2018-ன் வியக்க வைக்கும் வித்தியாசமான டெக் வரவுகள்!

இன்றிருக்கும் டெக்னாலஜி நாளை பழையதாகிவிடும் என்பதே தற்கால விதி. அவ்வளவு வேகமாக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி மறைந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், சில தொழில்நுட்பங்கள் அவற்றின் சுவாரஸ்யமான சிந்தனைக்காக நம்மை அதிகம் ஈர்க்கின்றன.  2018ல் விற்பனைக்கு வந்துள்ள சில வித்தியாசமான கேட்ஜெட்களை இங்கு பார்க்கலாம்…

இன்று நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டிகள் காரணமாக, வேலையை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்ட சாதனங்கள் கூட, மலிவான விலையில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் சமகாலத்து தொழில்நுட்பங்களான பியுபி பாக்கெட் ஸ்கேனர், பைலட் ஃப்ரிக்ஸியான்  எரேசபிள் பென், போலராய்டு ஜிப் மொபைல் பிரின்ட்டர், வெர்டிக்கல் மவுஸ் போன்ற சாதனங்கள், நுகர்வோரின் பேராதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2018ல் சாம்சங் நிறுவனம் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பேட்டரியை தயாரித்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரி சாதாரண பேட்டரியை விட, ஐந்து மடங்கு வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் தன்மையை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி, இந்த தொழில்நுட்பம் வந்தால் வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யமுடியும்.

பைலட் ஃப்ரிக்ஸியான் எரேசபிள் பென்!
ரூ.640/-* (7 பேனாக்கள்)
பேனாவில் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க அல்லது திருத்த, இன்று வரை நாமும் சரி, மாணவர்களும் சரி கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இனி அந்த கஷ்டம் யாருக்கும் இருக்காது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பைலட் ப்ரிக்ஸியான் எரேசபிள் பேனா, அதற்கான தீர்வை வழங்குகிறது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த பேனாவை, பைலட் என்கிற நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இந்த பேனாவை பொறுத்தவரை, புத்தகத்தில் பிழைத்திருத்தி எழுத உதவுகிறது. அதற்கு ஏற்றார்போல, இந்த சாதனத்தின் பின்புறத்தில் மை அழிக்ககூடிய டிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிப்பை கொண்டு, தவறாக எழுதிய எதையும் தடயம் இல்லாமல் ஈஸியாக அழிக்கலாம், திருத்தலாம். ஒரு பேக்கேஜ்-இல் 7 பேனாக்கள் இருக்கின்றன. இதை ஆன்லைன் ஸ்டோர்களில் ஆர்டர் செய்யலாம். சீக்கிரமாக இந்திய சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலராய்ட் ஜிப் மொபைல் பிரின்ட்டர்!

ரூ.10,000 முதல்*

போலராய்ட் ஜிப் மொபைல் பிரின்ட்டர்-ஐ பொறுத்தவரை, நீங்கள் மொபைல் சாதனங்களில் எடுக்கக் கூடிய புகைப்படங்களை, 0.5 வினாடிகளில் பிரின்ட் எடுக்க முடியும். மற்ற பிரின்ட்டர் சாதனங்களில் மை தேவைப்படும், ஆனால் இந்த சாதனத்தில் ஜிங்க் தாள் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் பல்வேறு அம்சங்களையும் இச்சாதனம் கொண்டுள்ளது. ஜிங்க் தாள்களை உள்ளே வைத்து, போலராய்ட் ஆப்ளிகேஷன் மூலம் பிரின்ட் பட்டனை அழுத்தினால், உடனே புகைப்படம் ரெடியாகிவிடும்.

பியுபி பாக்கெட் ஸ்கேனர்!

ரூ.10,800 முதல்*

டாக்குமென்ட், சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் செய்வதற்கு, பொதுவாக பல்வேறு நிறுவனங்களின் பெரிய ஸ்கேனர் மாடலை பயன்படுத்துகிறோம். இந்த பியுபி (PUP) பாக்கெட் ஸ்கேனரின் அளவு, வெறும் 5.3 அங்குலம் மட்டுமே. இதனை பாக்கெட்டில் வைத்து எங்கும் கொண்டுச் செல்ல முடியும். இந்த சாதனத்தைப் பொறுத்தவரை, ஒரு கிளிக் செய்தால் டாக்குமென்ட், சான்றிதழ் போன்ற அனைத்தையும் மிக எளிமையாக ஸ்கேன் செய்யலாம். மேலும் இவற்றில் வை-ஃபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிடி வசதிகளும் உண்டு. மேலும் இவற்றில் ஸ்கேன் செய்த பிறகு மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பரிமாற்றம் செய்யவும் முடியும்.

வெர்டிக்கல் மவுஸ்!

வெர்டிக்கல் மவுஸ் தொழில்நுட்பம், இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது, இருந்தபோதிலும், இன்னும் பயன்பாட்டில் அதிகம் பிரபலமாகவில்லை. சாதரண மவுஸ்-ஐ அதிக நேரம் பயன்படுத்தினால், சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும், இந்த வெர்டிக்கல் மவுஸ்-ஐ பயன்படுத்தினால் எவ்விதப் பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல்வேறு நிறுவனங்கள், இந்த வெர்டிக்கல் மவுஸ்-ஐ இப்போது தயார் செய்து விற்பனை செய்வதை அதிகரித்துள்ளன. 

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g