சாக்லெட் கொடு, காதலைக் கொண்டாடு! #Valentines Day

சாக்லெட் என்றால் காதலும், காதல் என்றால் சாக்லெட்டும், நினைவுக்கு வருவது தற்செயலானது அல்ல. உணர்வுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் காதலுக்கும் சாக்லெட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆகவே இந்த காதலர் தினத்துக்கு சாக்லெட்டை விதவிதமாக பரிசளித்து காதலைப் போற்றங்கள்.

திரைப்படங்களையும் விளம்பரங்களையும் பார்த்துத்தான் சாக்லெட் மீது காதலர்கள் மோகம் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால், உங்கள் நினைப்பை உடனடியாக மாற்றிக்கொள்ளுங்கள்.  ஆம், உண்மையாகவே சாக்லெட்டுக்கும் காதலுக்கும் தொன்றுதொட்டு பந்தம் இருக்கிறது. சொல்லப்போனால், சாக்லெட் ஒரு போதையூட்டும், ஆம் காதல் போதையூட்டும் உணவு என்கிறது அறிவியல்.

 

 

 

சாக்லெட்டில் பினைல்எதிலாமைன், செரடோனின் என ‘கிளர்ச்சியூட்டும்’ இரண்டு ரசாயனங்கள் இருக்கின்றன. இவைதான் காதல் வயப்படும்போது ஏற்படும் கிளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றன. பினைல்எதிலாமைன், பாலுணர்வு கிளர்ச்சியுடன் தொடர்புடையது செரடோனின். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதும், காதல், ஈர்ப்பு, காமம் போன்ற உணர்வுகளை ஊக்கப்படுத்துவது. ஆண்களைவிட பெண்களிடம் இந்த ரசாயனங்கள் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துன்றன என்றெல்லாம் காதலுக்கு பின்னுள்ள ரகசியங்களை அவிழ்க்கின்றன அறிவியல் ஆய்வு முடிவுகள்.

இப்போது புரிகிறதா, ஏன் காதலுடன் சாக்லெட்டை தொடர்புப் படுத்துகிறோமென்று? எனவே காதலர் தினத்தில், உங்கள் அன்புக்குரிய காதலருக்கு சாக்லெட் கொடுத்துக் கொண்டாடுங்கள். எப்படியெல்லாம் சாக்லெட் கொடுத்து அசத்தலாம் என்பதற்கு, சுவாரஸ்யமான யோசனைகள் உங்களுக்காக:

சாக்லெட் கிஃப்ட் ஹேம்ப்பர்


சாக்லெட் கிப்ஃப்ட் ஹேம்ப்பர் அளித்து, எளிதில் அன்பிற்குரியவரின் மனதில் இடம் பிடித்துவிடலாம்.  நிறைய சாக்லெட்களை பார்த்த அந்த நொடியே, உங்கள் காதலி மனம் உற்சாகத்தில் துள்ள ஆரம்பிக்கும். பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் மறுப்பே கிடையாது.

ஹேம்ப்பரை சாக்லெட்களால் மட்டும் அலங்கரிப்பதை விட, அதில் பல வகையான சாக்லெட்களுடன் (டார்க் சாக்லெட், மில்க் , கிரன்ச்) குக்கீஸ், நட்ஸ், பழங்கள், மற்ற இனிப்புகள், அவர்கள் நீண்டகாலமாக வாங்க நினைத்த பொருள், காதல் புத்தகங்கள், உங்கள் புகைப்படங்களின் தொகுப்புகள் என, அந்த ஹேம்ப்பரை உங்கள் ரசனையால் வண்ணமயம் ஆக்குங்கள். தற்போது நேச்சர்ஸ் இன் பாஸ்கெட், கிஃப்ட்ஸ் இன் ஐடியாஸ் போன்ற ஆன்லைன் தளங்கள், சாக்லெட் ஹேம்ப்பர்களில் பல சாய்ஸ்களை அளிக்கின்றன. நாம் கஸ்டமைஸ்டு முறையிலும், விரும்பியவாறு ஹேம்ப்பரை  அலங்கரிக்கலாம். தற்போது காதலர் தின ஆஃபர்கள் களை கட்டுகின்றன. பயன்படுத்தி பரவசப்படுத்துங்கள்.

சாக்லெட் கேக்


கேக் என்ற சொல்லே நம்மை நாவூறச் செய்யும். அதுவும் சாக்லெட் கேக் என்றால் சொல்லவே வேண்டாம். காதலர் தினத்தன்று உங்கள் இனியவரை சுவையான சாக்லெட் கேக்குகளால் குஷிப்படுத்துங்கள். சாக்லெட் கேக்குகளில், பிளாக் ஃபாரஸ்ட், சாக்லெட் ஆல்மண்ட் கேக், சாக்லெட் ரம் கேக், டார்க் சாக்லெட் டிரஃபில், சாக்லெட் லாவா கேக், சாக்லெட் கிரன்ச்சி என, பல வகைகள் உண்டு. இதில் ஏதாவதொன்றை,  காதலரின் ரசனைக்கேற்ப அளித்து அசத்துங்கள்.

தற்போது கிரீமிலேயே புகைப்படங்கள் வரைந்த கேக்குகள், ஹார்ட் ஷேப் கேக்குகள், என பலவகையான ‘டிசைனர் கேக்’கள்  ஸ்பெஷலாக கிடைக்கின்றன. வாலன்டைன் டே ஸ்பெஷலாக, தாஜ் ஆன்லைன்.காம் (tajonline.com), ஃபிளவர் ஆரா (flower aura), ஃபெர்ன்ஸ் இன் பெட்டல்ஸ் (ferns n petals) போன்ற ஆன்லைன் பேக்கரிகளில் ஆர்டர் கொடுத்து வாங்கலாம்.  வாலன்டைன் கேக் என ஸ்பெஷலாகவே தயார் செய்கின்றனர்.

சாக்லெட் பொக்கே


பூக்களின் வாசமே காதலுக்கான ஈர்ப்பு, காதலில் பூக்களின் வர்ணனை இல்லாமல், எதுவுமே இருக்க முடியாது. காதலின் அடையாளச் சின்னத்தில் பூவும் ஒன்று என, எல்லோருமே பூக்களை சென்டிமென்ட் ஆகக் கருதி, கட்டாயம் காதலர் தினத்தன்று ஒற்றை ரோஜாவையாவது பரிசளிப்பார்கள். ஏன் நாம் வித்தியாசமாக சாக்லெட்கள் நிறைந்த பூங்கொத்து கொடுக்கக் கூடாது? சாக்லெட் பொக்கே என்றால் இன்னும் அவர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.

நீங்கள் சாக்லெட் பொக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டால், ஃபெர்ரீரோ ரோச்சர் சாக்லெட்கள் கொண்ட பொக்கே பரிசளியுங்கள். இந்த சாக்லெட்டை  குறிப்பிட்டு சொல்லக் காரணம், அதன் கோல்டன் நிற பேப்பர்தான். அந்த நிறம் சைக்காலஜி படி உற்சாகத்தையும், பொலிவையும் ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். எனவேதான் இந்த சாக்லெட் பேப்பரில் கூட சந்தோஷம் பொங்க வேண்டும் என, டிசைன் செய்திருக்கின்றனர். இதன் ருசியும் தனித்துவம்தான். எனவே, நட்ஸ், கிரீம், கிரன்ச், சாக்கோ என ஒவ்வொரு சாக்லெட்டின் பைட்டிலும், ஒவ்வொரு சுவையை அளியுங்கள்.

அசார்ட்டட் சாக்லெட்


சாக்லெட் பிரியர்களுக்கு எல்லா வகையான சாக்லெட் மீதும் ஆசை இருக்கும். அதை ஒரே நேரத்தில் அளிக்க வேண்டுமெனில், பலவிதமான சாக்லெட்கள் கலந்திருக்கும் அசார்ட்டட் சாக்லெட் பேக் தான் சிறந்தது.  சுவையில் மட்டுமல்ல, ஹார்ட்டின், ஸ்டார், இமோஜி, பிளவர், முக்கோணம் என, வடிவங்களிலும் இது வெரைட்டி காட்டுவதால், அவற்றை ஒருசேரப் பார்க்கும்போது மனம் குதூகளிக்கும்.

சுவையிலும் நட்ஸ்கள் நிறைந்த சாக்லெட், சாக்கோ கிரீம் சாக்லெட், கசப்பு, அதிக இனிப்பு, உப்பும் இனிப்பு கலந்த சுவை என, இதன் பட்டியல் நீளமானது. தற்போது கிரியேட்டிவான பல டிசைன்களில் கிஃபிட் பாக்ஸ்கள் கிடைக்கின்றன. அவற்றை இந்த சாக்லெட்களால் அலங்கரித்து, ஃபைனல் டச்சாக சிவப்பு ரோஜா வைத்து பரிசளியுங்கள். அமேசான், பிக் பாஸ்கெட் போன்ற இணைய தளங்களிலும் இந்த சாக்லெட் கிஃப்ட் பாக்ஸ்கள் கிடைக்கின்றன.

டார்க் சாக்லெட்

 

மற்ற சாக்லெட்களை விட, டார்க் சாக்லெட்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான். அதன் நிறமே சாப்பிடத் தூண்டும். கசப்பு கலந்த இனிப்பில், இதன் சுவை நம்மை மெய் மறக்கச் செய்யும். ஏன் இதற்கு இத்தனை ஸ்பெஷல் என்றால், உண்மையில் சாக்லெட் என்பதே இந்த டார்க் சாக்லெட்கள்தான். சாக்லெட் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதன் சுவை கசப்பு மட்டும்தான். பின்னாளில் தான், அதன் சுவையை மெருகேற்ற இனிப்பு சேர்க்கப்பட்டது.

உங்கள் காதலைக் கொண்டாட சரியான பரிசாக நீங்கள் டார்க் சாக்லெட்டை தேர்ந்தெடுத்தால், பார்ன்வில், லவ் இட், டெம்ட்டேஷன், ஹெர்ஷே, பிரோக் சைட் போன்ற சாக்லெட்களில் ஏதாவதொன்றை தேர்வு செய்யுங்கள். இவைதான் பலர் அதிகம் விரும்பிச் சாப்பிடும் சாக்லெட்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

ஹோம்மேட் சாக்லெட் மற்றும் கேக்


மேலே சொன்ன எல்லாவற்றையும் விட, உங்கள் கைகளால், நீங்களே பார்த்துப் பார்த்து செய்த சாக்லெட் மற்றும் கேக் தான், உங்கள் காதலருக்கு ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியும். அதைவிட அவர்கள் மகிழ்ச்சி அடைய சிறந்த காரணம் வேறெதுவும் இருக்க முடியாது. உங்கள் ரசனைக்கேற்ப வடிவமைத்து, ருசியை அதிகரித்து, உங்கள் காதலரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல், சாக்லெட் அல்லது கேக் செய்யலாம்.

‘எனக்கு சமைக்கவே தெரியாது, அப்புறம் சாக்லெட், கேக் செய்வது எப்படி?’ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  சுவையிலோ, தயாரிப்பிலோ குற்றம் குறைகள் இருந்தாலும், அதில் உங்களின் அன்பும் காதலும் தான், அவர்களின் கண்களுக்கு தெரியும். அதை ரசிக்கவும் செய்வார்கள். உதவிக்கு, உங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டுப் பெறலாம். யூட்யூப் உள்ளிட்ட பல இணையதளங்களில் சாக்லெட், கேக் செய்வதற்கான எளிய செய்முறை வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து, உங்களுக்கு பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து சமைத்து அசத்துங்கள். இதைவிட உங்களின் அன்பைக் காட்ட சிறந்த வழி இருக்க முடியாது.

 

ஹோம்மேட் கஸ்டமைஸ்டு கேக் மற்று சாக்லெட் வேண்டுமா? 

தினேஷ் குமார், சாக்லெட் ஃபான்ட்டசி

காதலர் தின ஸ்பெஷலாக, தி.நகரில் இருக்கும் ‘சாக்லெட் ஃபான்ட்டசி’யில் வித விதமான சாக்லெட்கள் மற்றும் கேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஹோம் மேட் சாக்லெட்கள் மற்றும் கேக்குகள்தான் ஸ்பெஷல். காதலர் தின ஸ்பெஷலாக ஸ்ட்ராபெர்ரி ஸ்டஃப் வைத்த டார்க் சாக்லெட்களை அறிமுகம் செய்துள்ளனர்.

“காதலர்கள் எதையும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். மேலும், பரிசுகள் மறக்க முடியாத நினைவுகளாகின்றன. இதை மனதில் கொண்டு நாங்கள் வாடிக்கையாளர்களை அணுகுகிறோம். இங்கு கஸ்டமைஸ்டு முறையிலும் கேக் மற்றும் சாக்குலேட் செய்யப்படுகிறது. எனவே அவர்களின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை நினைவு கூறும் வகையில் பரிசுகளை அளிக்கின்றனர். இருவருக்குள்ளும் காதல் அறிமுகம் காஃபி ஷாப்பில் நடந்ததென்றால், காஃபி மக் கொண்ட கேக் டிசைன், நாட்களை நினைவு கூற அந்த நாளை காலண்டர் போன்ற டிசைனில் செய்து தரச் சொல்வது என, இதுபோன்ற ஆர்டர்களையே அதிகமாக செய்கின்றனர் . அதேபோல் காதலர்கள் உருவம் பதித்த சாக்லெட்களையும் செய்து தருகிறோம். அதில் காதலர் இருவரின் முகங்களையும் பதித்து சாக்லெட்டை தயாரிப்போம்” என்கிறார் சாக்லெட் ஃபான்ட்டசியின் நிறுவனர் தினேஷ் குமார்.

– ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g