2018-ஐ ஆளப்போகும் டெக்கார் டிரெண்டுகள்!

2018-ஐ ஆளப்போகும் டெக்கார் டிரெண்டுகள்!

வெறும் கல்லையும் மண்ணையும் கலந்து கட்டுவதாக, சொந்த வீட்டை யாரும் இப்போது சாதாரணமாக நினைத்து விடுவதில்லை. கட்டும் வீடு சின்னதாக இருந்தாலும், அதை மலை என நினைத்துதான் ஆனந்தப்பட்டுக் கொள்கிறார்கள். வீட்டின் கதவு, டைல்ஸ், ஜன்னல், பாத்ரூம், போர்டிகோ என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அழகுடன் கட்டி அதில் மையல் கொள்கிறார்கள்.

அப்படி கட்டும் போது, அவரவரின் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி கட்டாமல், டெக்கார் டிரண்டுகளின் அப்டேட்களையும் கவனித்து, அதன்படி கட்டினால் வீட்டின் அழகை கூடுதலாக பெற முடியும். இந்த 2018-ம் வருடத்தில், பல டெக்கார் டிரெண்டுகள் அறிமுகமாகி இருக்கின்றன. கட்டுமான துறையை  இந்த டிரெண்டுகள்தான், 2018ல் ஆட்சி செய்யப் போகின்றன என இன்டீரியர் டிசைனர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

அசோக் மனோகர்

இன்டீரியர், எக்ஸ்டீரியர் விஷயங்களில் டிரெண்ட் அப்டேட் குறித்து பிளானர்-டிசைனர் இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், அசோக் மனோகர்,  “வீடு கட்டுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருந்தாலும், யுனிவர்சல் டிரெண்டு என்பது ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது.  ஆனால் நம்மால் பழைய விருப்பங்களை துறக்க முடிவதில்லை. உதாரணத்திற்கு பாத்டப் வைத்து பாத்ரூம் கட்டுவது ஓல்டு பேஷனாகிவிட்டது. ஆனால் இன்னமும் சிலர் அதையே பின்பற்றுகின்றனர். பாத் டப்களை விட ஸ்டீம் பாத்ரூம் டிசைன்கள் கூடுதல் அழகையும், ஆடம்பரத்தையும் கொடுக்கின்றன” என்றார்.

பரவசம் தரும் பிரவுன் லேயரிங்!
பொதுவாக இந்திய வீடுகளில் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் என பழுப்பு நிறங்களில் ஆக்கரமிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்போது கதவுகள், ஜன்னல்கள் பல வண்ணங்களின் கிடைப்பதால், அதைத்தான் மக்கள் அதிகமாக பரிசீலிக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் பழுப்பு நிற பர்னிச்சர்கள் டிரெண்டாக மாறியிருக்கின்றன. பழுப்பு நிற ஃப்ளோரிங் விஷயங்களும், பழுப்பு நிற டைல்களும், மீண்டும் வீடுகளுக்கு ஸ்மார்ட் லுக்கை  கொடுக்க இருக்கின்றன.

‘கிச்சன் ஐலேண்டு’ டிசைன்!
வழக்கமாக கிச்சன் என்றாலே, ஸ்டோர் ரூம், டைனிங், சமைக்கும் அறை என பிரித்து வைப்போம். ஆனால் அந்த மாடல் கிச்சன்களை இப்போது யாரும் விரும்புவதில்லை. மாடுலர் கிச்சன்களும் கூட, மக்களுக்கு அவ்வளவு பெரிய திருப்தியை கொடுத்து விடவில்லை. ஆனால் ‘கிச்சன் ஐலேண்டு’ மாடல், ஸ்மார்ட் கிச்சன்களுக்கு கன கச்சிதமாக பொருந்துகின்றன. இதனை டைனிங் டேபிளாக கூட பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், கூடுதல் செளகர்யமாகவும் இருக்கிறது. மாடுலர் கிச்சன்களுடன், கிச்சன் ஐலேண்டுகளை அமைத்துக் கொள்ள முடியும். கிச்சன் ஐலேண்டுகளை அமைப்பதால், கிச்சனுக்கென்று தனியாக ரூம் செட்டப் தேவையில்லை. வரவேற்பு அறையின் கார்னர்களில் கூட ,கிச்சன் ஐலேண்டுகளுடன் கூடிய மாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொள்ளலாம்.

டைனமிக் லுக் தரும் சிமென்ட் டைல்ஸ்!
வெளிநாடுகளில் வீட்டுச் சுவர்களுக்கு பெயின்ட் அடிக்காமல் விடுவதுதான் பேஷனாக இருக்கிறது. பெயின்ட்டுக்கு பதிலாக சிமென்ட் கலவையை கொண்டு எக்ஸ்ட்ரா லேயர் அடிப்பார்கள். அது பார்க்க புதுமையாகவும், சமகாலத்து லுக்கையும் கொடுக்கும். அந்த டிரெண்டு இனி இந்தியாவில் களமிறங்கப் போகிறது. அதுமட்டுமல்லாமல், ப்ளோரிங் டைல்ஸ்களிலும் சிமென்ட் டைல்ஸ்கள் அறிமுகமாகி இருக்கின்றன. இந்த டைல்ஸ்களை வீட்டின் தரையில், மாடி படிகட்டுகளில் பொருத்தும் போது சின்ன இடம் கூட அகலமாக தெரியும் என்கிறார்கள் இன்டீரியர் டிசைனர்கள்.

பியூட்டிபுல் பிரைட் வண்ணங்கள்!
எண்ணங்களை பிரதிபலிக்கும் வல்லமை வண்ணங்களுக்கு இருப்பதால், வீட்டுக்கு அடிக்கும் வண்ணங்களை தேர்வு செய்வதிலும், மாடர்னிட்டி கலந்திருக்க வேண்டும். சமகாலத்தில் அடர் நிறங்களை அடிப்பது வழக்கத்தில் இருந்தாலும். அதன் ஷேடுகளிலேயே அடுத்தடுத்த சுவர்களுக்கு வண்ணங்களை அடிக்கும் பழக்கம், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. ஆனால் இனி வரும் மாதங்களில் அக்வா புளூ, மஞ்சள், பெய்ஜ் மற்றும் கிரே நிறங்கள் அவ்விடத்தை நிரப்ப இருக்கின்றன. முக்கியமாக மஞ்சள் நிறம் இந்த ஆண்டிற்கான நிறமாக அறியப்பட்டிருப்பதால், அந்த நிறத்தின் ஷேடுகள் அதிகமாக பரிசீலிக்கப்படும்.

இடத்திற்கு ஏற்ற ரெடிமேட் அலமாரிகள்!
கட்டடம் கட்டும்போதே அலமாரிகளையும் சேர்த்து கட்டுவது, அந்த காலம். ஆனால் இப்போது மாடர்ன் அலமாரிகள் ரெடிமேடுகளாக கிடைக்கின்றன. இந்த ஆண்டில் அதையும் தாண்டி, கஸ்டமைஸ் அலமாரிகள் அதிகமாக பரிசீலிக்கபடும். விதம் விதமான லுக் தரும் அலமாரிகளுக்கு, வீட்டை அழகாக்குவதில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g