காதலர் தினத்தை கொண்டாட கோவாவிற்குக் கிளம்புங்கள்!

காதலை, காதலிப்பவர்களை கொண்டாடித் தீர்க்க இதோ வந்துவிட்டது ஒருநாள். இன்னும் இருபதே நாட்களை கடந்துவிட்டால், ‘காதலர் தினம்’ எனும் இனிய நாளை தொட்டுவிடலாம். அழகும் தனிமையும் நிறைந்த இடத்தில், அந்நாளை கொண்டாட விரும்புகிறவர்களுக்கான e1life.com-ன் பரிந்துரை இதோ…

இந்தியாவிலேயே கோவாவின் கடற்கரைகள்தான் ரொமான்ஸ் ரகசியங்களை பேசி மகிழ, மிக பொருத்தமான ஸ்பாட்!  எங்கு திரும்பினாலும் கடற்கரைகளைக் கொண்ட கோவாவை விசிட் செய்ய ஏற்ற மாதங்கள் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை. இதுவரை ஒருமுறை கூட கோவாவுக்கு போனதில்லை என்றால், காதலர் தினத்துக்குள் திட்டமிடலாம். இந்த சீசனில் கூல் அண்ட் கம்ஃபர்டபிள் ஆக ரம்மியமான கிளைமேட் உங்களை அணைத்துக் கொள்ளும். சுமார் 30 கடற்கரைகள் கொண்ட கோவாவில் சில பெஸ்ட் இடங்கள் இவை. காதலர்/நண்பர்களுடன் சென்று என்ஜாய் பண்ணுங்கள்!

சிலிர்ப்பை தரும் சிரிடாவோ!
கொஞ்சம் பாறைகளும், கொஞ்சம் மணலும் ஆங்காங்கே இணைந்து பிணைந்து, உங்கள் இணையைப் போற்றும்படியான சூழலை கொண்டிருக்கும் பீச் இது. காதலனும் காதலியும் சேர்ந்து இந்த பீச்சுக்கு சென்றால், உங்களை நல்ல இணையாக உணர வைக்கும். சுற்றுலாப்பயணிகள் அதிகம் இல்லாத அமைதியான இடமாக அமைந்திருக்கும் பீச் இது என்பதால், துணையுடன் தனிமையில் பொழுதை கழிக்க விரும்புபவர்கள் கட்டாயம் செல்லவேண்டியது இந்த கடற்கரைக்குத்தான். நாள் எப்படிப் போகிறது என்பதே தெரியாத அளவுக்கு மெய் மறந்து போவீர்கள். 

சிரிடாவோ பீச், வடக்கு கோவாவின் திஸ்வாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராம கடற்கரையாகும். இது பனாஜியிலிருந்து, 7.5 கி.மீ., தூரத்திலும், கோவா சர்வதேச விமான நிலையமான டபோலிம் விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை எனினும், தனியார் போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த பீச்சுக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களே, வகை வகையான சைவ மற்றும் அசைவ கிராம உணவுகள் மற்றும் கடற்கரை உணவுகளை ஜோராக சமைத்து பரிமாறுகிறார்கள். ஆசை தீர இளைப்பாறிவிட்டு, வாய்க்கு ருசியாக சாப்பிட்டுவிட்டும் வரலாம்.

அமைதியான அஸ்வெம்!
சுற்றுலா பயணிகளுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத கடற்கரை இது. உங்கள் மனம் விரும்பும் நபருடன் நீண்ட நேரம் கடற்கரையில் அமர்ந்து உரையாட விரும்புகிறீர்களா அப்படியானால் இதுதான் மிகச்சிறந்த இடம். ஆங்கிலப் படங்களில் காணப்படும் யாருமில்லா கடற்கரையைப் போலவே இந்த கடற்கரை அழகாக காட்சியளிக்கிறது. கோவாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இதன் ரம்மியான சூழலால், வெளிநாட்டவர்கள் அதிகம் பேர் இந்த பீச்சை விரும்புகின்றனர். பனாஜியிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பீச்சுக்கு அனைத்து போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.

மற்ற பீச்சுகளை விட நீச்சலடிக்க ஏற்றதாக இது இருப்பதால், அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறது. அதனாலேயே நீச்சலுக்கான, சூரிய குளியலுக்கான பல வசதிகளை இந்த பீச்சில் செய்து வைத்திருக்கிறது கோவா சுற்றுலா துறை. துணையுடன் செல்பவர்களுக்கு இவ்விடத்தில் கிடைக்கும் கூடுதல் சந்தோஷம் ‘ஆயுர்வேதிக் மசாஜ்’. அருகில் ஏராளமான ஸ்பாக்கள் இருக்கின்றன, பல ரிசார்ட்டுகளிலும் அதற்கான வசதிகளை வைத்திருக்கிறார்கள். கடற்கரையின் மொத்த சந்தோஷத்தையும் அனுபவிக்க நினைப்பவர்கள் தவறவிடக்கூடாத கடற்கரை அஸ்வெம்.

வெள்ளை வாகத்தோர்!
இந்த பீச்சிற்கு வெகு அருகிலேயே கோவாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களான சப்போரா கோட்டையும், அஞ்சுனா கடற்கரையும் இருப்பதால், இந்த இடத்தை எப்போதும் சுற்றுலா பயணிகள் மொய்த்துக் கொண்டே இருக்கின்றனர். மற்ற பீச்களில் இல்லாத சிறப்பு, இந்த பீச்சில் இருக்கும் வெள்ளை மணற்பரப்புதான். இதை பார்த்ததும் காதலர்களாகிய நீங்கள், உங்கள் மனதை பறிகொடுப்பது நிச்சயம். வாகத்தோர் பீச்சில் எண்ணற்ற உணவகங்களையும், குடில்களையும் நீங்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பிரிம்ரோஸ் என்ற குடிலில் பரிமாறப்படும் கோவா உணவு வகைகளும், மற்ற பாரம்பரிய உணவு வகைகளையும் போல, வேறெங்கும் நீங்கள் ருசித்திருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் இந்தக் கடற்கரையில் உள்ள நைன் பார் என்ற இரவு விடுதியை தவற விட்டுவிடாதீர்கள். வாழ்நாளில் மறக்க முடியாத பார்ட்டியிங் அனுபவத்தை இங்கு பெறுவீர்கள். 

மனம் மகிழும் மாண்ட்ரேம்!
வடக்கு கோவாவில் உள்ள மாபுஸா நகரில் அமைந்திருக்கும் மாண்ட்ரேம் பீச், கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல், பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புகிறவர்கள் இங்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது. மாண்ட்ரேம் பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் கேஷுவரீனா மரங்களும், கடல் மீன்களை உண்ணும் வெள்ளை அலகு கழுகளும், இங்கு வரும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் கடற்கரை உணவுகளுக்காக புகழ்பெற்ற ‘எண்ட் ஆஃப் தி வேர்ல்ட்’ உணவகத்துக்கும், அருகில் இருக்கும் போர்த்துகீசிய கோட்டைக்கும் நேரம் இருந்தால் சென்று வரலாம்.

அழகின் அமர்விடம் அஞ்சுனா!
அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் இருப்பதால், சாலை மார்க்கமாக எளிதாக அடைந்துவிடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் புதிய உணவுகளை பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடிவரும் பயணிகளின் கூட்டமும் அதிகம். அஞ்சுனா பீச்சுக்கு வந்துவிட்டு, அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது. அதோடு இங்கு புத்தகம் படிப்பது,  பாடல்கள் கேட்பது, லேப்டாப்பில் நேரத்தை செலவிடுவது போன்று, உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

ஆரவாரமில்லாத அரம்போல்!
அரம்போல் பீச், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு அருகில் இருந்தாலும், அந்த கடற்கரைகளை போல் வணிகமயமாக்கலின் சாயம் படிந்ததல்ல. இந்தக் கடற்கரையும், இதைச் சார்ந்து முற்றிலும் தூய நீரினால் அமையப்பெற்ற ஏரியும், எளிமையின் உருவமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மற்ற கடற்கரைகளை போல, இங்கு  ஹோட்டல்களையோ, உணவகங்களையோ நீங்கள் பார்க்க முடியாது. எனினும் ஆங்காங்கு காணப்படும் குடில்கள், அந்த குறையை நிவர்த்தி செய்துவிடும். அஞ்சுனா மற்றும் மாபுஸா கடற்கரைகள், அரம்போல் பீச்சுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மேலும், அரம்போல் பீச்சின் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள ‘மணி ஸ்டோன்’ என்ற சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கட்டடம், காதலர்கள் கண்டு ரசிக்க வேண்டிய மிகச்சிறந்த இடம்.

கோவா என்னை எப்போதும் அமைதிபடுத்தும்!
கேசவ மூர்த்தி, பெங்களூரு.

கேசவ மூர்த்தி

நான் கோவா கடற்கரைகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அப்போதெல்லாம் கடற்கரையில் கால்களை நனைத்தபடி கடலுடன் தனியாக பேசிக்கொண்டிருப்பேன். பெங்களூருவில் இருந்து 550 கி.மீ., தொலைவில் இருப்பதால், சில சமயங்களில் பைக்கிலேயே கூட சென்றுவிடுவேன். கடந்த நவம்பரில் கோவா போனது, என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அந்த மாதத்தில், கோவாவின் கிளைமேட் அவ்வளவு அருமையாக இருந்தது. பைக் ரைடு என்பதால் அதன் சுவாரஸ்யம் சற்று கூடுதலாக கிடைத்தது. எப்போதும் கடற்கரைக்கு மட்டுமே சென்று திரும்புவது என் வழக்கம். ஆனால் இந்த முறை, போர்ச்சுகீசியர்கள் காலத்து அகோண்டா கோட்டைக்கு போனது பேரானந்தத்தை வழங்கியது.

சென்னையை விட கோவாவின் கடற்கரைகள் அழகானவை!
அஜித், சென்னை.
2018-ன் முதல் நாள் விடிந்ததே எனக்கு கோவாவில்தான். புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் கிளம்பிவிட்டோம் கோவாவுக்கு. திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், மிகவும் அழகாக அனுபவிக்க முடிந்தது. எந்த தடையும் இல்லாமல், கோவாவின் மொத்த அழகையும் வெகுவாக ரசித்து மகிழ்ந்தோம். சென்னை கடற்கரைகள் கொடுக்காத பேரானந்தத்தை கோவாவின் கடற்கரைகள் எங்களுக்கு கொடுத்தது. வாகதோர், அஸ்வெம் என மிக முக்கியமான கடற்கரைகளுக்கு மட்டுமல்லாமல், மக்களின் கால்தடம் அதிகம் படாத பீச்சுகளுக்கும் சென்று மகிழ்ச்சி கூத்தாடினோம்.


                                                                                                                                                         -செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g