இந்தியாவின் சுவை: மேதகு மேகாலயா உணவுகள்!

இந்தியாவின் சுவை: மேதகு மேகாலயா உணவுகள்!

வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மட்டுமல்ல, உணவு வகைகளும், உணவு முறைகளும் கூட இந்திய பெருநிலத்திலிருந்து வேறுபட்டவை. மேகாலயா மாநிலம், அளவில் சிறியது என்றாலும், தனக்கென தனித்த உணவு முறைகளை கொண்டது.

மேகாலயா மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தவர்களாகவே உள்ளனர். மலை மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள மேகாலயாவில், வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, சணல், இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, மிளகு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றன. பழத்தோட்டங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் மேகாலயாவில் அதிகம் காணப்படுகின்றன.

அரிசி, மீன் மற்றும் இறைச்சிகள் மேகாலயா மக்களின் முதன்மையான உணவுகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இவை இல்லாமல் சோளம், கிழங்கு மற்றும் சிறுதானியங்களையும் விரும்பி உண்கின்றனர். மீன் கொண்டு தயாரிக்கப்படும் சட்னி, மேகாலயாவில் மிகவும் பிரபலம். காய்கறிகளை அவற்றின் வேருடன் சேர்த்து சமைக்கும் பழக்கமுடையவர்கள். மூங்கிலும் மேகாலயா மக்களின் விருப்பமான உணவாகும். மூங்கில் குருத்து கொண்டு சுவையான கறியை சமைக்கின்றனர்.

மேகாலயாவில் உள்ள வெவ்வேறு இன மக்களின் உணவு முறைகளின் அடிப்படையில், அவர்களின் உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கரோ, காசி மற்றும் ஜெயின்டியா. கரோ வகை உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிமையானவை. காய்ந்த மீன் கொண்டு தயாரிக்கப்படும் நகாம் பிட்சி, மிகவும் புகழ்பெற்ற கரோ வகை உணவாகும். அரிசியினால் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் காசி என அழைக்கப்படுகின்றன. ஜடோ, ஜஸ்டெம் ஆகியவை பிரபலமான காசி உணவுகள். காளானில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், ஜெயின்டியா எனப்படுகின்றன. ‘டிட் துங்’ மேகாலயாவில் விரும்பி உண்ணப்படும் ஜெயின்டியா வகை உணவு. சாதத்தை புளிக்கவைத்து தயாரிக்கப்படும், கியாத் எனும் பானம் மேகாலயாவில் மிகவும் பிரபலம்.

மேகாலயாவின் பாரம்பரிய உணவு வகைகளில் சில :

ஜடோ

மேகாலயாவில் உள்ள காசி எனும் குறிப்பிட்ட சமூகத்து மக்களால் தயாரிக்கப்படும் அரிசி உணவு, ஜடோ. அரிசி, இறைச்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிகுந்த காரத்துடன் ஜடோ உணவு சமைக்கப்படுகிறது.

மேகாலயா செல்பவர்கள் ஜடோ உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த உணவு பிரியாணியின் சுவைச் சாயலைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பிரியாணியைவிட ரொம்ப கலர்புல்லாக இருக்கும்.

 

மேகாலயா கியாத்

மேகாலயா மக்களின் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களை, கியாத் பானம் இல்லாமல் பார்க்க முடியாது, முழுமையும் பெறாது. அந்த அளவிற்கு அவர்களின் வாழ்வோடு ஒன்றியது மேகாலயா கியாத். சோற்றை புளிக்கச் செய்து, அதிலிருந்து கியாத் பானம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகள் மற்றும் பிளேவர்களில் தயாரிக்கப்படும் இந்த பானத்தை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி அருந்துகின்றனர்.

 

நகாம் பிட்சி

மற்ற மேகாலயா உணவு வகைகளைவிட, நகாம் பிட்சி சூப்பை தயாரிப்பது மிகவும் எளிதானது. மேகாலயாவில் மிகவும் புகழ் பெற்ற இந்த சூப், நன்றாக சாப்பிட்ட பின்பு அருந்த வேண்டியது. நகாம் பிட்சி சூப், காய்ந்த மீன் (கருவாடு) கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக மீன்களை தேர்ந்தெடுத்து காய வைக்கின்றனர். அதிக அளவு காரம் சேர்த்து மிகவும் சுவையாக இந்த சூப் தயார் செய்யப்படுகிறது.

 

டோக்லி

மிகவும் புகழ்பெற்ற அசைவ சாலட் டோக்லி. இறைச்சி, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து இந்த சாலட் தயார் செய்யப்படுகிறது. சருமத்திற்கு நன்மை தரக்கூடியது என நம்பப்படுவதால், டோக்லி மீது ஈர்ப்பு அதிகம்.

பீன்ஸ், தக்காளி, கேரட் ஆகியவற்றையும் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேக வைத்து பதமாகத் தயாரிக்கப்படும் உணவு என்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.

 

துங்கிரிம்பை

மேகாலயாவில் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் புகழ்பெற்ற அசைவ உணவு, துங்கிரிம்பை. இறைச்சி, பீன்ஸ் மற்றும் எள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது.

இறைச்சி, பீன்ஸ் இரண்டையும் வேக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து, அதனை அரைத்து எடுத்துக் கொண்டு, வேக வைத்துள்ள பீன்ஸ் உடன் சேர்த்து, கடைசியாக இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இஞ்சி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

புக்லின்

அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படும் மேகாலயா மக்களின் புகழ் பெற்ற இனிப்பு உணவு புக்லின். புக்லின் தயாரிக்க மாவு அங்குள்ள கடைகளில் கிடைக்கிறது. மாவுடன் தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்யை சூடுபடுத்தி அதில் சர்க்கரை சேர்த்த மாவை இட்டு பொன் நிறத்திற்கு பொறித்து எடுக்கின்றனர். பண்டிகை நாட்களின் சிறப்பு உணவு இது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g