திருமணத்திற்கு முன் பேசியாக வேண்டிய விஷயங்கள்…

திருமணத்திற்கு முன் பேசியாக வேண்டிய விஷயங்கள்…

காலம் எவ்வளவு மாறினாலும், கல்யாணம் எப்போதும் கல்யாணம்தான். காதலித்தோ அல்லது பெற்றோர் செய்த திருமண ஏற்பாட்டின் மூலமாகவோ, மண உறவுக்குள் நுழையும் முன்னர், உங்கள்  இணையுடன் சில விஷயங்களை நீங்கள் பேசி முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

திருமணம் நிச்சயம் ஆனதும், தம்பதிகளாகப் போகிறவர்கள் கொஞ்சம் சுதந்திரமாக பேசுவதும் பழகுவதும் இப்போது சகஜமாகிவிட்டது. அப்போதும் இணையர் இருவரும் ஒருவரை ஒருவர் கவருவதிலும் இம்ப்ரெஸ் செய்வதிலும் தான் அதிகம் மெனெக்கெடுகின்றனர்.  மணமாகி லவ் ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் ஹனிமூன் பீரியட் வரை சுதந்திரமான, கவலையில்லாத வாழ்க்கைதான். அதுவரை எதுவும் பிரச்னையாகத் தெரியாது. எந்த குறையும் கண்ணில் படாது. ஆனால் மெல்ல மெல்ல எல்லாம் செட்டில் ஆகும் போதுதான், காட்சிகள் துல்லியமாகத் தெரியும். அந்த நேரத்தில் இருந்துதான் ஊடல்கள், பின்னர் சண்டைகள் எல்லாம் வளர்ந்து வெறுப்புணர்வில் கொண்டு போய் விட்டுவிடும். ஆக, திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெடிங் காலத்தில் சதா ரொமான்ஸ் மயக்கத்திலேயே இல்லாமல், பிராக்டிக்கலாக சில விஷயங்களை பேசி தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அது உங்களது எதிர்காலத்தையும் உறவையும் காப்பாற்றும்.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த நவீனாவிற்கும் சந்தோஷிற்கும், 80 லட்சம் ரூபாய் செலவில் தடபுடலாகத் திருமணம் நடந்தது. ஹனிமூனுக்கு மொரீஷியஸ் போய் வந்தனர்.  எப்போதும் ஒட்டிக் கொண்டு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடுவது வழக்கம்.  எட்டு மாதம் கூட ஆகவில்லை. விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டால்,  வீட்டு வேலையை ஷேர் பண்றதில்லை, இப்பவே குழந்தை பெத்துக்கணுமா, எப்போ பாரு ஷாப்பிங், அம்மாவை கூடவே வச்சு கவனிக்கணுமாம், என இருவரும் ஆளுக்கு இரண்டாயிரம் காரணங்களை அடுக்கினர்.

திருமணம் என்பது இருவரும் அவரவர் வீட்டில் இருந்து காதலிப்பதைப் போன்றதல்ல. வெளியிலே சுற்றி சினிமா பார்த்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்புகிற விஷயமல்ல. திருமணம் என்பது அதுவரை இருந்த சார்புநிலை வாழ்க்கை அல்ல.  நீங்களே வாழப் போகும் சுதந்திர வாழ்க்கை. இதில் எல்லா பொறுப்புகளையும் தம்பதியர் இருவர் மட்டுமே சுமக்கப் போகிறீர்கள். அந்த காலம் போல ‘வீட்டு வேலையை நீ பார், சம்பாதிக்கும் வேலையை நான் பார்க்கிறேன்’ என இருக்க முடியாது. பெண்களும் வேலைக்குப் போகிற சூழலில் வீட்டு வேலை, பொருளாதாரம், குழந்தைப் பேறு, பெற்றோர் என எல்லா பொறுப்புகள் குறித்தும், திருமணத்திற்கு முன்பே பேசி முடிவெடுத்தால் உறவின் ஆயுள், ஆயுள் உள்ளவரை நீட்டிக்கும்.

திருமணம் செய்யப் போகிறவர்கள், இவ்விஷயங்களை உறுதிச் செய்யுங்கள்:

இணையின் விருப்பம்

திருமணமாகி சில மாதங்களிலேயே, எந்த காரணமுமே இல்லாமல் விவாகரத்தான தம்பதியர் இன்று அதிகம். அவர்களுக்குள் உணர்வுப்பூர்வமான பிணைப்புகள் இல்லாததே இதற்கு காரணம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

முதலில் உங்கள் இணையிடம், ‘திருமணத்திற்கு முழுமனதுடன் தயாராக இருக்கிறார்களா என்பதை தெளிவாகவும் பொறுமையாகவும் பேசிக்கொள்வது நல்லது. இணையரில் யாரேனும் ஒருவர் திருமணத்தில் விருப்பமில்லை என கூறினால், அதை மதித்து விலகுவது பல துயரங்களில் இருந்து அவர்களை காப்பாற்றும்.  சில சமயங்களில் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கூட, திருமணத்திற்கு சம்மதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடும்.  காதலித்திருந்தாலும், ஏற்பாட்டுத் திருமணமாக இருந்தாலும் முதலில் உறுதிச் செய்ய வேண்டியது, திருமணத்திற்கு உங்கள் இணை தயாராக இருக்கிறாரா என்பதைத்தான். உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக வலுக்கட்டாயமாக மணம் முடிக்கத் துணியாதீர்கள். திருமணம் வேண்டாம் என இணை சொல்வதை, ஈகோ பிரச்னையாகவோ, வாழ்க்கையின் தோல்வியாகவோ கருத வேண்டாம். பேசிப் பாருங்கள். உங்கள் அளவுக்கு, இணையரும் இந்த திருமணத்தில் ஈடுபாட்டோடு இருந்தால் மட்டுமே, அடுத்த அடி எடுத்து வையுங்கள்.

வரவு செலவுகளைத் திட்டமிடுங்கள்

பெரும்பாலான குடும்பங்களில் முக்கியமான பிரச்னையாக உருவெடுப்பது, பணப் பற்றாக்குறை தான்.  அதனால் திருமணத்திற்கு முன்பாகவே, இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வருமானம் எவ்வளவு, ஈஎம்ஐ விஷயங்கள், இருவரும் பிறந்த வீட்டிற்கு செலவிடும் தொகை என எல்லா வரவுசெலவுகளையும் பேசித் தீர்க்க வேண்டும். இருவரும் அவரவர் பெயரில் சேமிக்கவும் திட்டமிடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணம் முதலில் உங்கள் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னரே மற்ற விஷயங்களுக்கு.

வரவு செலவுக் கணக்கை யார் பார்த்துக்கொள்வது, தனித்தனி பேங்க் அகவுன்ட்டா அல்லது ஜாயின்ட் அகவுன்ட்டா, போன்ற விஷயங்களை பேசி முடிவு செய்வது, பின்னாளில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.  ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு தொகை ஒதுக்கினால் சிரமமின்றி குடும்பத்தை எடுத்து செல்லலாம் என்பதை திட்டமிட வேண்டும்.  பொறுப்புகளை அவரவர் விருப்பத்துக்கு பிரித்துக் கொள்ளலாம். சில பெண்கள் குழந்தை பிறந்த பின் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல் இருப்பார்கள்.  அதனால் ஒருவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியுமா என்றும், முடியாது என்றால் வருமானத்தை உயர்த்த என்ன செய்யலாம் என்பது பற்றியும் ஆலோசிக்கலாம்.

பெற்றோர் மற்றும் குழந்தைகள் 

அடுத்தது குழந்தை.  சிலர் எந்த முன்னேற்பாடுகளும் இன்றி திருமணமான ஒரு வருடத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் முன்பே யோசித்து முடிவு செய்வது நல்லது. குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியர், முதலில் மனரீதியாக தயாராக இருக்க வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர், பொருளாதார ரீதியாக, மன ரீதியாக, உறவு ரீதியாக (யார் பார்த்துக் கொள்வது) என மூன்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல, எத்தனை குழந்தை வேண்டும்,  எப்போது பெற்றுக்கொள்ளலாம், அது வளரக்கூடிய சூழல் எப்படி இருக்க வேண்டும் என்பதை பரஸ்பரம் பேசிவிடுவது குடும்பத்திற்கான நல்ல கட்டமைப்பாக இருக்கும்.

ஆண்களைப் போலவே பெற்றோரை கவனித்துக் கொள்ளும் கடமை, பெண்களுக்கும் இருக்கிறது. அதனால் இருவரும் அவரவர் பெற்றோருக்கு எந்த வகையில் ஆதரவாக இருக்கலாம் என்பதை முன்பே பேசி முடிவெடுங்கள். பெற்றோருக்கான செலவுகள் மட்டுமல்ல, உங்களுடன் அவர்களை வைத்துக் கொள்வது வரை எல்லாவற்றையும் திட்டமிடுங்கள்.

வேலைகளை பிரித்துக் கொள்ளுதல்

சின்ன சின்ன விஷயங்கள் தான் வாழ்க்கையில் பூதாகரமான பிரச்னைகளை உருவாக்கும்.   வீட்டு வேலைகளை யார் செய்வது என்பதில் தொடங்குகிறது அந்த பூகம்பம்.  வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமை இருவருக்குமே உண்டு என்பதை மறக்க வேண்டாம். 

இவையெல்லாம் பெண்களுக்கான வேலை.  ஆண்கள் செய்யக்கூடாது என்ற மனநிலையை மாற்றுங்கள். மனைவியிடம் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்வதுபோல், வேலைகளையும் பகிர்ந்துக் கொள்ளும் போது, வாழ்க்கை மீதும் இணையின் மீதும் அவர்களுக்கு அலுப்பு வராது.  அவ்வாறு உள்ள குடும்பங்களில் தம்பதியிரிடையே நெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக மனநல நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தாம்பத்யமும், இன்ன பிற விஷயங்களும்

எவ்வளவு முன்னுரிமை கொடுத்துக்கொள்வது, பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை பரஸ்பரம் பேசுதல், நண்பர்கள் மற்றும் உறவினர்களை எப்படி கையாள்வது, பொதுவிழாக்களில் இருவரும் பங்கு பெற வேண்டுமா, இருவரும் சேர்ந்து எங்கெல்லாம் பயணிக்கலாம் என்பதை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டால், வாழ்க்கை இனிக்கும்.

திருப்திகரமான உடலுறவு தான், தாம்பத்யத்தின் அடிப்பட. உடலுறவு விஷயத்தில் அவசரப்படுவதில் அர்த்தமில்லை. உள்ளம் இணையும் போது, உடலும் முழுமையாக இணங்கும்.  இருவரும் முழுமனதுடன் தாம்பத்யத்தில் ஈடுபட சிறிது காலம் ஆகும்.  இணையின் தேவையையும் உணர்வுகளையும் மதிப்பது நல்லது.   அதற்கான நேரத்தை இருவரும் கொடுத்துக்கொள்வது அவசியம்.  மேலும் அதில் ஏதும் குறையோ, போதாமையோ இருக்குமாயின், இணையிடம் உரிமையாக கேட்கலாம்.  இது இருவரிடையே நெருக்கத்தையும் அன்னியோன்னியத்தையும் உண்டாக்கும்.

– பி. கமலா தவநிதி.

1 Comment

  1. Very nice and very useful thinking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g