நீங்கள் அறிந்திராத அசத்தல் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்

நீங்கள் அறிந்திராத அசத்தல் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்


ஸ்மார்ட்போன்களின் சிறப்பே அவற்றிலுள்ள ஆப்ஸ் தான். ஆனால், போட்டோஷாப், சோஷியல் நெட்வொர்க், விளையாட்டுகள், செய்திகள் ஆப்ஸ் தவிர்த்து, வேறு ஆப்கள் எதுவும் நம் கவனத்துக்கு வருவதில்லை. ஆப் ஸ்டோர்களில் உள்ள மில்லியன் கணக்கான ஆப்களில், நம் தினசரி வாழ்க்கைக்கு உதவும் அத்தியாவசியமான ஆப்கள் நிறைய உண்டு. அவற்றில் மிகவும் அசத்தலான, பயன்மிக்க சில ஆப்களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம்.

மொபைலை தொடாமலே இயக்கலாம்

உங்கள் ஸ்மார்ட்போனில் கை அசைவுகள் மூலம் கட்டுப்படுத்த சில அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த சைகைக் கட்டுப்பாட்டை எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது. பல சூழ்நிலைகளில் இந்த சைகைக் கட்டுப்பாடு முறை கைகொடுக்காது. ஆனால் அதை வேவ் கன்ட்ரோல் (Wave Control) (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) ஆப் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.  இந்த ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிக்கொண்டால், சமையல் செய்யும்போது அல்லது வேறு எந்த வேலை செய்துகொண்டு மொபைலை தொடமுடியாத சூழ்நிலையில் தொடாமலே இயக்கலாம். இதனால் மொபைலை ஈரப்படுத்துவதும், அழுக்குப்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது. ஃபோனை தொடாமலேயே இசை மற்றும் வீடியோக்களை பிளே செய்யவும், அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் உதவும் இந்த ஆப், அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஆப் தானே! 

மொபைல் இல்லாமலே மெஸேஜ் அனுப்பலாம்

மிகவும் தேவையான சமயத்தில் உங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டதா.? உங்கள் நண்பர் அல்லது அலுவலகப் பணியாளருடன், நீங்கள் அவசரமாக தொடர்பு கொள்ள வேண்டுமா? கவலையை விடுங்கள். மைட்டி டெக்ஸ்ட் Mightytext என்கிற டெக்ஸ்டாப் ஆப் இதற்கு உதவும். கம்ப்யூட்டர்  மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஆப், உங்கள் இ-மெயிலில் இருந்து எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்-களை நிர்வகிக்க உதவுகிறது.  இந்த ஆப் மூலமாக, உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து செய்திகளும், உங்கள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். மேலும் உங்கள் இ-மெயில் இன்பாக்ஸிலும் அவற்றை பார்வையிட முடியும். 

பாதுகாப்பான பயணத்துக்கு உதவும்

இரவு நேரம், மழை, மூடுபனி, பனிப்பொழிவு போன்ற வெளிச்சம் குறைந்த சூழ்நிலைகளில் சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினம். வாகனத்தில் இந்த மாதிரி சூழ்நிலையில் உங்களுக்கு உதவுகிறது, ஹட்வே (HUDWAY) என்னும் ஆப்.  எதிரிலிருக்கும் சாலை தெளிவாகத் தெரியாதபோதும், எவ்வளவு தூரத்தில் வளைவுகள் இருக்கின்றன, எவ்வளவு வேகத்தில் என்றால் எவ்வளவு நேரத்தை குறிப்பிட்ட இடம் வரும், ஆபத்தான வளைவுகளுக்கு முன்பாக எப்போது வேகத்தைக் குறைப்பது என ஒளி வடிவிலும், ஒலி வடிவிலும் எச்சரிக்கை மற்றும் குறிப்புகளை வழங்கும். இந்த ஆப்பை திறந்து, உங்கள் தொலைபேசியை வாகனத்தின் டாஷ்போர்டில் வைத்தால் போதும், உங்களுக்குத் தேவைப்படும் எல்லா தகவல்களையும் இந்த ஆப் கொடுக்கும். வாகனத்தின் வேகம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளை காட்சிப்படுத்தும்.

தூரத்தை அளவிடலாம்

பார்ப்பதற்கு, இதெல்லாம் ஒரு மேட்டரா என்று தோன்றலாம். ஆனால் ஒருமுறை நீங்கள் இதை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு புரியும். நீங்கள் ஒரு பொருளை அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை, துல்லியமான அளவிட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு மெஷர்மென்ட் டேப் தேவையில்லை;  உங்கள் மொபைல் கேமராவே போதும் என்றால் நம்புவீர்களா? ஆம், சைஸ்அப் (Sizeup) ஆப் உங்களிடம் இருந்தால், அளவெடுப்பதற்கு ஒரு நூலை அல்லது டேப் தேடி நீங்கள் ஓட வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஆப்-ஐ ரன் செய்து, அளவிட விரும்பும் பொருளின் முன் கேமராவை ஆன் செய்து காட்ட, அளவீடுகள் திரையில் வந்துவிடும்.

சுயப்பாதுகாப்புக்கு உதவும்

இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு திரும்பும் நிலை ஏற்பட்டால், ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட சில தெருக்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், உங்களை அமைதிப்படுத்தவும், எந்தவொரு ஆபத்தை சமாளிக்கவும் பீசேஃப் (bSafe) ஆப் உங்களுக்கு நிச்சயமாக உதவும். ஜிபிஎஸ் வழியாக இருப்பிடத்தை கண்காணிக்கும் இது, உங்கள் அவசர தொடர்புகளுக்கு ஒரு எஸ்ஓஎஸ் (SOS) செய்தியை மட்டும் அனுப்பாமல், வீடியோ மற்றும் ஆடியோவையும் பதிவுசெய்து அனுப்பும். உடன் ஜிபிஎஸ் வழியாக உங்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எஸ்ஓஎஸ்-ஐ நீங்கள் அணைக்கவில்லை என்றால், சிறிதும் நேரத்தை வீணடிக்காமல் உங்களின் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g