பெற்றோரை கன்வின்ஸ் பண்ண பொறுப்பான ஐடியாஸ் #Valentines Day

பெற்றோரை கன்வின்ஸ் பண்ண பொறுப்பான ஐடியாஸ் #Valentines Day

இந்தியாவில் திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் புனித ஒப்பந்தம். மண உறவின் பலமும் பலவீனமும் அதுதான். பிடித்த நபரை மணமுடிக்கவிடாமல் தடுப்பதும், பிடிக்காத ஒருவருடன் வாழ நிர்ப்பந்திப்பதும் குடும்பங்களின் இயல்பாக இருக்கிறது. குடும்பத்திற்கு பிடிக்காமல் காதல் திருமணம் செய்தால், பெற்ற மகள்/மகனுடன் உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்ள இந்தியப் பெற்றோர் துணிகின்றனர். பெற்றோரின் கோபத்திற்கு ஆளாவோம் என்பதாலேயே, பெரும்பாலும் ஓடிப்போய் திருமணம் செய்வது நடக்கிறது. காலமாற்றத்தில் எல்லாமும் மாறும்போது, இதுவும் மாறித்தானே ஆகவேண்டும்! பெற்றோரை காதலுக்கு சம்மதிக்க வைக்க சில வழிமுறைகளை கையாள வேண்டும்…இதோ அந்த பொறுப்பான ஐடியாஸ்!

 

அந்த காலத்தில் இருந்து தற்போது வரை, திருமண முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன.  ஆனால் மாறாமல் இருப்பது, காதல் திருமணத்தின் மீதான வெறுப்பு.  மதம், ஜாதி, கலாச்சாரம், சடங்கு போன்ற சமூகத்தின் கைவிலங்குகளை விரும்பி மாட்டிக்கொள்ளும் பெற்றோர் இன்றும் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னையே! இருமனமும் இணைந்து, கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணக்கமாவதெல்லாம் இரண்டாம் கட்டப் பிரச்னை தான்.  பெற்றோருக்கு எப்படி புரிய வைப்பதென்ற அச்சம் தான், இந்திய காதலர்களின் முதன்மையான பிரச்னை.

உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள்

காதல் திருமணமாக இருந்தாலும், குடும்பத்தினரின் விருப்பத்தோடு மட்டும்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் தன்மையே, உங்கள் பக்குவத்தையும் மன முதிர்ச்சியையும் குறிக்கும்.  பள்ளி அல்லது கல்லூரி செல்லும் வயதில் இந்த முதிர்ச்சி வர வாய்ப்பில்லை. அந்த வயதில் எல்லோருமே உணர்ச்சி வயப்பட்டு இருப்பார்கள் என்பதால், அந்த காதலை பெற்றோர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.  படித்து முடித்தபின் தன் செலவுகளை மட்டுமில்லாமல், குடும்பத்தையும் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும்.  ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இது கட்டாயம். சொந்தக் காலில் நின்று குடும்பத்தின் சுகதுக்கங்களில் ஆத்மார்த்தமான பங்களிப்பைத் தரும் போது, பிள்ளைக்கு முடிவெடுக்கும் பக்குவம் வந்துவிட்டது என பெற்றோர்களுக்கு நம்பிக்கை வரும்.

சரியான துணையை தேர்ந்தெடுங்கள் 

காதலுக்கு கண்ணில்லை, காரணமின்றி வருவது தான் காதல், யார் மீது வேண்டுமானாலும் காதல் வரும் போன்ற பிதற்றல்கள் வாழ்க்கைக்கு உதவாது. தொலைநோக்கு பார்வையுடனும், திறந்த மனதுடனும் சிந்தித்து முடிவெடுங்கள்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணை, உங்கள் குணத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவரா? உங்கள் குறைநிறைகளை புரிந்தவரா? அவரது எதிர்மறை குணாதிசயங்கள் உங்கள் நிம்மதியையும், நல்வாழ்க்கையையும் பாதிக்காமல் இருக்குமா? என்பதை எல்லாம் அலசியப் பின்னர், பெற்றோரிடம் சொல்லுங்கள்.

கவிதா, குடும்ப நல ஆலோசகர்

“நீங்கள் காதலிக்க தொடங்குவதற்கு முன்பாக, யாரை காதலிக்க போகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் காதலிக்கப் போகிறவர், தோற்றத்தில் மட்டுமல்லாது குணத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  உங்கள் அன்புக்கு தகுதியான ஆளாக இருந்தால் மட்டுமே காதலியுங்கள்.

பார்த்ததும் ஒருவரை பிடித்திருந்தால், அவரை காதலிக்கலாம் என்று தோன்றினால், உடனடியாக காதலை சொல்லிவிட வேண்டாம்.  அவருடன் நட்பில் இருங்கள்.  அது அவருடைய குணத்தை தெளிவாக புரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக இருக்கும். நட்புணர்வு வந்தாலே காதல் என்று அர்த்தமாகாது. காதலுக்கு என தனியான தகுதியும், சிறப்பான எதிர்பார்ப்புகளும் உண்டு. அது நீங்கள் விரும்பும் நபருக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்’’ என்கிறார் மனநல மருத்துவர் மற்றும் குடும்ப நல ஆலோசகர் கவிதா.

பெற்றோர்களிடம் நட்பு பாராட்டுங்கள்

என்னதான் பெற்றோரை நேசிக்கும் பிள்ளையாகவே இருந்தாலும், இருவருக்குள்ளும் சரியான உரையாடலும் நட்புணர்வும் இருக்க வேண்டும். குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவதால், பெற்றோர்கள் தம்மை எப்போதுமே உயர்ந்த இடத்தில்தான் வைத்துக் கொள்கின்றனர். அதனால் பிள்ளை தன்னை மீறி அல்லது தன்னிடம் சம்மதம் பெறாமல் எதையும் செய்யக்கூடாது என கருதுகின்றனர். அது ஒருவகையில் ஆதிக்க மனப்பான்மை தான் என்றாலும், உங்கள் பக்குவத்தால் அதை சரி செய்ய முடியும்.  உங்கள் திருமண முடிவு ஒருபோதும் அவர்களது இடத்தை குறைத்துவிடாது என்ற உத்தரவாதத்தை, உங்கள் நன்னடத்தையால் உணர்த்துங்கள்.

உங்களின் எண்ணம், சிந்தனை, நோக்கம் இவற்றோடு சிறிதும் ஒத்துப்போகாத அளவுக்கு உங்கள் பெற்றோர்கள் இருக்கும் பட்சத்தில், நீங்கள் அவர்களை புறக்கணிக்கலாம் அல்லது அவர்களுக்கு எதிராக நீங்கள் மாறியிருக்கலாம்.  உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையினால், வாசிப்பால், நண்பர்களால், உங்கள் பெற்றோர்களுக்கான முன்னுரிமை பின்தள்ளப்பட்டு இருக்கலாம்.  இருந்தபோதிலும் நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையை பெற்றோரின் விருப்பத்தோடு திருமணம் செய்ய ஆசைப்படுவீர்களானால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பெற்றோர்களிடத்தில் சுமூகமான உறவை கட்டமைப்பது!

பெற்றோர்களுக்கென நேரம் ஒதுக்க வேண்டும்.  இதன்மூலம் தானாகவே நெருக்கம் அதிகரிக்கும்.  உங்கள் விருப்பு வெறுப்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.  கூடவே, நண்பர்களுடைய காதல் கதைகளை பகிரலாம்.  அதன்மேல் அவர்கள் வைக்கும் விமர்சனத்தை வைத்து, அவர்கள் மனதில், புரிதலில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.  அதை தொடர்ந்து உங்கள் காதலை பற்றிப் பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.

திருமணத்தை பற்றிய உங்கள் பார்வையை தெரிவியுங்கள்

நீங்கள் திருமண வயதை அடைந்துவிட்டதாய் எண்ணினால், உங்கள் திருமண ஆசைகளை பெற்றோர்களிடம் வெளிப்படையாய் பேசுவதில் தவறில்லை.  ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் பிள்ளைகளின் கல்யாணம் நிகழ்ந்தேறுவதை பார்க்கும் கனவு நிச்சயம் இருக்கும் என்பதால், அவர்களுடன் உரையாடும் போது உங்கள் காதலை பற்றி மறைமுகமாக பேசலாம்.  இதன்மூலம் உங்கள் வாழ்க்கைத் துணை என்ன படித்திருக்க வேண்டும், எவ்வளவு இணக்கமாக, ஆதரவாக இருக்க வேண்டும், குணம்/தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி உங்கள் ஆசையாக வெளிப்படுத்தலாம்.  அதை கேட்கும்போது அவர்கள் ஏதேனும் எதிர்வினையாற்றலாம் அல்லது கண்டுக்கொள்ளாததுபோல் இருக்கலாம்.  இருந்தாலும் இதுபோன்ற பேச்சை தொடர்ச்சியாக அல்லாமல் அவ்வப்போது  அவர்களிடத்தில் பேசிக் கொண்டே இருங்கள்.  முக்கியமாக இதற்கு அவர்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும்.  அப்படி பேசும்போது கோபமூட்டுவது போல் உங்கள் பேச்சு தோரணை இருக்கக் கூடாது.

அம்மாவா, அப்பாவா – யார் உங்கள் பக்கம்?

பெற்றோர்கள் இருவருடனும் திருமணம் குறித்து உங்கள் என்ணத்தை கூறும்போது, உங்கள் கருத்தை ஒத்துக்கொள்ளக் கூடியவர் அம்மாவா, அப்பாவா என்பதை ஆராய வேண்டும்.  அவர்களோடு அணுக்கமாக இருங்கள். அவர்கள் தான் உங்கள் காதலை  சுபமாக முடிக்கக் கூடியவர்கள்.  நீங்கள் வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுத்தவரை அவரிடம் அறிமுகம் செய்யுங்கள், பேச வையுங்கள்.   ‘அவள்/அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது’  என உங்கள் முடிவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தாமல், நடைமுறை சாத்தியத்தை சொல்லுங்கள்.

நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை உணர்ச்சிகரமாக பேசும்போது, அது உங்கள் பக்குவமின்மையாக பார்க்கப்படும்.  உங்கள் துணையின் படிப்பு, சாதனைகள், நற்குணங்கள் மற்றும் எந்த சூழலில் எப்படியான உதவியை உங்களுக்கு செய்திருக்கிறார் என்பதையும் தெரியப்படுத்தலாம்.  நீங்கள் மட்டுமே பேசாமல், பெற்றோரையும் பேச விட வேண்டும்.  அவர்களின் பயம், கவலை மற்றும் கருத்தை பதிவு செய்யும் வாய்ப்பை தர வேண்டும்.

பெற்றோரின் மதிப்பிற்குரியவரின் உதவியை நாடுங்கள்

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் உங்கள் பெற்றோர் உங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லையென்றால், உங்கள் பெற்றோரின் அன்புக்குரியவர்கள் அதாவது உங்கள் நெருங்கிய உறவினர்களின் உதவியை நாடலாம்.  எல்லோருடைய வீட்டிலும் இப்படியான ஒரு நலம்விரும்பி அல்லது குடும்ப நல ஆலோசகர் இருப்பார்கள்.  அவர்களுடைய வார்த்தைக்கு பெரிய மதிப்பிருக்கும்.  அவரிடம் எல்லா நல்லது கெட்டதையும் பகிரலாம்.   அப்படியானவரை தேர்வு செய்யுங்கள்.  அவரை உங்கள் பெற்றோரிடம், தாத்தா பாட்டியிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் உங்களுக்கு ஆதரவாக பேசி, உங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து வைப்பார்.  நெருங்கிய உறவினர்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் பெற்றோர்களும் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.

குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்

நீங்கள் தேர்ந்தெடுத்த துணையை உங்கள் வீட்டில் இருப்பவர்களிடத்தில் அறிமுகம் செய்யுங்கள்.  இருவரும் பழகி புரிந்துகொள்ள போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்.  உங்கள் துணையை அறிமுகப்படுத்தும் முன்,  உங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரை பற்றியும் சொல்லி எடுத்துரைக்க வேண்டும்.  இருவருக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த வேண்டும்.  ஒருவேளை உங்கள் குடும்பத்தினருக்கு, உங்கள் துணையை பிடித்திருந்தால் அடிக்கடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள்.

சில பெற்றோர்களின் மனதை மாற்றுவது கடினமானது தான்.  ஆனால் முடியாததல்ல.  இவையெல்லாம் நடப்பதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படும் என்பதால், மிகவும் பொறுமையாகவும் நேர்மறை எண்ணங்களோடும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவராக, நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். சரியான வழிமுறைகளை கையாண்டால், காலம் முழுவதும் நல்லுறவோடு வாழலாம்.

– பி. கமலா தவநிதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g