இளைஞர்களை ஈர்க்கும் ஸ்டைலான ‘ஸ்மார்ட் வாட்ச்’கள்!

இளைஞர்களை ஈர்க்கும் ஸ்டைலான ‘ஸ்மார்ட் வாட்ச்’கள்!

ஃபிட்னெஸ், அழகு இரண்டும் தான் இன்றைய இளைஞர்களின் பல்ஸ். அதை வெளிப்படுத்தும் கேட்ஜெட்களில் முதலிடம், ஸ்மார்ட் வாட்ச் வகைகளுக்கு தான். கைகளில் கட்டும் ஒரு சிறிய பேண்ட், உங்களின் இதயத்துடிப்பிலிருந்து, தூங்கும் நேரம் வரை கணக்கிட்டு உங்கள் உடலை கண்காணிக்க உதவுகிறது என்றால் யாருக்குத்தான் ஸ்மார்ட் வாட்சை பிடிக்காது…

இப்போது எல்லோரின் கைகளையும் ஸ்மார்ட் வாட்சுகள்தான் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இதை உணர்ந்த சாம்சங், ஸியோமி உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்தும், ஸ்மார்ட் வாட்ச்-க்கு தனிக்கவனம் அளிக்க தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட்போனுக்கு வரும் மெசேஜ்களை, அழைப்புகளை உடனுக்குடன் அலாரமிட்டு ஸ்மார்ட் வாட்ச் தெரியப்படுத்துகிறது. மேலும் சைக்ளிங், ஜாகிங், வாக்கிங், ஸ்விம்மிங் என, அனைத்து ஃபிட்னெஸ் விளையாட்டுகளிலும் ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தலாம்.  இப்படிப்பட்ட ஒரு கேட்ஜெட், எப்போதும் நம் கைகளில் இருப்பது அவசியம்தானே?! 2018-ல் உங்களை பிட்டாக ஆக்கிக்கொள்ள, மிக முக்கியமான ஸ்மார்ட் வாட்சுகள் இங்கே பரிசீலிக்கப்படுகின்றன. இங்கு சொல்லப்பட்டிருக்கும் அனைத்து வாட்சுகளிலும், வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ஆப்ஷன் இருக்கிறது.

சூப்பர் சாம்சங் கியர் சீரிஸ்!

ரூ.13,590 / 22,990/-*
சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கும், ‘கியர் பிட் 2 ப்ரோ’ மற்றும் ‘கியர் ஸ்போர்ட்ஸ்’ என்கிற இரண்டு ஸ்மார்ட் வாட்சுகள்தான், கேட்ஜெட் உலகின் இன்றைய ஹாட் டாப்பிக். 512 எம்.பி., ரேமும், 1.5 அங்குல சூப்பர் அமோலெட் திரையும் கொண்ட கியர் பிட் 2 புரோ, 216 x 432 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டது. 768 எம்.பி., ரேம் உடன், 1.2 அங்குல ஆமோலெட் திரை கொண்ட கியர் ஸ்போர்ட் வாட்ச், 360×360 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இவற்றில் பொருத்தப்பட்டுள்ள 300 எம்.ஏ.ஹெச்., திறன் கொண்ட பேட்டரி மூன்று நாட்களுக்கு சார்ஜ் தாங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட் வாட்ச்களை கொண்டு ஜாகிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்ளிங், என அனைத்து உடல் செயல்பாடுகளையும், பயிற்சிகளையும் கணக்கிட முடியும்.

வித்யாசமான ‘விவோ ஆக்டிவ் 3!’

ரூ. 24,990/-*
ஃபிட்னஸ் கேட்ஜெட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான கார்மின், ‘விவோ ஆக்டிவ் 3’ பிட்னஸ் ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்திருக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளி வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.2 அங்குலம் திரையை கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்காக கோரிங் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஜிபிஎஸ் மோடில் 11 மணி நேரம் வரையும், வாட்ச் மோடில் 7 நாட்கள் வரையும் சார்ஜ் நீடித்திருக்கும். 14 நாட்களுக்கான டிராக்கிங் டேட்டாக்களை சேமித்து வைக்கும் வசதியும் இதில் இருக்கிறது. அமேஸான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் தளங்களிலும், ரீடெயில் ஷாப்களிலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கிறது.

மோட்டிவ் தரும் ‘மூவ் நவ்’

ரூ. 4,000/-*
மூவ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் மூவ் நவ் ஸ்மார்ட் வாட்ச்சில், ஏராளமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு ஸ்மார்ட் வாட்டை கொண்டே சர்க்கியூட் டிரெய்னிங், ரன்னிங், சைக்ளிங், ஸ்விம்மிங், கார்டியோ பாக்ஸிங், டிரெட்மில் ரன், இன்டோர் சைக்ளிங், டிரக்கிங் என, எட்டுவிதமான பிட்னஸ் செயல்பாடுகளை கணக்கிட முடியும். இதன் மொத்த எடையே 15.1 கிராம்தான். இதனுடைய பேட்டரி லைஃப் ஆறு மாதங்கள வரை தாங்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதில் இருக்கும் புளூட்டூத் ஆப்ஷன் மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்வதன் மூலம், ஃபிட்னெஸ் செயல்பாடுகளின் விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். கருப்பு, ஸ்கை ப்ளூ, நீலம், சிவப்பு, பச்சை என பல வண்ணங்களில் கிடைப்பதால், ஆடைகளின் நிறங்களுக்கு ஏற்பவும் வாங்கி இதை மேட்சிங் ஆக அணிந்து கொள்ளலாம்.

ஸ்டைலான ‘ஹூவெய் பேண்ட் 2 ப்ரோ’

ரூ.5,500/-*
அட்டகாசமான வடிவமைப்புடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பிட்னஸ் பேண்ட் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது. கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு என, கவர்ச்சியான மூன்று வண்ணங்களில் வெளி வந்திருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும். 100 எம்ஏஹெச் திறனுள்ள பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. வாட்ச் மோடில் 21 நாட்கள் வரையிலும், ஜிபிஎஸ் மோடில் 3.50 மணி நேரம் வரையிலும் இதன் சார்ஜ் தாங்கும்.  இது தூக்கத்தையும், நடப்பதையும் துல்லியமாக கணக்கிட உதவுகிறது. தேவைப்படும் நேரங்களில் அலாரங்களை அமைத்துக் கொள்ளும் வசதியும் இதில் இருக்கிறது. இதயத்துடிப்பையும் துல்லியமாக கணக்கிட்டு தெரியப்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது.

ஃபிட் ஆக ‘பிட்பிட் பிளேஸ்’

ரூ.16,999/-*
மிகச் சிறப்பான பேட்டரி லைப் பெற்றிருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை, அனைத்து விதமான ஃபிட்னெஸ் செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட்போனுக்கு வரும் மெசேஜ் மற்றும் அழைப்புக்கான நோட்டிபிகேஷனை தெரியப்படுத்தும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தால், இந்த வாட்ச்சில் இருக்கும் ஆப்ஷனை வைத்தே வேறு பாடல்களுக்கு மாற்ற முடியும், ஒலி அளவை குறைக்கவும், அதிகப்படுத்தவும் உதவும் வசதிகளும் இருக்கின்றன. தினசரி செயல்பாடுகளை சேமித்து வைக்கும் வசதி, ரிமைண்டர் ஆப்ஷன், தூக்கத்தின் அளவை கணக்கிடுவது என, ஏராளமான வசதிகளையும் ஃபிட்பிட் பெற்றிருக்கிறது. 5 நாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

*தோராயமான விலை.

-செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g