கறுப்புப் பிடிக்காதா? கருத்தை மாத்திக்கங்க….

கறுப்புப் பிடிக்காதா? கருத்தை மாத்திக்கங்க….

கறுப்பு நிறம் அபசகுனமானது, அழகற்றது என யார் தான் பரப்பிவிட்டார்களோ…இன்றும் நம்மால் அந்த மூட நம்பிக்கையில் இருந்து வெளிவர முடியவில்லை.  இன்றும் இந்திய வீடுகளில் கருப்பு நிறம்  அமங்கலமானதாகத் தான் பார்க்கப்படுகிறது. அதனால் வீட்டிற்குள் நாம் கறுப்பை அனுமதிப்பதில்லை. ஆனால் இன்றைய இன்டீரியர் டிசைனர்கள், அந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்து கறுப்பின் பேரழகை பதிய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டிற்குள் அடிக்கும் வண்ணங்களில், கறுப்பு நிறத்தை முதன்மையானதாக மாற்றி இருக்கின்றனர், அழகியல் உணர்வு அதிகமுள்ள இன்டீரியர் டிசைனர்கள். அதனால் இன்றைய மாடர்ன் வீடுகளில், கறுப்பு நிறம் அதிகமான இடத்தை அலங்கரிக்க ஆரம்பித்திருக்கிறது.

“பிளாக் இஸ் பியூட்டிபுல் என்கிற தீம்களை நாங்கள் முன்னெடுப்பதற்கு காரணமே, அந்த நிறத்தில் இருக்கும் அழகுதான். உண்மையில் சொல்லப் போனால், கறுப்பு நிறம்தான் அனைத்து வண்ணங்களுக்கும் பொருத்தமான நிறம். வீட்டை அழகுபடுத்துவதற்காக கருப்பு நிறத்தைத் தேர்வு செய்யும் போது, அது ஒரு ‘கன்டம்பரரி லுக்’கை அளிக்கிறது.” 

– கே.வேலாயுதம்,  உரிமையாளர், கே.வி.இன்டீரியர்.

வெளிர் நிறங்களுடன், அதற்கு இணையான எதிர் நிறங்களை பயன்படுத்தும் போது வீட்டிற்கு வித்தியாசமான லுக் கிடைப்பதுடன், ஒருவிதமான பாசிடிவ் எஜர்ஜியை அது உருவாக்குவதாக இன்டீரியர் டிசைனர்கள் கருதுகின்றனர். அதனால்தான் இன்றைய வீடுகளில் இருக்கும் வரவேற்பு அறைகளின் சுவர்களில், அடர் நிறங்களை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு அறையில் மூன்று சுவர்களில் வெளிர் நிற பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தால், எஞ்சிய ஒரு சுவரில் கறுப்பு கலந்த அடர் நிறங்கள் அல்லது கறுப்பு நிறத்தை அடிப்பதால், பளிச் லுக் கிடைக்கிறது.

“கிரே, அடர் கிரே, வெளிர் சாம்பல் நிறங்கள் என கறுப்பு நிறங்களிலேயே பல ஷேடுகள் இருக்கின்றன. நேரடியான கறுப்பை விரும்பாதவர்களுக்கு, இந்த ஷேடுகள் கைகொடுக்கும். ஆனால் கறுப்பு மாதிரியான அடர் நிறங்களை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தால், வீட்டுக்குள் வித்தியாசமான தோற்றத்தை நம்மால் முழுமையாக பெற முடியாது.”

சுஜாதா மனோகர், இன்ஜினியர் .

வீட்டை அழகுபடுத்துவதில் கறுப்பு நிறத்தை தவிர்க்க நினைப்பவர்கள், முற்றிலுமாக தவிர்க்காமல் சின்ன சின்ன விஷயங்களில் அனுமதிக்கலாம் என்பது இன்டீரியர் டிசைனர்களின் அட்வைஸ். அதாவது, கறுப்பு நிற பீங்கான் பாத்திரங்களை தேர்வு செய்வது, சோபா கவர்களில் கறுப்பு நிறத்தை பயன்படுத்துவது, கறுப்பு நிற கார்பெட்களை தரையில் விரிப்பது போன்ற விஷயங்களில் கறுப்பு நிறத்தை அனுமதித்து பழகலாம். பேட்டர்ன் பெயின்ட் கான்சப்ட்களுக்கு, கறுப்பு-வெள்ளை நிறங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. வரவேற்பு அறை மற்றும் படுக்கை அறைகளில், கறுப்பு நிற பேட்டர்ன் பெயின்ட் டிசைன்கள் பொருத்தமானதாக இருக்கும். கறுப்பு நிறத்துடன் வெள்ளை நிறத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, வெளிர் சாம்பல் நிறம் அல்லது கிரே நிறத்தைக் கூட சேர்க்கலாம்.

டைனிங் ஏரியா, மாடுலர் கிச்சன், வீட்டின் அறை கதவுகள், வரவேற்பு அறையின் சுவர்கள் ஆகியவற்றில் கறுப்பு நிறத்தை பயன்படுத்தலாம் என்பது டிசைனர்களின் கருத்து. கறுப்பு நிற மரக்கதவுகளும், ஜன்னல்களும் வீட்டின் அழகை அதிகரிக்கரிக்கின்றன. எந்த இடத்தில் கறுப்பு நிறங்கள் இருக்கின்றனவோ , அந்த இடம் பெரிதாக, தாராளமாக (spacious) தெரியும் என்பது கூடுதல் குதூகலம்.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g