ஒன் ஸ்டெப் அஹெட் டூரிஸம்: அப்படீன்னா என்ன?

ஒன் ஸ்டெப் அஹெட் டூரிஸம்: அப்படீன்னா என்ன?

சுற்றுலாவைப் பொருத்தவரை, ஒரு நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அங்குள்ள பிரபலமான நகரங்களுக்கும், பாப்புலரான சுற்றுலா தலங்களுக்கும் தான் செல்கிறோம். அப்படிச் செல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் போகின்ற இடத்தில், அவ்வளவாக அறியப்படாத ஆனால் சுவாரஸ்யமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் சிலருக்கு தான் இருக்கும். அப்படிப்பட்ட சுற்றுலாவை ‘ஒன் ஸ்டெப் அஹெட்’ டூரிசம் என்கிறார்கள். இந்தியாவில் அதிகம் அறியப்படாத பகுதிகள் சிலவற்றை உங்களுக்காக பட்டியலிடுகிறது, e1 லைப்.

1. மஜுலி, அஸ்ஸாம்

அஸ்ஸாம் செல்பவர்கள் காசிரங்கா தேசிய பூங்கா, கமாக்யா கோயில், உமாநந்தா கோயில், டிபோர் பில் வனவிலங்கு சரணாலயம் போன்ற அனைவரும் அறிந்த பகுதிகளுக்கு செல்வதே வழக்கம். மஜூலி, பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள ஓர் அழகான ஆற்றுத் தீவு. இந்த நிலத்தோற்றத்தின் அழகு உங்களை மெய்மறக்கச் செய்யும். மூச்சடைக்கும் இந்த அழகுடன் சேர்ந்து கலச்சார கொண்டாட்டங்கள், வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், மக்களின் உபசரிப்பு ஆகியவை உங்களை அவ்விடத்தின் மீது காதல் வயப்படுத்தும்.

2. தார்காலி கடற்கரை, மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில், தார்காலி கடற்கரை மும்பைக்கு மிக அருகில் இருந்தாலும் அதிகம் அறியப்படாத இடம். மும்பை செல்பவர்கள் நகரின் முக்கிய சுற்றுலா தலங்களான கேட்வே ஆப் இந்தியா, ஜுகு கடற்கரை, மரைன் டிரைவ், பிரியதர்ஷினி பார்க் போன்ற கமர்சியலான இடங்களுக்கு செல்வதையே விரும்புவர். சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள இந்த கடற்கரையில் அலைகள் கடுமையாக இருக்கும். சுத்தமான கடல்நீரும், மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதும் இதன் சிறப்புகள். 1,800 ரூபாய்க்கு தனியாக ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு டால்பின்களை பார்வையிடச் செல்லலாம். கோல்டன் ராக்ஸ், சுனாமி தீவுகளுக்கு செல்லலாம். அங்கு ஸ்நோர்கிளிங் போன்ற வாட்டர் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை மேற்கொள்ளலாம்.

3. லெப்ச்சஜகட், மேற்கு வங்காளம்

மேற்கு வங்க மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தளம் டார்ஜிலிங். அங்கு ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால், அழகிய லெப்ச்சஜகட் கிராமத்தை அடையலாம். லெப்ச்சா இன பழங்குடி மக்களின் வாழ்விடமான இது, டார்ஜிலிங்கில் இருந்து சுமார் 19 கிமீ தொலைவில் உள்ளது. மேற்கு வங்க வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தில், பைன், ஓக் மரங்களின் பசுமையும், கஞ்சன்ஜங்கா சிகரத்தின் குளிரும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். மாசற்ற இந்த சுற்றுச்சூழல் உங்களுக்கு கிடைக்கும் பரிசு.

4. ஓர்ச்சா, மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் கோட்டை, ஜெய் விலாஸ் மஹால், மகாதேவா கோவில், தேவி ஜெகதாம்பா கோவில் போன்ற இடங்களுக்கு தான் மக்கள் அதிகமாக செல்வார்கள். பேத்வா நதிக்கரையில் உள்ள ஓர்ச்சா ஒரு காலத்தில் பந்தல்கண்ட் பேரரசின் தலைநகராக இருந்த இடம். இங்குள்ள கோட்டை மற்றும் கோவில்களின் கட்டடக்கலை உங்களை வியப்பில் ஆழ்த்தும். ஜஹாங்கீர் மஹாலின் பிரதிபலிப்பை நதியில் பார்க்கும் அழகே தனி.

5. பாங்கோங் சோ, ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் சுற்றுலா மிகப் பிரபலம். லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் சோ ஏரி அதிகம் அறியப்படாத இடம். இந்த ஏரி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொதுவான இடம். ஏரியின் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவுக்கு சொந்தம். சூரிய ஒளி இந்த ஏரியில் பட்டு மின்னுவது வாழ்வில் தவறவிடக் கூடாத காட்சியாகத் தோன்றும். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிக்கு முறையான அனுமதி பெற்று செல்ல முடியும். கடும் குளிரை தாங்கும் மன உறுதி இருந்தால் உலகின் அழகுகளில் ஒரு சிறுதுளியை ருசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g