பரவசம் தரும் பலவிதமான பால்கனி டிரெண்ட்ஸ்!

வீட்டின் படுக்கை அறையை விட, ரொமான்ஸ் ரகசியங்களை அதிகம் பேசும் இடமாக இருப்பது பால்கனிதான். அதிகாலையில் எழுந்ததும், ஒரு கப் காபியுடன் கணவன் மனைவியுமாக, காதலன் காதலியுமாக பால்கனியில் அமர்ந்து கதை பேசும் சுகமே அலாதியானதுதான். சமீப நாட்களாக பால்கனி வைத்து வீடுகட்டும் பழக்கம் அதிகமாகி இருக்கிறது. அதுவும் விதவிதமான வகைகளில்…

வீட்டுக்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் டிசைனர்கள் பால்கனிக்குத்தான் அதிக இடத்தை ஒதுக்குவார்கள். அயல்நாடுகளில், உடலை அலங்கரித்துக் கொள்வது போல, பால்கனியை அலங்கரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆனால் இங்கு சமீப காலமாகத்தான், மக்கள் பால்கனியை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பால்கனியில் கார்டன் அமைப்பது, ஃபர்னிச்சர்களை கிடத்துவது, ஊஞ்சல் அமைப்பது என, அதை சரியான முறையில் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

பளபளப்பை தரும் ஃபாரஸ்ட் தீம்கள்!

ஃபாரஸ்ட் தீம் பால்கனிகளை, வீடு கட்டும் போதே அமைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக கட்டிவிட்டு, அதன்பிறகு இந்த தீமை அமைத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அது சிரமம். இதனுடைய தனித்துவமே, வீட்டின் அழகை இரட்டிபாக்குவதுதான். இது தற்போது டிரெண்டில் இருக்கும் பால்கனி மாடல். இந்த வகை பால்கனிகளின் சுவர்களில், மூங்கில்களால் அலங்கரிப்பதுதான் ஃபேஷனாக இருக்கிறது. இதன் தரைகளின் ஓரங்களில் பாலிஷ் செய்யபட்ட கூழாங்கற்களை கிடத்துவது பெரும்பாலான டிசைனர்களின் சாய்ஸாக இருக்கிறது.

வீட்டிற்குள் வுட்டன் புளோரிங் அமைப்பது சாதாரண லுக்கைத்தான் கொடுக்கும், ஆனால் ஃபாரஸ்ட் தீம் பால்கனிகளுக்கு, வுட்டன் புளோரிங் கச்சிதமாக பொருந்தும். இங்கு கிடத்தும் பர்னிச்சர்கள் சமகாலத்தைச் சேர்ந்தவையாக இல்லாமல், மூங்கில்களில் செய்யப்பட்ட அல்லது மரத்தால் செய்யப்பட்ட ஊஞ்சல் போன்றவற்றை வைத்தால், பால்கனிக்கு தனி லுக் கிடைக்கும். அதன் அழகை முழுமையாக அனுபவிக்க முடியும். மேலும் செயற்கை நீரூற்றுகள், பளபளக்கும் லைட்டிங்குகளை அமைத்துக் கொண்டால், உங்களுக்கு பால்கனியிலேயேதான் இருக்க தோன்றுமே தவிர, வீட்டிற்குள் போகும் எண்ணமே வராது. இந்த பால்கனியை பெட்ரூமுடன் சேர்ந்த மாதிரி அமைத்தல் கூடுதல் சிறப்பு.

பர்கோலா பால்கனிகள்!

சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டும் இல்லாமல், இன்றைய கிராமப்புறங்களில் கூட பர்கோலா பால்கனிகளை நம்மால் பார்க்க முடியும். ஏனெனில் சமகால வீடுகளை அதிகமாக அலங்கரிக்கும் பால்கனிகள் இவைதான். இதனுடைய அமைப்பே வழக்கமான பால்கனிகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். பால்கனிகளில் கார்டன் அமைக்க நினைப்பவர்கள், இந்த பால்கனியை பரிசீலிக்கலாம். பால்கனியிலிருந்து செடி கொடிகளை பர்கோலாக்கள் மீது படர விடுவதுதான் இதன் தனித்துவம். அதன் மூலம் கிடைக்கும் அழகு, பார்ப்பவர்களின் கண்களுக்கு பேரழகாய் தெரியும். பொதுவாக இது மாதிரியான பால்கனிகள் வீட்டிற்கு பின்புறமாக அமைப்பது நல்லது.

டெரஸ் பால்கனிகள்!

பெரிய வீடுகளுக்கு ஏற்ற பால்கனிகளாக இவை இருக்கின்றன. வீட்டின் முதல் தளத்தில், முன்புறமாக இதை அமைத்துக் கொள்ளலாம். மற்ற பால்கனிகளில், மேலே மூடுவது போன்ற டெரஸ் அமைப்பு அல்லது பர்கோலா அமைப்பு இருக்கும். ஆனால் இந்த பால்கனிகளில் அது இருக்காது. ஒப்பன் டெரஸ் போலவே இந்த பால்கனியின் கூரையை வானமே அலங்கரிப்பதாய் இருக்கும். வித்தியாசமான லுக் கிடைக்கிறது என்பதால், டிசைனர்கள் இதை அதிகம் பரிந்துரைக்கிறார்கள். இது மாதிரியான பால்கனியில், பர்னிச்சர்களை மட்டுமல்ல, டைனிங் டேபிள் அமைப்பையும் ஏற்படுத்தலாம். இரவு நேர உணவுகளுக்கு, கேண்டில் லைட் டின்னருக்கு ஏற்ற இடமாக இது இருக்கும்.

“குப்பைகளை போடுவது, வாஷிங் மெஷின் வைத்து துணி துவைப்பது, கயிறு கட்டி துணி காயப்போடுவது என, ஸ்டோர் ரூம் மாதிரி பயன்படுத்தி வந்த பால்கனியை, இன்று மக்கள் அலங்கரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம். பால்கனியை வீட்டின் வசதிக்கு ஏற்ற மாதிரி பின்புறம், முன்புறம் என எங்கு வேண்டுமானாலும் நம்மால் வைத்துக் கொள்ள முடியும். பழைய மாடல்களில் இல்லாமல், புதுபுது பால்கனி மாடல்கள் இன்று வந்துவிட்டன. இன்றைய எக்ஸ்டீரியர் டிசைனர்கள் டிரண்டியான லுக் கிடைப்பதற்காக, வித்தியாசமான பால்கனிகளை கட்டமைத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், சாதாரணமாக கட்டும் பால்கனிகளை அழகுபடுத்தவதற்காகவும், இன்று ஏரளமான ஐடியாக்கள் உருவாகி இருக்கின்றன”.                                                                                        – விஷ்ணு, இன்டீரியர் டிசைனர்.

பால்கனிகளின் கூடுதல் அழகை பெற…

பால்கனிகளே அழகுதான்; ஆனால் அதையும் தாண்டிய அழகு பால்கனி ஆக்சஸரீஸ்களில் இருக்கிறது. ஒவ்வொரு பால்கனிகளிலும் நிச்சயமாக ஹேங்கிங் லைட்கள் இருக்க வேண்டும். ஏனெனில் அதன் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. பல வண்ணங்களில் ஹேங்கிங் லைட்கள் கிடைப்பதால், சுவர்களின் வண்ணங்களுக்கு மேட்சிங்கான நிறத்தில் வாங்கி மாட்டிக் கொள்ளலாம். இன்று பல்பு டெரரியம் நிறையவே கிடைக்கின்றன. ஜாடிக்குள் தோட்டம் மாதிரியான லுக் கிடைப்பதால், அதை வாங்கி பால்கனிகளில் மாட்டலாம். பால்கனிகளில் வைப்பதற்காகவே சின்ன சின்ன காபி டேபிள்கள் விற்கிறார்கள். அது மாதிரி பால்கனிக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கும் ஃபர்னிச்சர்கள் கூடுதல் அழகை கொடுக்கும்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g