பொங்கலுக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் சம்பந்தம் இருக்கா?

பொங்கலுக்கும் ஹேர் ஸ்டைலுக்கும் சம்பந்தம் இருக்கா?

பொங்கல் மாதிரியான பாரம்பரியப் பண்டிகைகளுக்கு இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான், அந்த அலுப்பூட்டுகிற மூன்று கால் பின்னலையே போட்டுக் கொண்டிருப்பீர்கள்?

ஃப்ரீ ஹேர் ஸ்டைலும் இன்றைக்கு பழசாகிவிட்டது. எல்லோரும் நம்மையே வெறித்துப் பார்க்க வைக்கிற, புது ஹேர் ஸ்டைல்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதோ பின்னலின் பாரம்பரியமும், ஃப்ரீ ஹேர் ஸ்டைலின் மார்டனிட்டியும் கலந்த, இந்த ஹேர் ஸ்டைல்களை செய்து மகிழ்ச்சி பொங்க வலம் வாருங்கள்….

பின்னலோடு பிணைந்த போனி டெய்ல் (Braided ponytail)

தலைமுடியை முன் பின் என, இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். பின்பகுதி முடியை சேர்த்து வாரி, போனி டெய்ல் போடுங்கள். முன்பக்க முடியை நீங்கள் விரும்புகிற ஸ்டைலில் பின்னல் போட்டுக் கொள்ளலாம்.  நடு வகிடால் பிரித்து இரு புறமும் பின்னி, இரண்டு பக்க பின்னல்களையும் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்து, போனி டெய்லில் சேர்க்கலாம். இல்லையெனில் முன்பக்க முடியை மூன்று பகுதிகளாக பிரித்து, மூன்றிலும் தனித்தனியாக மூன்றுகால் பின்னல் போட்டு, மேல் வாக்கில் வரிசையாக படுக்க வைத்து, போனி டெய்ல் வரைக் கொண்டு வந்து கிளிப் செய்யுங்கள்.

காதோரங்களில் இருக்கும் முடியை படிய வாரி, போனி டெய்லோடு சேர்த்தால் சூப்பராக இருக்கும். அல்லது முன்பக்க முடியை வலது அல்லது இடது பக்கமாக சாய்த்து, ஒரே பின்னலாக்கி போனி டெய்லோடு இணைக்கலாம். எப்படி செய்தாலும்,  முன்புறத்தில் பின்னலும், பின்னே போனிடெய்லுமாக மிகவும் அழகான தோற்றம் தருவதாய் இருக்கும் இந்த ப்ரைடட் போனிடெய்ல்.

எதற்குப் பொருந்தும்? : இது லெஹங்காவிற்கு பக்கா பொருத்தமாக இருக்கும்.

பின்னலும் பின்னே கொண்டையும் (Front braid to bun)

ரெகுலரான கொண்டையை விட, இதில் மிக வித்தியாசமாக காட்சி அளிப்பீர்கள். முன்பக்க முடியில் வலது அல்லது இடது பக்கத்தில், ஃபிஷ்டெயில் ப்ரெய்ட்  போட்டுக் கொள்ளுங்கள். மற்ற முடிகளை சேர்த்து கழுத்தில் படியும் வகையில், தாழ்வாகவும் சற்று தளர்வாகவும் கொண்டை போட்டுக் கொள்ளுங்கள். கொண்டை பார்ப்பதற்கு கேஷுவலாகத் தோன்ற வேண்டும்.

எதற்கு பொருந்தும்?: டிசைனர் புடவைகள் மற்றும் கிராண்ட் கவுன்களுக்கு ஏற்ற ஸ்டைல் இது.

 கோபுரத்திற்கு பின்னே கொண்டை (Puff and Bun)

சமீபத்தில் சில விழாக்களுக்கு பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த ஹேர் ஸ்டைலில் கலக்கியிருப்பார்.  மிகவும் சிம்பிளான ஹேர் ஸ்டைல் இது.  முன்புறத்தில் பஃப் வைத்துக் கொள்ளுங்கள். பின்புற முடியில் திருத்தமாகப் பின்னல் போட்டு, பின்னர் கொண்டை போடுங்கள்.

எதற்கு பொருந்தும்?: ஷிபான், காட்டன், பட்டு என எதில் புடவை அணிந்தாலும், இந்த ஹேர் ஸ்டைல் போட்டுக் கொண்டால், அத்தனை பாந்தமாகவும் பந்தாவாகவும் இருப்பீர்கள். 

பின்னல் இருக்கும்…ஆனா இருக்காது (Pinned Back Hair)

இது நமக்குப் பழக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் தான். தலைக்கு குளித்தப் பின்னர் ஈரம் காய்வதற்காக, இரு பக்கங்களில் இருந்தும் கொத்து முடியை எடுத்து வந்து நடுவில் முடி போடுவோமே! அதன் செறிவூட்டப்பட்ட வடிவம் தான் இது. நெற்றியில் இருபுறமும் முடியை எடுத்துச் சுருட்டிக் கொண்டே வந்தாலும் சரி, பின்னல் போட்டுக் கொண்டாலும் சரி,  பின்பகுதியில் வைத்து கிளிப் செய்யுங்கள். முடியைத் தோளின் இருபுறமும் கத்தையாக எடுத்துவிடுங்கள். செம ஸ்டைலாக இருக்கும்.

எதற்கு பொருந்தும்?: இந்த ஹேர் ஸ்டைல், அனார்கலி மற்றும் குர்தா வகை உடைகளுக்கு சூட் ஆகும். தாவணி அணிபவர்களும் முயற்சிக்கலாம்.

நீர்வீழ்ச்சி மாதிரி ஒரு பின்னல் (Waterfall braid)

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்தவர்களுக்கு இது ஈஸியாக வரும். இந்த வகை ஹேர் ஸ்டைலை விவரிப்பது கடினம். ஆனால் யூ டியூபில் தேடினால், ஸ்டெப் பை ஸ்டெப்பாக விளக்கும் வீடியோக்கள் நிறைய கிடைக்கும்.  பார்க்க நேர்த்தியாக மிக அழகாக இருக்கும் இந்த ஹேர் ஸ்டைல், கலரிங் செய்யப்பட்ட முடிக்கு கூடுதல் அட்ராக்‌ஷனைக் கொடுக்கும்.

எதற்கு பொருந்தும்?: அனைத்து பண்டிகை மற்றும் விழாக்களுக்கும் ஏற்ற ஹேர் ஸ்டைல் இது.  எல்லா வகை ஆடைகளுக்கும் பொருந்தும்.

முடியால் செய்து கொள்ளுங்கள், ஒரு கிரீடம்!  (Side Braid With Braided Crown)

வலது அல்லது இடது பக்க ஓரத்தில் பின்னல் போட்டு, அதை மொத்தமாக  எதிர்பக்கத்துக்கு கொண்டு வந்து கிளிப் செய்யுங்கள். தலை மேல் அந்த பின்னல், ஒரு கிரீடத்தைப் போல அமர்ந்திருக்கும்.  பின்பக்க முடியை காதோரத்தில் ஃபிஷ் டெயில் பின்னலோ, உல்ட்டா பின்னலோ போட்டு ஃபினிஷிங் டச் கொடுங்கள்.

எதற்கு பொருந்தும்?: அனார்கலி அல்லது வெஸ்டர்ன் உடைகளுக்கு போட்டுக் கொள்ளலாம். 

– பி. கமலா தவநிதி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g