நீங்க சிங்கிளா? காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்க…

நீங்க சிங்கிளா? காதலர் தினத்தை இப்படிக் கொண்டாடுங்க…

டிவி, ரேடியோ, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இவை எல்லாமே கொஞ்ச நாளைக்கு காதலர் தினக் காய்ச்சலில் விழப் போகின்றன. திரும்புகிற பக்கமெல்லாம் காதல் கதைகள், தத்துவங்கள், பாட்டுகள் என, களைகட்டும் போது, சூப் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸின் நிலை பரிதாபமானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டுவிட முடியுமா? 

காதலை வெறுப்பவர்கள், காதல் கைகூடாதவர்கள், ஒன் சைடு லவ்வர்ஸ், காதலிக்கவே வேண்டாம் என நினைப்பவர்கள், காதல் நமக்கு செட் ஆகவே ஆகாது என்பவர்கள் என, சிங்கிளாக இருப்பதற்கு பின்னணியில் ஆயிரம் காரணங்கள்.  காதலிப்பவர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் வேளையில், சிங்கிளாய் இருப்பவர்கள் அந்த நாளை எப்படி உற்சாகமாய் எதிர்கொள்ள வேண்டும் என்பதை e1life.com பரிந்துரைக்கிறது.

ஜாலி டிரிப் அடிக்கலாம்!

வாலன்டைன் டே’ கொண்டாட்டங்கள் ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். காதல் தினத்தின் தத்துப்பித்துக்களை சகிக்கவே முடியாது என்பவர்கள், ஜாலியாக டிரிப் அடிக்க ஆயத்தமாகுங்கள். பிப்ரவரி, இயற்கை வருடம் முழுவதும் தேக்கி வைத்த, தன் மொத்த அழகையும் வெளிப்படுத்தும் மாதம் என்பதால், இந்த டிரிப் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கானதாக இருக்கட்டும். காதலிக்கும் உங்கள் நண்பர், அவரின் காதலியுடன் சந்தோஷமாய் இருக்கும் வேளையில், நீங்கள் இயற்கையுடன் உல்லாசமாய் இருங்கள். இன்று காதலர் தினம் என்பதையே மறக்கும் அளவுக்கு, இயற்கையில் ஐக்கியமாகுங்கள். இந்த சுற்றுலா முழுக்க முழுக்க உங்களுக்கானது என்பதால், மற்ற நண்பர்களின் தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஜாலியாக டிரிப் முடித்து வீடு திரும்பும்போது, ரீசார்ஜ் செய்யப்பட்டதாக உணர்வீர்கள். 

வர வர காதல் கசக்குதய்யா!
பாலமுருகன், தேனி.                                       

காதல் பிடிக்காமல் போனதுக்கும், நான் இப்போ சிங்கிளா சுத்திட்டு இருக்குறதுக்கும் காரணம், காதல்தான்! நான் காதலிக்கும் போது இருந்ததை விட, இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னுடைய சுதந்திரம் இப்போ என்கிட்ட இருக்குற மாதிரி உணருகிறேன். எந்த கமிட்மென்ட்டும் இல்லை. சிங்கிளா ஜாலியா இருக்கேன். இனிமே காதலிச்சு, மறுபடியும் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க நான் தயாரா இல்லை. இப்டி சொல்றதால காதலுக்கு நான் எதிரி எல்லாம் கிடையாது. எனக்குதான் காதல் எதிரி.

போட்டோ டிராவல் பண்ணுங்க!

புகைப்படம் எடுப்பதற்காக பயணிப்பவர்கள் இன்று ஏராளம். இதற்காக சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் குழுக்கள் அதிகமாகவே இருக்கின்றன. இது மாதிரியான குழுக்களுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ, புகைப்பட பயணத்தை மேற்கொள்ளலாம். ‘இன்னமும் சிங்கிளாக இருக்கிறோமே, நமக்கு யாரும் செட் ஆகவில்லையே’ என வருந்துகிறவர்களுக்கு, இது சிறந்த ஐடியாவாக இது இருக்கும். தான் விரும்பும் அல்லது பேரார்வம் கொண்டிருக்கும் செயலை செய்யும் போது, அதனுள் நாம் மூழ்குவது நிச்சயம். பிறகு காதலர் தினமாவது, கசாயமாவது. மனம் முழுவதும் கேமராவும், புகைப்படங்களுமே நிரம்பி இருக்கும்.

சிங்கிள்ஸ் பார்ட்டி!

“ஆண் நண்பர்கள் ஒன்று சேர்ந்து, நாம் சிங்கிளாக இருப்பதுதான் கெத்து, பெண்களே நம் வாழ்க்கையில் வேண்டாம்” என்றெல்லாம் முடிவெடுப்பதை ஒரு சில திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அந்த விஷயம் இப்போதெல்லாம் நிஜமாகவே நடக்கிறது.  கல்லூரிகளில் காதலை வெறுக்கும்/கெடுக்கும் அசோசியேஷன்களை வைத்து பையன்கள் கெத்து காட்டுகின்றனர். காதலே வேண்டாம் என்ற மனநிலை உள்ள சிங்கிளாக நீங்கள் இருந்தால், உங்கள் நண்பர்களில் அதே மனநிலையில் இருக்கும் நண்பர்களை அழைத்து, அன்றைய நாளை அழகாய் கொண்டாடி மகிழுங்கள். அன்றைய இரவு விருந்து, சிங்கிள்ஸ் பார்ட்டியாக இருக்கட்டும். ஆடி, பாடி கொண்டாட அந்த நாளை அமைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு கண்டிஷன்… காதல் அல்லது காதலர்களின் எதிர்ப்பு நாளாக மட்டும், அது அமைந்துவிடக் கூடாது. அவர்கள் காதலித்து சந்தோஷமாக இருக்கட்டும். நீங்கள் சிங்கிளாக மகிழ்ந்திருங்கள். ஆக மொத்தத்தில் எல்லோரும் மகிழ்வுற்றிருக்கட்டும்.

திரைப்படங்களில் மூழ்குங்கள்!

நம்மை அதிகம் ஆசுவாசப்படுத்தும் இடங்களில், திரையரங்குகளுக்கு தனி இடம் உண்டு. நம்மையும் மறந்து, நாட்டு நடப்புகளையும் மறந்து சில மணி நேரமேனும் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கும் இடம் அதுதான். அதனால் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நண்பர்களுடனோ, தனியாகவோ திரைப்படங்களை பார்ப்பதில் மூழ்குங்கள். திரையரங்குகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை, அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற திரைப்படங்களை டிவிடி-களில் பார்த்தும், வீட்டிலேயே பொழுதை கழிக்கலாம்.

சிங்கிளா இருப்பதில் பெருமையே!
சுந்தர், சென்னை.
இதுவரை நான் காதலிச்சது இல்லை. இனிமேல் காதலிக்கப் போவதும் இல்லை. என் நண்பர்கள் அனுபவிக்கிற காதல் கஷ்டங்கள்தான் அதுக்கு காரணம். காதலை பார்த்து பயப்படுறேன்னு மட்டும் நினச்சுடாதீங்க. காதல் அவசியமில்லைங்குறதுதான்
 என்னுடைய கருத்து. நான் நேசிக்குற, என்னை நேசிக்கிற அம்மாவும் அப்பாவும் இருக்கும் போது, நான் ஏன் ஒரு பெண்ணை காதலிச்சு கஷ்டப்படணும். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா காதலிச்சுக்கலாம்.

குடும்ப உறவுகளை காதலியுங்கள்!                

காதலர் தினம் காதலர்களுக்கானது என சொல்லப்பட்டிருக்கிறது. அதுபற்றி சிங்கிளாய் இருப்பவர்களுக்கு என்ன கவலை?! அதுவும் உங்களுடைய மற்ற நாட்களைப் போன்றதுதான். அதனால் வழக்கமான உங்களின் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். காதலிப்பவர்கள் காதலனுடனோ, காதலியுடனோ ஊர் சுற்றட்டும். சிங்கிள்கள் குடும்ப உறவுகளுடன் அந்த நாளை செலவழிக்கலாம். குடும்ப உறவுகளுக்கான அன்பு தினமாக அதை அமைத்து, இரவு விருந்துகூட ஏற்பாடு செய்து மகிழலாம். இந்த நாளில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, உறவுகளுக்குள் உற்சாகத்தையும், அன்பையும் இரட்டிப்பாக்கும்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g