இரண்டாவது ஹனிமூனுக்கு ரெடியா?

இரண்டாவது ஹனிமூனுக்கு ரெடியா?

நடுத்தர வயது தம்பதியினர்,  ‘செகண்ட் ஹனிமூன்’ என்று தனியே சுற்றுலா சென்றுவரும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது, ஏனென்றால்….! 

எம்.என்.சி., நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த அன்பழகனுக்கும், அவருடைய கிளயண்ட் நிறுவனத்தில் வேலை செய்த தான்யாவுக்கும் காதல் மலர, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். அன்பழகன்-தான்யா தம்பதியினரின் மணவாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே தொடங்கியது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்ட தம்பதியராக இருந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரோஹித் பிறந்துவிட்டான். தங்களின் பொறுப்பு அதிகரித்து விட்டதாக நினைத்த இருவரும், சொந்த வீடு வாங்க வேண்டும், குழந்தையை உயர்தர பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கத் தொடங்கினர். இப்போது திருமணமாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டது. அவர்கள் நினைத்தபடி வங்கி லோன் போட்டு வீடு வாங்கியாகிவிட்டது, மகனை நல்ல பள்ளியில் சேர்த்தாகிவிட்டது. குடும்பத்தினர், நண்பர்கள் இடையே இவர்களுக்கு நல்ல மதிப்பும் உருவாகிவிட்டது. ஆனால், தங்களிடையே ஏதோ ஒன்று ‘மிஸ்’ ஆவதாக நினைக்கத் தொடங்கிவிட்டார் தான்யா.

அலுவலகத்துக்கு செல்வது மட்டுமல்லாமல், தினசரி வீட்டு வேலைகள், மகனை பள்ளிக்கு தயார் செய்தல், இதர அவசியமான வேலைகளை கவனித்தல் என பரபரப்பாக போனது தான்யாவுக்கு. அன்பழகனுக்கோ அலுவலகத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும் என்றாலும், நேரம் கிடைக்கும் போது வேலைகளை கொஞ்சம் பகிர்ந்துகொள்வதுண்டு. இருவருக்கும் பொதுவாக சண்டைகள் வருவதில்லை. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்துச் சென்றாலும், தான்யாவின் மனத்தில் ஏற்பட்ட அந்த வெற்றிடம் நாளுக்கு நாள் பெரிதாகியது.

இதேபோன்ற மனநிலைதான் அன்பழகனுக்கு என்றாலும், அதை நிதானித்து உணர்ந்து பார்க்க நேரமில்லை. இந்த நிலையில் தான், எப்போதும் ஸ்மார்ட்போனுடன் இருக்கும் மனைவியை கவனிக்கத் தொடங்கினார் அன்பழகன். சந்தேகமாக இல்லையென்றாலும், எரிச்சலாக உணர்ந்தவர் நண்பருடன் தன் கவலையை பகிர, மீண்டும் ஹனிமூன் சென்று வாருங்கள் என்று அறிவுறுத்தினார் நண்பர். “என்னது மீண்டும் ஹனிமூனா? பத்து வயது குழந்தையை வைத்துக்கொண்டா?” என்று அன்பழகன் கேட்ட அதே கேள்விகள் உங்களுக்கும் தோன்றியிருக்கும். அன்பழகன் – தான்யாவுக்கு மட்டுமல்ல, நடுத்தர வயதிலுள்ள தம்பதியர் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டும் ‘இரண்டாவது ஹனிமூன்’ பயணம் என்கிறார்கள், குடும்பநல ஆலோசகர்கள்.

ஏன் வேண்டும் ‘செகண்ட் ஹனிமூன்’?

திருமண வாழ்க்கையில், சில ஆண்டுகளுக்கு பிறகு சுவாரஸ்யம் குறைந்து போவதும், உறவில் நம்பிக்கையும் ஈர்ப்பும் குறைய தொடங்குவதும் இயல்பு தான். குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக் கடமைகள், கணவன்-மனைவி இருவரிடையே இடைவெளியை உருவாக்கிவிடுகின்றன. இதனால் அன்னியோன்யம் குறைந்து ஒருவகை இயந்திரத்தனமான வாழ்க்கை இயல்பாகிவிடுகிறது. நடுத்தர வயது தம்பதியினராக இருந்தால், நீங்களும் இதை உணர்ந்திருப்பீர்கள்.

இந்த நிலையில், உங்கள் இருவரையும் கவர்ந்த விஷயங்களை, ஒன்றிணைத்த காரணங்களை, இணையர் இருவரும் மீண்டும் நினைவூட்டி உணர்ந்துகொள்ள ‘தனிப்பட்ட நேரம்’ தேவை. உங்கள் இருவருகிடையிலான அக்கறையை புதுப்பிக்க, இருவரும் ஒருவருக்கொருவரை ஒப்புக்கொடுக்க, முன்னொரு காலத்தில் நீங்கள் உணர்ந்த அதே காதலையும் நெருக்கத்தையும் மீண்டும் மலர்ச்சி பெறச் செய்வதற்கு வேண்டும், இரண்டாவது தேனிலவு. அவ்வளவு ஏன், அன்றாட வாழ்க்கைச் சூழல் உங்கள் காதலையும் அதன் கவர்ச்சியையும் அழுத்தி மழுங்கச் செய்வதை தவிர்க்க விரும்புவீர்கள் அல்லவா? அப்படியானால், நிச்சயம் நீங்கள் போக வேண்டும், இரண்டாவது ஹனிமூன்.

பல தம்பதியருக்கு, ஒரு திரைப்படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பதற்கு, ஓர் இரவை ஒதுக்குவதுகூட நடைமுறை சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. அப்படியானால், தினசரி வாழ்க்கையின் சிக்கல்களுக்கு அப்பால், துணைவருடன் மட்டும் சில நாட்களை ஒன்றாக செலவிடுவதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு வாரம் இல்லையென்றால் சில நாட்களாவது, அதுவும் முடியவில்லை என்றால் இரண்டு நாட்களாவது, அதுகூட முடியாதவர்கள் ஒரு நாளாவது ஒதுக்கலாம்…இதில் முக்கியமான விஷயம், அந்த நேரம் முழுவதும் உங்கள் உறவுக்காக முழுவதுமாக அர்ப்பணிக்கப்பபட வேண்டும்.

அந்த தேனிலவு இடம் வெகுதொலைவில் இருக்க வேண்டும் என்பதில்லை. அன்றாட தொல்லைகளில் இருந்து விலகியிருக்கச் செய்தால் போதுமானது. நீங்கள் வெகு தொலைவுக்கு போக வேண்டுமென்பதில்லை. உங்களால் தொலைதூர இடங்களுக்கு போக முடியவில்லையெனில், அருகில் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… ஒருவரை ஒருவர் உணர்வது மனத்தால், அதனுள் இருக்கும் உணர்வுகளால் தவிர, வெளிக் காரணிகளால் அல்ல. எந்த இடையூறுகளும் இன்றி ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டு, நிபந்தனைகளின்றி அன்பைப் பாரிமாறிக்கொள்ள வசதியான இடம் எதுவானாலும், அது போதுமானதுதான்.

காதலை மீட்டெடுக்கும் பயணம்

நெருக்கடியான குடும்ப பட்ஜெட், மாதாந்திர கட்டணங்கள், குழந்தைகள், பள்ளி, அலுவலகம், சர்வீஸ் தேவைப்படும் பைக், பழுதான ஃபோனின் டச் ஸ்கிரீன், இப்படி காதலை புதுப்பிக்கும் இரண்டாவது ஹனிமூனுக்கு செல்ல ஆயிரம் தடைகள் இருக்கலாம். அவற்றை சமாளிப்பத்து கடினமானதாகவும் இருக்கலாம். எனினும், உங்கள் உறவை வலுப்படுத்த, ஒருவரை ஒருவர் மீண்டும் புரிந்துகொள்ள, தனியே நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம்.

அதற்கான நேரத்தை அளிக்கும் பயணத்தை ஏற்பாடு செய்ய முடிந்தால், உங்கள் முதல் ஹனிமூனின் பரவச உணர்வுகளைகூட, இப்போது உங்களால் மீட்டெடுக்க முடியும். உங்கள் துணைவருடன் நீங்கள் கழித்த அந்த ஆரம்பகால நாட்களை, தேனிலவு அனுபவங்களை ஆர்வமுடன் நினைவு கூர்வது, ஒருகாலத்தில் கொழுந்துவிட்டெரிந்த உங்கள் உள்ளத்து காதல் தீயை மீண்டும் சுடர்விடச் செய்யும். ஒருவரின் கண்களை மற்றவர் ஏறிட்டுப் பார்த்து, அமர்ந்து, பேசி, உங்களின் ஆர்வங்களை மீண்டும் பகிர்ந்துகொள்வதைப் போன்ற ஓர் அற்புத அனுபவம் வேறில்லை. குழந்தை பருவத்து நினைவுகளை, கடந்தகாலத்தில் சென்று வந்த இடங்கள் பற்றிய அனுபவங்களை நினைவூட்டி மகிழ்வது எல்லாமே இப்போதுதான் சாத்தியம். இந்த அனுபவங்கள், உங்கள் துணைவரை மேலும் அறிந்து உணர்ந்துகொள்ள உதவும்.

இந்தப் பயணத்தில், தற்காலிகமாகவேனும் கடமைகள் மறந்து, சுமையற்ற இதயத்துடன் இருவரும் பரஸ்பரம் கவனித்துக்கொண்டு, சுதந்திர பற்வைகளாக ஒன்றாக சுற்ற முடியும். ஆரம்பத்தில் சில மணிநேரம் உங்கள் உரையாடல் குழந்தைகள் பற்றி, தினசரி பிரச்னைகள் பற்றி, கட்டணங்கள் பற்றி, வேலை பற்றி இருக்கலாம். ஆனாலும் கவலை வேண்டாம். பிறகு தானாகவே ஒருவர் மற்றவரின் நெருக்கத்தை ரசிக்கத் தொடங்கி விடுவீர்கள். துணைவரில் மூழ்கியே போங்கள். ஆரம்பத்தில் நீங்கள் காதலில் விழுந்த காரணத்தை மீட்டெடுங்கள்.

குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகலாம்

அதெல்லாம் சரிதான், ஆனால் குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி தனியே செல்வது? அது சுயநலமில்லையா என்றுகூட தோன்றும். அதில் தவறொன்றுமில்லை. குழந்தைகளை வீட்டுப் பெரியவர்களிடமோ அல்லது நம்பிக்கையானவர்கள் பொறுப்பிலோ விட்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போதுதான், உங்களின் முடிவில்லா கடமைகளில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆரோக்கியத்துக்காக, இருவரின் நலத்துக்காக, உங்கள் திருமண பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக, சில நாட்களை முழுமையாக செலவிட முடியும்.

அப்படியும் சில தம்பதியர் வீட்டை விட்டுவிட்டு அல்லது குழந்தைகளை விட்டுவிட்டு பயணிக்க மாட்டார்கள்.  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், குழந்தைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நீங்கள் அவர்கள் மீது கவனம் செலுத்துவதை போல, உங்கள் உறவின் மீதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்யும்போது, உண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறீர்கள். உண்மையான காதலை பற்றியும், அதற்கு அளிக்க வேண்டிய கவனிப்பின் அவசியத்தையும், பின்னொரு காலத்தில் அவர்கள் வளர்ந்த பின்பு புரிந்துகொள்வார்கள். உங்கள் இருவருக்கிடையில் மீண்டும் அதிகரிக்கும் அன்பும் நெருக்கமும், குடும்பத்தை வலுப்படுத்தும். இதைவிட வேறென்ன நல்ல விஷயத்தை உங்கள் குழந்தைகளுக்கு அளிக்க முடியும்?

பார்வையை விசாலப்படுத்தும்

வீடு, அலுவலகம், என்று ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு, குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், டிவி, ஃபோன், இவற்றுக்கு அப்பால், எண்ணற்ற புதிய மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதோ, தங்களின் வட்டத்துக்கு அப்பால் தான் உலகம் பரந்து விரிந்திருக்கிறது என்பதைப் பற்றி யோசிக்கவோ நேரம் இருப்பதில்லை. இதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் அளிக்கும். மனதுக்குள் அழுந்தியிருந்த எண்ணங்களும் விருப்பங்களும் ரிலாக்சாக இருக்கையில் தான் வெளிப்படும். புதிய மனிதர்களுடன் பழக, சுற்றியிருக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும், கலாசாரங்களையும் அறிந்துகொள்ள இது உதவும். முடிவாக, வாழ்க்கை மீதான பற்றையும், தன்னம்பிக்கையையும் இந்த ஹனிமூன் பயணம் அதிகரிக்கும்.

முதல் ஹனிமூன் சொதப்பலை சரி செய்யுங்கள்

சிலருக்கு இதை ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருக்கலாம். ஆனால், முதல் ஹனிமூன் பயணம் முழுவதையும் பரவசமாக அனுபவித்த அதிர்ஷ்டசாலிகள், உண்மையில் வெகு சிலராகவே இருப்பார்கள். ஹனிமூன் என்றாலே, சுதந்திர வானில், இன்பமாக சிறகடித்துத் திரியும் பறவைகளின் அனுபவமாக, இடையூறுகளின்றி இன்பத்தை துய்த்த அனுபவமாக பொதுவாக தோன்றலாம். ஆனால், உண்மையில் டென்ஷனான தருணங்கள் அவை. திருமண ஏற்பாடுகளால் ஏற்பட்ட மன அழுத்தமும், உடல்சோர்வும் வடிவதற்கு முன்பாகவே, பெரிய எதிர்பார்ப்புகளை சுமந்து செல்லும் ஹனிமூனில், ஏமாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அது ஒரு திருப்தியற்ற அல்லது குறைகள் கொண்ட நினைவுகளாக இன்னமும் உங்களை துரத்திக் கொண்டிருக்கலாம். ஏன் அந்த அதிருப்தியை இன்னும் தொடர அனுமதிக்க வேண்டும்? அதை இனிமையான அனுபவமாக மாற்ற மீண்டும் செல்லுங்கள் ஹனிமூனுக்கு.

வாழ்க்கையில் ஒருமுறை தான் தேனிலவு செல்ல வேண்டுமென்று யார் சொன்னது? ஆரோக்கியமான, நீண்டகாலம் இணைந்து வாழும் தம்பதியினருக்கு தெரியும், ஒன்றாக பயணிப்பது அவர்களின் உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்று. யாருக்கு தெரியும், இனி வரப்போகும் பல தேனிலவுகளில், இந்த இரண்டாவது தேநிலவு முதலாவதாக இருக்குமோ என்னவோ?

இணைந்து திட்டமிடுங்கள்

இரண்டாவது ஹனிமூன் பயணம் செல்வதென்று இருவரும் முடிவு செய்தபின்னர், எங்கு செல்வது, எப்போது செல்வது, என்னவெல்லாம் செய்வது என்பதை கணவன், மனைவி இருவரும் இணைந்தே திட்டமிடுங்கள். குழந்தைகளை பார்த்துக்கொள்வது, இதர விஷயங்களை கவனிப்பது போன்ற ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக சற்று முன்கூட்டியே திட்டமிடுங்கள். இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிகை, காதல், புரிந்துணர்வு, இவற்றை மேலும் அதிகரிக்க அஸ்திவாரம் இடுவதாக, இரண்டாவது தேனிலவை திட்டமிடுங்கள். சுற்றிப்பார்த்தலைவிட, சேர்ந்து இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் பயண ஏற்பாட்டை செய்யுங்கள். போட்டிங், டிரெக்கிங், ஸ்கூபா டைவிங், ஸ்கீயிங், இப்படி ஏதாவதொரு சாகச விளையாட்டு உங்கள் பயணத்திட்டத்தில் இருக்கட்டும்.

அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் கொஞ்சம் தனிப்பட்ட வெளியை அனுமதியுங்கள். நீங்கள் தனியே ஒரு இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் துணைவர் தனியே ஷாப்பிங் செய்யட்டும். இது ரிலாக்சாக உணரச்செய்து நெருக்கத்தை அதிகரிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹனிமூன் பயணத்தில் துணைவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க ஒரு சர்ப்ரைஸ் பரிசு அவசியம் இருக்கட்டும்.

இரண்டாவது ஹனிமூனை அனுபவித்து, அதன் பலன்களை உணர்ந்த பின்னர், நீங்களே அடுத்த பயணத்தை திட்டமிடத் தொடங்கிவிடுவீர்கள். அது சில மணிநேரங்கள், சில நாட்கள், ஒரு வாரம் என எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். மீண்டும் அந்த அனுபவம் வேண்டும். அவ்வளவே. அதற்காக உங்கள் இருவருக்கிடையிலான உறவு சீர்கெடும் வரையில் அல்லது உங்கள் ஆர்வம் இல்லாமல் போகும்வரை காத்திருக்க வேண்டாம். இதற்கு முன்பு ஹனிமூனே போயிருக்கவில்லை என்றாலும், இப்போது போய் வாருங்கள். உறவில் முதலீடு செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

–  செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g