உலக அழகி மனுஷி சில்லார் பேட்டி

உலக அழகி மனுஷி சில்லார் பேட்டி

உலகமே கொண்டாடினாலும், தன் கடமையிலிருந்து தவறாமல் இருக்கிறார் உலக அழகி மனுஷி சில்லார். பலரது கவனத்தை ஈர்த்த பெண், இனி மருத்துவச் சேவையில் தனது பங்களிப்பை செலுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார். தனது பிஸியான வேலைகளுக்கு நடுவே அளித்த பேட்டியிலிருந்து சில குறிப்புகள்:

உலக அழகிப் போட்டி நிகழ்ச்சியில், ராம்லீலா திரைப்படத்திலிருந்து டோலு பாஜி பாடலுக்கு நடனமாடினார். இதனால்  “என்னுடைய சக போட்டியாளர்கள் என்னை பாலிவுட் நடிகை என்று நினைத்துக் கொண்டிருந்தனர்” என சிரிக்கிறார்.

“நான் உலக அழகி பட்டத்தை வெல்வதற்காக கடந்து வந்தப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இதுவரையில் எனக்கு பாலிவுட்டிற்குள் நுழையும் கனவு இல்லை. அப்படியே வாய்ப்புகள் வந்தாலும், எனது ஒரு வருட மருத்துவப் படிப்பை முடித்துவிட்டுத்தான் யோசிப்பேன்’’ என்கிறார்.

மனுஷி தற்போது ஹரியானா மாநிலம் சோனாபட் மாவட்டத்தில் உள்ள பகத் பூல் சிங் அரசு மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.

“என்னைப் பொருத்தவரை மருத்துவப் படிப்பு அத்தனை சுலபமானது இல்லை. அது ஒரு நீண்ட பயணம். எனது மருத்துவப் படிப்பையும், உலக அழகி பட்டத்தையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன். ஏனெனில் பேச்சு, நடவடிக்கைகள் என இரண்டிலும் மக்களின் சவுகரியத்தையே நான் முன்னிருத்த வேண்டும். குறிப்பாக இந்த பட்டம் மக்களை சரியாக புரிந்துகொள்ள உதவுகிறது” என்று சொல்லும் மனுஷியின் சொந்த ஊர் ஹரியானா மாநிலம்.  தற்போது டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.

கவிதை , ஓவியம், குச்சிப்புடி நடனம் என பன்முகத் திறமையாளராகவும் இருக்கிறார் மனுஷி. இருப்பினும் மனுஷியின் பெருங்கனவு, இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதுதான். தற்போது, பெண்கள்  மாதவிடாய் காலத்தில் எப்படி சுகாதாரமாக இருப்பது என்பது பற்றிய ஆய்வில் பணியாற்றி வருகிறார். “தற்போது உலக அழகியாக பட்டம் பெற்றதால் என்னுடைய ஆய்வுகள் அதிகம் பிரபலமாகும்” என புன்னகையோடு கூறுகிறார்.

“என்னுடைய ஆய்வை தீவிரமாக செயல்படுத்த இந்த உலக அழகிப் போட்டி பெரிதும் உதவியிருக்கிறது. தற்போது இந்த ஆய்வை பெருமளவில் எடுத்துச் செல்ல முனைப்போடு செயல்பட்டு வருகிறேன்” எனக் கூறும் மனுஷி, ஒரே வருடத்தில் மிஸ் கேம்பஸ் பிரின்ஸஸ் மற்றும் மிஸ் ஹரியானா ஆகிய இரு பட்டங்களையும் வென்றார்.

இந்திய வாழ்க்கை முறையானது, உலக அழகிப் போட்டியில் எதிர்கொண்ட பல சவால்களை சமாளிக்க உதவியது என தனது அனுபவத்தைப் பகிர்கிறார் மனுஷி. “இங்கு நான் கற்றுகொண்ட விஷயங்களும் அனுபவங்களும், உலக அழகிப் போட்டியில் சவால்களை  எதிர்கொள்ள உதவியது. எனவே எனது பயணத்தை எந்தவித பதட்டமுமின்றி மகிழ்ச்சியோடு அனுபவித்தேன். அப்படிபட்ட கடுமையான போட்டி சூழ்நிலையிலும், நான் நிதானமாக இயல்பாக இருந்தது, அனைத்து சவால்களையும் சுலபமாக மாற்றியது” எனப் பெருமையோடு சொல்கிறார்.

மேலும் தற்போது இந்த வெற்றிச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. எதையும் நேர்மறையாக அணுகும் இயல்பு கொண்டவள். அதே நேரத்தில் நெகடிவ் ஆன விஷயங்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அப்படிபட்ட சூழ்நிலை ஏற்படும் போது எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும்,” என்று தன்னம்பிக்கையோடு பதில் அளிக்கிறார் உலக அழகி.

ஏ.சிவரஞ்சனி

source: IANS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g