பைகால் : நிலம் நடுவே விரிந்திருக்கும் நன்னீர் கடல்

பைகால் : நிலம் நடுவே விரிந்திருக்கும் நன்னீர் கடல்

ஒரு நாட்டின் பரப்பளவுக்கு இணையானது பைகால் ஏரியின் அளவு. கடல் போன்று பரந்து விரிந்திருக்கும் பைகாலின் அழகை ரசிப்பது ஓர் இணையற்ற அனுபவம்.

இப்பரந்த பூமிப்பந்தின் எண்ணற்ற அதிசயங்களில் ஒன்று, பைக்கால் ஏரி. உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் தென்கிழக்கு சைபீரியா பகுதியில் உள்ள பைக்கால் ஏரி, உலகின் மிகப் பழமையான மற்றும் ஆழமான நன்னீர் ஏரி. இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பைக்கால் ஏரியை, எதிர்கால கடல் என்றே புவியியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகின் ஐந்தில் ஒரு பங்கு நன்னீர் பைக்காலில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலைக்கு ஏற்ப மாறும் பைக்காலின் அழகு 

மிகப்பெரிய நீர்நிலை என்பதால் சைபீரியாவின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது, பைக்கால் பகுதியில் குளிர் சற்று குறைவாகவே உள்ளது. உச்சபட்ச குளிர்காலத்தில், இங்கு -21° செல்சியஸ் வெப்பநிலையும், ஆகஸ்ட் மாதத்தில் 11° செல்சியஸ் வெப்பநிலையும் காணப்படுகிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை இந்த ஏரி முழுவதும் உறைந்து, கண்ணாடி தரையைப் போன்று காட்சியளிக்கிறது. இந்த ஏரி அதன் கரைகளில் ஒரு அற்புதமான மைக்ரோ காலநிலையை உருவாக்குகிறது. அதை அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் அங்கே குவிகின்றனர்.

ஆறுகளும் தீவுகளும் பைகாலுக்குள் அடக்கம்

பைக்கால் ஏரியில் விழும் நீர், பெரும்பாலும் செலங்கா ஆற்றில் இருந்து வருகின்றது. மேலும், சுற்றியுள்ள மலைகளில் இருந்து 330 நதிகளும், ஓடைகளும் இந்த ஏரியில் நீரைக் கொட்டுகின்றன. பைக்கால் ஏரியில் இருந்து, அங்காரா நதி மூலம் வழியாக மட்டுமே நீர் வெளியேறுகிறது. இந்த ஏரியில் 45 தீவுகள் உள்ளன. இதில் மிகப்பெரிய தீவான ஒல்ஹோன் தீவில், இயற்கை எழில் கொஞ்சும் காடுகளும், புல்வெளிகளும் உள்ளன. அங்குள்ள மான்கள், பிரவுன் கரடிகள், பல்வேறு வகையான பறவைகள் பார்க்க வேண்டியவை. 45 தீவுகளில் 27இல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

பைக்காலின் பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்

பைக்கால் ஏரியின் நீளம், 640 கிமீ.! அதாவது சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்கின்ற தூரம். இதன் அகலம் 72 கிமீ, அதிகபட்ச ஆழம் 1,632 மீட்டர். நன்னீரில் வாழக்கூடிய தனித்துவமான 600 வகை தாவரங்களும், 1200 வகை விலங்குகளும் இந்த ஏரியில் உள்ளன. இதில் பாதிக்கும் மேல் பைக்காலில் மட்டுமே வாழ்பவை. மிகவும் தூய்மையான, தெளிவான நீர் என்பதால், 40 மீட்டர் ஆழத்தில் உள்ள தரையைக்கூட பார்க்க முடியும்.

எப்படி செல்வது? எவ்வளவு செலவாகும்?

சைபீரியாவில் இருந்து தொலைதூரத்தில் உள்ள பைக்கால் ஏரி, அடிக்கடி சுற்றுலா செல்லும் இடம் இல்லை. ஆனால் வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டிய அதிசயம். கடல் எப்போதும் பிரம்மாண்டம்தான். ஆனால் கடலில் சிறிது நேரத்திற்கு மேல் நீருக்குள் இருக்க முடியாது. அதன் உப்பு நீர், ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். பைக்கால், கடலின் பிரம்மாண்டத்தைக் கொண்ட சுத்தமான நீரைக் கொண்டது.

ஏரியைச் சுற்றி பல்வேறு தங்கும் விடுதிகள் இருந்தாலும், லிஸ்த்யங்கா கிராமம் சுற்றுலா பயணிகள் அதிகமாக தங்கும் இடமாக இருக்கிறது. இந்த இடத்துக்கு இர்குட்ஸ்க் நகர சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 2 மணி நேரப் பயணத்தில் சென்றடைய முடியும். அதேபோல் வடக்கு கரையோரம் உள்ள, சேவ்ரோபேகல்ஸ்க் நகரம் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் இடம். இதன் அருகே அழகான சிறு சிறு தீவுகள் உள்ளன. அதேபோல் பைக்கால் ஏரியின் மிகப்பெரிய தீவான ‘ஒல்ஹோன்’, சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது. இந்தத் தீவுக்குள் பல அழகிய கிராமங்கள் உள்ளன. தங்குவதற்கு 3000 ரூபாய் முதல் அறைகள் உள்ளன. உணவுக்கும் பெரிய செலவு ஆகாது. பாட்டிகள் சமைத்துக் கொடுக்கும் ஸ்மோக்டு பிஷ் தவறவிடக்கூடாத சுவையான உணவு. இந்தியாவிலிருந்து இர்குட்ஸ் நகரத்துக்கு, மூன்று மாதங்களுக்கு முன் டிக்கெட் புக் செய்தால், போய்வர சுமார் விமானக் கட்டணத்துக்கு மட்டும் (டெல்லியில் ⇔ இர்குட்ஸ்க்) 75,000 ரூபாய் செலவாகும். இர்குட்ஸ் நகரத்திலிருந்து 2 மணி நேரத்தில் பைக்கால் ஏரியை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g