வுமென் இன் பிளாக் # கோல்டன் குளோப் விருதுகள் 2018

வுமென் இன் பிளாக் # கோல்டன் குளோப் விருதுகள் 2018

ஆஸ்கர் விருதுகள் விழாவுக்கு அடுத்தபடியாக, மிகவும் பிரபலமானது ‘கோல்டன் குளோப் விருதுகள்’ விழா! அந்த விழாவுக்கு, ஹாலிவுட் நட்சத்திரங்களை கலர்ஃபுல் ஆக, கவர்ச்சியாக வருவார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் எதிர்பாராத அதிர்ச்சியளித்தனர் நட்சத்திரங்கள்.

கோல்டன் குளோப் விருதுகள் எனப்படுவது, சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் விருதாகும். ஹாலிவுட் நட்சத்திரங்கள், டெலிவிஷன் பிரபலங்கள், சர்வதேச திரை பிரபலங்கள், ஊடகத்தினர்,  ஒன்று கூடும் இந்த விழா, இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் (ஹாலிவுட் நகரம்) நகரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. வழக்கமாக விருதுகளை வெல்பவர்கள், விருது பெறும் படங்களே இந்த நிகழ்வின் முதன்மை செய்தியாகும். மீடியா முழுவதும் அதைப் பற்றிய பேச்சே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நட்சத்திரங்கள் அணிந்துவந்த கருப்பு நிற ஆடைகளே விழாவின் அட்ராக்‌ஷன் ஆகவும், விவாதமாகவும் ஆகிவிட்டது.

இந்த வருடம் கதாநாயகிகள், பிரபலங்கள் அனைவரும் கருப்பு உடையில் வந்தனர். ‘வண்ணமயமான கொண்டாட்ட நிகழ்வில் கருப்பா?’ என்று கேள்வி எழலாம். ஹாலிவுட் திரையுலகில் தொடர்ந்துவரும் பெண்களுக்கு எதிரான பாலின வன்கொடுமைகள் அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து பல முன்னணி நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிரவும், இந்த விஷயம் பெரும் விவாதமாக இரண்டு மாதங்களாக தொடர்கிறது. ஹாலிவுட் திரையுலகில், பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்ப்பதன் அடையாளமாக, பாதிக்கப்பட்டவர்களோடு ஒற்றுமையாக நிற்கும் ‘டைம்ஸ் அப்’ இயக்கத்திற்கு ஆதரவாக நடிகைகள் கருப்பு நிற உடைகள் அணிந்து வந்திருந்தனர்.
பல ஆண்களும் கூட கருப்புச் சட்டையுடன் டைம்ஸ்-அப் பேட்ஜ் அணிந்திருந்தனர்.

இந்த கருப்பு உடைகளிலும் கூட, ஹாலிவுட் அழகிகள் தங்களின் பேஷன் ஸ்டைலில் சக்கைப் போடு போட்டனர். கேப் கவுன், பிளங்கிங் கவுன், ஹவர் கிளாஸ் கவுன் மற்றும் ஹாப் ஷோல்டர் கவுன் போன்ற ஆடைகளையே நடிகைகள் அதிகமாக அணிந்து வந்தனர். அதைப் பற்றிய தொகுப்பு உங்களுக்காக…

கெல்லி க்ளார்க்சன் 

சிறந்த பாடகர், பாடலாசிரியர், நடிகை மற்றும் எழுத்தாளர் என பன்முகத் திறமைக் கொண்ட கெல்லி அணிந்து வந்த ஆடை, சிவப்புக் கம்பளத்தை அழகாக அலங்கரித்தது. கிரிஸ்டியன் சிரியானோவின், லாங் ஹேண்ட் பால் கவுனில் வந்து அசத்தினார். அதில் இடைப்பகுதியில் அதிகப்படியான பிளேர்கள் வைத்து விரிந்து காணப்பட்டது. மேலும் கோல்டன் குளோப் விருதின் குறியீடாக,தங்க நிற கிளிட்டர் ஸ்டைலில் கைகள் வைத்து தைத்திருந்தது, மிக அழகாக இருந்தது.

கெண்டல் ஜென்னர் 

மாடல் உலகின் இளவரசியான கெண்டல், இத்தாலிய டிசைனரான ஜியாம்பட்டிஸ்டா வல்லியின் உடையில் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார். ஹை லோ லாங் கவுன் உடையில், ஹாப் ஷோல்டரில் முன் பகுதியில் அதிக பிளீட்டுகள் வைத்து, காண்பதற்கு பால் கவுனில் பியூஷன் ஸ்டைலில் இருந்தது. பின்புறம் மிக நீளமான துணி வைத்து தைத்திருந்தது. அவர் ரெட் கார்பெட்டை கருப்பு உடையில் அலங்கரித்து வண்ணமயமாக மாற்றிவிட்டார்.

ஏஞ்சலினா ஜோலி 

ரெட் கார்பெட்டுகளில் அதிகம் தலை காட்டாத ஏஞ்சலினா, தனது எதிர்ப்பை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, வளர்ப்பு மகன் பாக்ஸ் ஜோலி பிட்டையும் (14) கருப்பு உடையில் அழைத்து வந்தார். அவர், லாங் கவுன் வித் கேப் டாப் அணிந்து வந்தார். கேப் டாப்பின் கைகளின் முனையில் ஃபெதர்கள் கொண்ட டிசைன் வைக்கப்படிருப்பது ஆடைக்கு அழகைச் சேர்த்திருக்கிறது.

ஓப்ரா வின்ஃபிரே 

டெலிவிஷனிலும் மேடைப் பேச்சுகளிலும் விளாசும் ஓப்ரா, ஹவர் கிளாஸ் கவுனில் வந்து அசத்தினார். ஆடையில் எந்த வித டிசைன்களும் இன்றி, கழுத்துப் பகுதியில் மட்டும் கிளிட்டர் தோற்றத்தில் பளிச்சிட்டது. அதற்கு மேட்சாக பிளாக் கோட்டட் ஒவல் ஷேப் ஃபிரேம் கிளாஸ் அணிந்திருந்தது, அவரின் தோற்றத்தை மேலும் அழகாக்கியிருந்தது.

கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹாலிவுட்டின் முக்கிய நட்சத்திரமான கேத்தரின் நிகழ்ச்சியில் அனைவரையும் தன் வசம் ஈர்த்தார். ஸுஹைர் முராட் கோட்டூர் கவுனில் பிரம்மிக்க வைத்துவிட்டார். அதில் ஷீர் எம்பராய்டரி வைத்து பிளங்கிங் நெக்லைன் டிசைன் செய்திருப்பது ஆடைக்கு ஏற்றதாக இருந்தது. மொத்தத்தில் ஆடை டிரான்ஸ்பிரன்ஸி தோற்றத்தில் இருந்தது. அதற்கு ஏற்ற ஸ்டேட்மெண்ட் காதணிகள் சிறந்த தேர்வு.

 

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g