ஸ்மார்ட்டாக ஷாப்பிங் செய்யுங்கள்!

ஸ்மார்ட்டாக ஷாப்பிங் செய்யுங்கள்!

உணவுப் பொருட்களை வாங்கும் போது, குறிப்பாக டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் மற்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு செல்லும் போது, இவற்றை மட்டும்தான் வாங்க வேண்டும் என்று முடிவோடு செல்வோம். ஆனால், அங்கு சென்ற பின்னர் கதையே வேறு மாதிரி இருக்கும். நினைத்தது ஒன்று, வாங்கியவை ஏராளம் என்று மாறிவிட்டிருக்கும். தேவையான பொருளை, தேவையான அளவுக்கு, குறிப்பிட்ட தொகைக்குள் வாங்கும் வித்தையை நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் பின்னர் வருந்த வேண்டிய நிலைமை ஏற்படாது. ஸ்மார்ட் ஆக பொருட்களை வாங்க சூப்பரான 5 உத்திகளை இங்கு பார்க்கலாம்… 

 

முன்பே முடிவு செய்துகொள்ளுங்கள்

ஷாப்பிங் செல்வதற்கு முன்பாக, வாங்க வேண்டிய பொருட்கள் எழுதிய லிஸ்ட், கட்டாயம் உங்கள் கையில் இருக்க வேண்டும்.  ஒரு வாரத்திற்கானதை மட்டும் வாங்க போகிறோமா அல்லது ஒரு மாதத்திற்கானதா என்பதை உறுதி செய்துவிட்டு, பின் லிஸ்டை தயார் செய்தால் இன்னும் சிறப்பு.  அப்படி திட்டமிடப்படாமல் நீங்கள் செல்லும்பட்சத்தில், கண்டபடி பொருட்களை வாங்கிக் குவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பயன்பாடு தெரியாமல் வீணடித்துவிடுவீர்கள்.

ஷாப்பிங் கிளம்புவதற்கு முன் வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்.  பொதுவாகவே வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, நமக்கு உணவுகளை தயார் செய்யும் உணவகங்களை பார்த்தாலே, தானாகவே நாவூறத் தொடங்கி,  வாயும் வயிறும் சாப்பிட தயாராகி விடுகின்றன. ஆக, சாப்பிடாமல் ஷாப்பிங் செல்லும்போது,  அதிகளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை வாங்கும் நிலை ஏற்படலாம்.

 தவிர்க்க வேண்டியதில் கண்டிப்பாக இருங்கள்

வேண்டிய பொருட்களின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து எடுத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோல உடலுக்கு தீங்கு செய்யும் மற்றும் விலை அதிகமான உணவுகளை வாங்குவதை தவிர்ப்பது அவசியம். முதலில் நாம் நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பின் எவையெல்லாம் தேவையற்றது என்றும் பட்டியலிட வேண்டும்.  அந்த பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது.  இதில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.   இவையல்லாமல், அதிக விலையுள்ள உணவு பொருட்களை தினமும் வாங்கி சாப்பிடாமல், வாரத்திற்கு ஒருமுறை என பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.  படிப்படியாக இவற்றையும் தவிர்க்கலாம்.

 

வேலையை எளிமையாக்கலாம்

காய்கறிகளை அழகான வடிவங்களில் வெட்டி, சமையலுக்கு ஏற்ற்படி தயாராக பேக் செய்து வைத்திருப்பதை இப்போதெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் பார்க்க முடிகிறது. இவற்றுடன் ஊறவைத்து முளைக்கட்டியது, வேக வைத்தது என, நம் வேலைகளை வெகு சுலபமாக்கி விடுகிறார்கள்.  இவற்றை வாங்குவதற்கு தயங்கவே வேண்டாம்.  இதனால் வேலை சுலபமாவதுடன், வெளியில் சாப்பிடுவதும் தவிர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு அலுவலக வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள், சமைப்பதற்கு அலுத்துக்கொள்வார்கள்.  அவர்கள், கடைகளில் கிடைக்கும் முளைக்கட்டிய தானியங்களை வாங்கி சென்று, புலாவ் அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக, சிம்பிளாக செய்து கொள்ளலாம்.  50 ரூபாயில் முடிக்க வேண்டியதை, ஹோட்டலுக்கு சென்று, 200 ரூபாய் செலவிட வேண்டாம்.

நேரத்தையும் கணக்கிட வேண்டும்

பொருட்களை வாங்குவதில் எப்படி திட்டமிடுதல் அவசியமோ, அதேபோல் நேரத்தை மேனேஜ் செய்வதிலும் கவனமாய் இருக்க வேண்டும்.  பொதுவாக ஷாப்பிங் சென்றாலே குஷியாகிவிடுவோம்.  நேரம் போவதே தெரியாமல், பைகளை நிரப்பிக் கொண்டிருப்போம்.  காசு மற்றும் பொருட்களை வீணாக்குவது தவறு என்றால், நேரத்தை வீணாக்குவது என்பது பெரும் இழப்பு.  அதனால், எப்போது கிளம்ப வேண்டும், எவ்வளவு மணிநேரத்தை அங்கு செலவிட வேண்டும், வீட்டிற்கு இத்தனை மணிக்குள் வந்துவிட வேண்டும் என்பதையெல்லாம் முன்னேற்பாடாக திட்டமிட வேண்டும்.  இது பல சிக்கல்களை தவிர்க்கும்.  அதேபோல், வாரம் முழுக்க என்ன சமைக்க போகிறோம் என்பதை லிஸ்ட் எடுத்துக் கொண்டால், “என்ன சமைக்கலாம்” என்ற தினசரி குழப்பத்தை தவிர்ப்பதோடு, வேலையையும் எளிதாக்கிவிடும். முதல்நாளே, அடுத்த நாள் சமையலுக்கான ஏற்பாடுகளை செய்து வைக்கலாம்.

டெபிட்/கிரெடிட் கார்டுகளை தவிர்க்கவும்

முதலில் நாம் நினைப்பதையெல்லாம் நம்மால் வாங்க முடியுமா என்று யோசித்து, ஒரு புரிதலுக்குள் வர வேண்டும்.  வீட்டிலேயே டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துவிட்டு, குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.  இதனால் நிச்சயம் பண விரயம் ஏற்படாது என்பதை உறுதியாக கூற முடியும்.  ஒரு வாரத்திற்கு என ஒதுக்கப்பட்ட தொகையை தாண்டிய செலவை தவிர்க்க, இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணலாம்.  ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும்போதும், வீட்டில் பிளாஸ்டிக் கவர்கள் அதிகம் சேர்ந்து கொண்டே போகும் என்பதால், வீட்டிலிருந்தே ஒரு பையை எடுத்துச் செல்லலாம்.  பல கடைகளில் அந்த கவர்களுக்கும் சேர்த்தே காசு வசூலிக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

 

– பி. கமலா தவநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g