2018ல் டிரெண்ட் ஆகப்போகும் உணவுகள்!

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு உணவு டிரெண்டிலும் அது பிரதிபலிக்கும்.

ஒவ்வொரு புது வருடத்தின் போதும் நிறம், உடை, வாகனம், மேக் அப், உணவு என எல்லாவற்றிலும் புது டிரெண்ட் உருவாக்கிவிடுகிறார்கள்.  அதெல்லாம் சரி… அதென்ன உணவில் டிரெண்ட் என்று கேட்கிறீர்களா?  வேறொன்றும் இல்லை, நாம் உட்கொள்ளும் உணவானது,  உடல் எடையை கூட்டாமலும், நோய்கள் தாக்கும் வாய்ப்பை குறைக்க உதவுவதாகவும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.  அந்த அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான உணவுகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அந்த வகையில் ஆரோக்கிய சிந்தனை கொண்டவர்களால் அதிகம் விரும்பப்படும் உணவுகள் பற்றி ஆராய்ந்தனர் ஐ.நா., ஆய்வாளர்கள். அந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், 2018ல் அதிகம் பேரால் விரும்பப்படப் போகும் ஆரோக்கிய உணவுகளை பட்டியலிடுகிறது, e1life.

 ஒவ்வாமையற்ற உணவுகள்

பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கோதுமை, பால், முட்டை, நட்ஸ் போன்ற சத்தான உணவுகள் கூட சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். அவர்களுக்கு அந்த உணவே ஒத்துக்கொள்ளாது.  நுகர்வோரின் தேவையை எப்போதும் லாபமாக மாற்றிவிடும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், மேலே சொன்ன பொருட்கள் கலக்காத உணவுப் பொருட்களை தயாரித்து விற்கத் தொடங்கிவிட்டன. ‘ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுகள்’ என்ற பெயரில்,  குளூட்டன் இல்லாத கோதுமை பண்டங்கள், பால் பொருட்கள் சேர்க்காத உணவுகள் எல்லாம் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன. அவ்வளவு ஏன்,  பால் பொருட்கள் சேர்க்கப்படாத சாக்லேட்டுகள் கூட தற்போது கிடைக்கின்றன.  ஆக, ஒவ்வாமை ஏற்படுத்தாத உணவுகளை இனி நீங்கள் வாங்கி, உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகள்

2017ல் ஆலிவ், அவகாடோ மற்றும் வால்நட் போன்ற இதயத்தை வலுவாக்கும் கொழுப்பு உணவுகள் பிரபலமானது.  இதயத்தை வலுவாக்கி நோய்கள் வராமல் தடுப்பதுடன், இவை கூடவே மற்றொரு நன்மையும் செய்கின்றன – அதுதான் பசியை தாமதப்படுத்துவது. இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனிகள், பானங்கள் அருந்துவது குறைகிறது. விளைவு, எடையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உணவிலுள்ள நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகள் பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா ஆராய்ச்சிகளும், ஒவ்வொரு வருடமும் உறுதிப்படுத்தும் விஷயம், வால்நட் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும்.  ஆகவே நல்ல கொழுப்பு கொண்ட மேலே சொன்ன அத்தனை உணவுகளும் உடல் நலனுக்கு நன்மையே செய்கின்றன. அதனால் தயங்காமல் அளவாக சாப்பிடலாம்.

வேர் முதல் தண்டு வரை

தினமும் சாப்பிடும் காய்கறிகளில், நீங்கள் வேண்டாம் என்று வெட்டி வீசுகிற தண்டுகளையும் வேர்களையும் இனி தாராளமாக சாப்பிட தொடங்கலாம்.  ப்ரக்கோலி மற்றும் காலிப்ளவர் தண்டுகள், பீட்ரூட் மற்றும் கேரட் மீது இருக்கும் செடி/தண்டு, உருளைக்கிழங்கின் தோல், இவற்றை வைத்து, நாளொரு புதுமையான ரெசிபி டிப்ஸ் தயாராகிக் கொண்டே இருக்கிறது.   இதுவரை தேவையில்லை என்று வெட்டி வீசப்பட்ட இந்த கிழங்கு மற்றும் காய்கறிகளின் பகுதிகள், சூப்பர்மார்கெட்டில் பேக்கேஜாக விற்பனைக்கு வரபோகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. இப்படியாக 2018ல், உங்கள் தினசரி உணவில் ஒரு உணவுத் தாவரத்தின் வேர் முதல் தண்டு வரை சமைத்துச் சாப்பிடும் முறை இடம்பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நொதிக்க வைக்கப்பட்ட காய்கறிகளும், வாசனைப் பொருட்களும் 

வீட்டிலேயே புளிக்கவைக்கப்பட்ட காய்கறிகள் தயாரிப்பது வெகுசுலபம்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,  நீங்கள் விரும்பும் காய்கறிகளை ஒரு ஜாடியில் நிரப்பவும். கருப்பு மிளகு, பூண்டு, அல்லது மஞ்சள் போன்றவற்றின் கலவைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு, வடிகட்டப்பட்ட தண்ணீரை ஊற்றவும். ஒரு கப் தண்ணீருக்கு, ஒரு டீஸ்பூன் கடல் உப்பை சேர்த்து மூடி, சூரிய வெளிச்சம் படாத குளிர்ச்சியான இடத்தில் ஜாடியை வைக்கவும். காய்கறிகள் நொதிக்க ஆரம்பிக்கும் என்பதால், தினசரி சில நிமிடங்கள் ஜாடியை திறந்து வாயுக்களை வெளியேற்றவும். ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்த பின், ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும். நொதிக்கப்பட்ட உணவு உடலுக்கு, குறிப்பாக சீரண மண்டலத்துக்கு நல்லது.      

ப்ரோபையோடிக் உணவுகள்

ப்ரோபையோடிக்ஸ் என்பது சில வகை நுண்ணுயிர்கள் அல்லது அந்த நுண்ணுயிர்கள் கலந்த உணவுகளை குறிக்கும். இந்த நுண்ணுயிர்கள் நம் உடலுக்குள் வாழ்ந்தாலும், நோய்களை உருவாக்குவதில்லை. மாறாக நோய்களை தடுப்பதுடன் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கின்றன. குறிப்பாக இவை ஜீரண மண்டலத்திற்கு நன்மை தரக்கூடியவையாக இருக்கின்றன. இதுவரை யோகர்ட் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் மட்டுமே இந்த ப்ரோபையோடிக் பாக்டீரியா சேர்க்கப்பட்டு வந்தது.  ஆனால், இந்த 2018ல் கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் தொடங்கி, கார்பனேற்றம் செய்யப்படும் பானங்கள் வரை எல்லாவற்றிலும் இந்த ப்ரோபையோடிக்ஸை சேர்க்கவுள்ளன, உணவு நிறுவனங்கள்.  நமது இரைப்பை-குடல் திசுக்களில் இந்த நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது, டைப்-2 நீரிழிவு நோய், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி குறைதல் மற்றும் மனச்சோர்வு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்தை குறிக்கலாம்.

புரோட்டீன் தயார் உணவுகள்

சத்துகளில் முதலிடம் பெறுவது உடலை உறுதிப்படுத்தி போஷிக்கும் புரோட்டீன்கள் தான்.   அது உடலில் பற்றாக்குறை ஆகும்போது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உருவாகக் காரணமாகிறது. நாம் எல்லோருமே தின்பண்ட பிரியர்கள் தான்.  வழக்கம் போல இந்த ஆண்டும், சந்தையை தாக்கும் புது புது தின்பண்டங்களுக்கு பற்றாக்குறையே இருக்காது. ஆனால் அதில் வெகுவானவை அதிகம் புரதச் சத்து கொண்டவையாகவே இருக்குமாம்.  யோகர்ட், காட்டேஜ் சீஸ் மற்றும் வேகவைத்த முட்டை போன்றவை போர்டபிள்  புரோட்டீனுக்கான சிம்பிள் உதாரணங்கள்.

– பி. கமலா தவநிதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g