ஆன்லைன் பணப் பரிவர்த்தனை… கேர்புல் டிப்ஸ்!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை… கேர்புல் டிப்ஸ்!

இணையம் வழி பணப் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல இணையம் சார்ந்த பணத் திருட்டும் பரவலாகி வருகிறது. இந்நிலையில், இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

* பொது இடங்களில் இருக்கும் வை-பை இணைப்புகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. நம்பகம் இல்லாத, பலரால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்கில், அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளில் இத்தகைய பரிவர்த்தனையை தவிர்த்தல் நலம்.
* அலுவலகம், பிரவுசிங் மையங்கள் என, பலர் பயன்படுத்தும் பொதுவான கம்ப்யூட்டர்களில் பணப் பரிமாற்றங்களை தவிர்த்துவிடுங்கள். முக்கிய, தனிப்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு, சொந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.
* பரிவர்த்தனையின் போது, ஒன் டைம் பாஸ்வேர்ட் முறையையே தேர்ந்தெடுக்கவும். மற்ற பாதுகப்பு முறைகளை விட இது அதிக பாதுகாப்பான முறை ஆகும்.
* இணைய முகவரியில், https என்ற பாதுகாப்பு நெறிமுறை இருக்கிறதா என்பதைப் பார்க்கவும். இது அந்த இணையதளத்தில் பயனர் மற்றும் பரிவர்த்தனைத் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கான அங்கீகாரமாகும். பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கான தளங்களின் இணைய முகவரி இருக்குமிடத்தில், பச்சை நிற ஸ்டிக்கர் இருக்கும். தளத்தின் முகவரி http அல்லது www என்று ஆரம்பிக்காமல், https என்று ஆரம்பிக்கும்.
* மேம்படுத்தப்பட்ட வலிமையான பயர்வால் மற்றும் ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்தும்போது, ஹேக்கிங் அல்லது புதிய வகை மோசடி முயற்சிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

* பலருக்கு பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்வது கடினம் என்பதால், இணைய வழி வங்கிக் கணக்கிலிருந்து, கிரெடிட் கார்ட் பயன்பாடு வரை, பல்வேறு கணக்குகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவார்கள்.  இதனால் ஹேக்கர்கள் உங்கள் ஒரு பாஸ்வேர்டை களவாடினால், அதை வைத்தே உங்கள் அனைத்து கணக்குகளையும் கையில் எடுத்துக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், ஒவ்வொரு பாஸ்வேர்ட் பயன்படுத்துவதே சிறந்தது.

தன்யதீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g