படுக்கையறைக்கு பொருத்தமான வெளிர் நிறங்கள்

படுக்கையறைக்கு பொருத்தமான வெளிர் நிறங்கள்

உறங்குவதற்கு, இளைப்பாறுவதற்கு, அந்தரங்கத்துக்கு என, மற்ற அறைகளைவிட ஒரு நாளில் தொடர்ச்சியாக நாம் அதிக நேரம் செலவிடுவது படுக்கையறையில் தான். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட படுக்கையறைக்கு, உட்புறச் சுவர் முதல் உள் அலங்காரம் வரை, படுக்கை விரிப்பு முதல் திரைச்சீலை வரை, சரியான வண்ணங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

“நிம்மதியான படுக்கையறையை உருவாக்க சாம்பல், நீலம், பச்சை, ஊதா போன்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வண்ணங்கள் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்னைகளை குறைக்க உதவும். அத்துடன், உங்கள் படுக்கையறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தையும் கொடுக்கும்” என்கிறார் ஆர்க்கிடெக்ட் விஷ்ணு.

வித்யாசமானது டார்க் கிரே – நீலம்

படுக்கையறையின் பிரதான சுவருக்கு ஏற்றது அடர் சாம்பல்(டார்க் கிரே) -நீலம்.  அறைக்குள் அமைதியான அதிர்வலைகளை உருவாக்க இந்த நிறம் பெரிதும் உதவும். இந்த நிறத்தை உங்கள் அறைக்குத் தேர்ந்தெடுக்கும்போது, ஒரு பெரிய கலைப்பொருளையும் சேர்த்துத் தேர்ந்தெடுங்கள். அடர் சாம்பல்-நீலமாய் இருப்பதால், அறைக்குள் வெளிச்சம் ஊடுருவுவதற்காக வெள்ளை நிறத்தையும் பயன்படுத்த வேண்டும். அதனால், கூரையில் வெள்ளை நிறம் கொடுக்கலாம். அத்துடன், வெள்ளை நிற மெத்தைகள், தலையணைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

அழகானது வெளிர் சாம்பல்

மென்மையான வண்ணங்களை விரும்புபவர்கள், வெளிர் சாம்பல் நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். பிரதான சுவர் வெளிர் சாம்பல் நிறத்தில் இருப்பதால், கூரையில் வெள்ளை நிறத்துடன் சாம்பலையும் கலந்து அடிக்கலாம். இதனால் அறைக்குக் கூடுதல் அடர்த்தி கிடைக்கும். இந்த அறையில் பொருட்களை அடர்-சாம்பல், மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கலாம்.

அமைதிப்படுத்தும் ஐஸ் ப்ளூ

இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தும்போது, அது மனதை இதமாக்குகிறது. வீட்டுக்குள் நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தி ரிலாக்ஸ் ஆக்குகிறது. அந்த வகையில், ஸ்கை ப்ளூ நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அதிலும் லைட் ப்ளூவாக தேந்தெடுப்பது படுக்கையறைக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும். ஐஸ் ப்ளூ நிறமும் அறைக்கு நடுநிலையான தோற்றத்தைக் கொடுக்கும். மேலும், ஐஸ் ப்ளூவுடன் எந்த நிறத்தையும் இணைக்கலாம். சாக்லெட் பிரவுன், சாம்பல் போன்ற நிறங்களுடன் இணைப்பது ஏற்றதாக இருக்கும்.

மென்மையான வெளிர் பச்சை

அமைதிக்கும், மனநிறைவுக்கும் வெளிர் பச்சை ஏற்றது. இந்த நிறத்தையும் நடுநிலை டோனில் படுக்கையறைக்குப் பயன்படுத்தலாம். பசுமையான மனநிலை என்றைக்கும் இருக்க, இந்த பச்சை நிறங்களின் ஷேடுகள் உதவுகின்றன. இந்த நிறத்தை மரப்பொருட்களுடன் பயன்படுத்துவது அறைக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும்.

லயிக்க வைக்கும் லாவண்டர்

வெளிர் லாவண்டர் நிறமும் படுக்கையறைக்குப் பொருத்தமாக இருக்கும். இந்த நிறத்துடன், அடர் சாம்பல், கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களையும் சேர்த்து அறையில் பயன்படுத்தலாம். ஊதாவின் எல்லா நிறச் சாயல்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இந்த நிறத்துக்குப் பொருந்தும்படி, தரைவிரிப்புகளைச் சாம்பல் நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g