர் பாக்

தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தியர்கள் வாழும் எல்லா இடங்களிலும் கிடைக்கும் மைசூர் பாக்கின் பிறப்பிடம், கர்நாடகா மாநிலம்.

மைசூர் அரசவையில் இருந்த சமையற்காரர், சர்க்கரை பாகினால் இந்த இனிப்பு உணவை செய்ததால், இதற்கு மைசூர் பாகு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. நெய், கடலை மாவு, சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து தயார் செய்யபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g