குற்றங்களே நடக்காத லட்சத்தீவுகள் – எழுத்தாளர் சல்மா

குற்றங்களே நடக்காத லட்சத்தீவுகள் – எழுத்தாளர் சல்மா

கேரளத்துக்கு அருகில் பரந்துவிரிந்த அரபிக்கடலில் இருக்கும் அழகிய சின்னஞ்சிறிய தீவுக்கூட்டம் தான், லட்சத்தீவுகள். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று. மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் சுற்றுலாவுக்கான இடம் இது. வெண்மணல் கடற்கரைகள், நீல வானம், பளிங்கு கடலுக்குள் பளிச்சிடும் பவளப்பாறைகள், எங்கு திரும்பினாலும் கடல் வாசம், நட்பான மக்கள், ஆர்பாட்டமில்லாத அமைதியான வாழ்க்கை… மொத்தத்தில் கடலுக்கு நடுவே இருக்கும் அற்புதத் தீவுகள் இவை . இங்கு பயணம் செய்து திரும்பியிருக்கும் எழுத்தாளர் சல்மா, அவரின் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“முதல் முறையாக வடக்கு, கிழக்கு, தெற்கு என மூன்று மாநிலங்களை இணைத்த ஒரு இலக்கிய விழாவினை கடந்த நவம்பரில் சாகித்ய அகாடெமி லட்சத்தீவில் நடத்தியது. அதில் கலந்து கொள்வதற்கு எனக்கும் அழைப்பு வந்த போது, மிகுந்த ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன். காரணம் நாமாக அங்கு பயணிப்பது, மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பது போல எளிதல்ல. கூடுதலான திட்டமிடுதல் வேண்டும். அகாடெமி சார்பாக செல்வதனால் அந்த சிரமங்கள் குறைவு.

லட்சத்தீவு…! இந்தியாவின் ஒரு பகுதி என்றாலும் ( union territory ) காஷ்மீரை போல சில பிரத்யேக சட்டதிட்டங்கள் இங்கும் உண்டு. குறிப்பாக, இந்த தீவுகளில் வெளியாட்கள் யாரும் கைப்பிடி நிலம் கூட விலைக்கு வாங்க முடியாது. முப்பத்தியாறு தீவுகளின் கூட்டம்… ஆனால், பதினொரு தீவுகளில்தான், மனிதர்கள் வசிக்கிறார்கள். லட்சத்தீவுக்குள் பயணிப்பதற்கான சிறப்பு அனுமதி, அந்த மாநிலத்தின் district magistrate இடமிருந்து பெற வேண்டும். எங்களுக்கான அனுமதியை அகாடெமி ஐந்து நாட்களுக்கு பெற்றிருந்தது. இந்த அனுமதியை வைத்து அந்த பதினொரு தீவுகளுக்கும் இந்தியர்கள் பயணிக்க இயலும். ஆனால் வெளிநாட்டவர்களுக்கு ஒரே ஒரு தீவுக்குள் மட்டுமே நுழைய அனுமதி. பங்காரம் என்கிற அந்த தீவு முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளுக்கான அத்தனை பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டதாக இருக்கிறது. மதுவும், பாரும் இங்கு மட்டும் தான் அனுமதி. ஏனைய பத்து தீவிலும் மது இல்லை. வெளிநாட்டவரும் இல்லை.

பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் தொலைபேசி நெட்வொர்க் மட்டுமே. அகட்டி என்கிற தீவில் மட்டும்தான் விமான ஓடுதளம் இருக்கிறது. தினமும் கொச்சினிலிருந்து ஒரு விமான சேவை மட்டுமே.  எண்பது பேர்  பயணிக்கக் கூடிய சின்னஞ்சிறு விமானத்தை ஏர் இந்தியா இயக்குகிறது. மற்ற எந்த விமான சேவைகளும் கிடையாது.

நாங்கள் பயணித்த அன்று தில்லியில் இருந்து வரக்கூடிய விமானம் தாமதம் ஆனதால், அந்த பதினைந்து பயணிகளுக்காக காத்திருந்து, ஒரு மணிநேரத்துக்கு பிறகு கொச்சினில் இருந்து கிளம்பியது.

அகட்டி, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள சிறிய தீவு. ஏழாயிரம் பேர் மட்டுமே இங்கு வசிக்கிறார்கள். கடலுக்குள்ளேயே விமானம் இறங்குகிறதோ என்கிற பதட்டம் விமானம் தரை இறங்கும் போது உண்டாகிறது. அருகிலிருக்கும் ஆளில்லாத தீவையும் இணைத்து இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்தும் அரசின் திட்டத்தை, சூழலியல் துறை மறுத்ததால் செயல்படுத்த இயலவில்லை. ஒரு ஓவியத்தை போல பச்சை மற்றும் நீலக்கடல் பரப்பில், தீவுகளின் கூட்டம் மிதந்து கொண்டிருக்கிறது. அகட்டி சிறிய கிராமம் மட்டும்தான் இரண்டு அறைகளை கொண்ட விமான நிலையம். அங்கு நமக்கான சிறப்பு அனுமதி கடிதங்களை சோதனை செய்த பிறகே வெளியே செல்ல முடியும். எங்களோடு விமானத்தில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்கள் பங்காரம் கிளம்புவதற்கான கப்பல் சேவைக்கு காத்திருக்க, நாங்கள் தலைநகரமான கவரட்டிக்கு செல்கிற கப்பலுக்காகக் காத்திருந்தோம். இவை முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே வாழக்கூடிய தீவுகள்.

கடலின் ஆழமான பகுதியில் நிற்கிற கப்பலுக்கு சின்னஞ்சிறிய படகில் ஏறி பத்து நிமிடம் பயணித்து கப்பலில் ஏறவேண்டும். கொச்சின், கோழிகோடு அல்லது ஏனைய தீவுகளுக்கான மக்களது அன்றாட பயணம் இப்படிதான். வாரம் மூன்று முறை கொச்சின் கோழிக்கோடு மற்றும் மங்களூருக்கான கப்பல் சேவை இருக்கிறது. பதினைந்து மணி நேரப்பயணம். யாரும் நினைத்த மாத்திரத்தில் நகரங்களுக்குச் செல்வது சாத்தியமில்லை. பணம் இருந்தால் கூட விமானப் பயணம் எளிதல்ல. இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் வரக்கூடிய அந்த ஒரு விமானம் சுற்றுலா பயணிகளால் நிரம்பியே இருக்கிறது.

கடல் நீரின் வெளிர்நீல பச்சை நிறம் மனதை கொள்ளை கொள்கிறது. பார்த்த மாத்திரத்தில் மனதை குதூகலம் கொள்ள செய்கிறது. கடலில் நீந்தித்திரியும் மீன்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. குளிரூட்டப்பட்ட கப்பலில் அகட்டியிலிருந்து கவரட்டிக்கு மூன்று மணி நேரப்பயணம். கவரட்டி தலைநகரம் என்பதால் பன்னிரெண்டாயிரம் மக்கள்தொகை. ஒரு வழிந்தோடும் கண்ணீர் துளி போல, வரைபடத்தில் அத்தீவின் தோற்றம் இருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் நீளம் நான்கு கிலோ மீட்டர் அகலம் கொண்ட தீவு அது. ராஜீவ் காந்தி மருத்துவமனை, மெடிக்கல், ஆம்புலன்ஸ், நவோதயா, சிபிஎஸ்சி பள்ளிகள், புத்தம் புதிய தலைமைச் செயலகம், தொலைக்காட்சி நெட்வொர்க் என ஓரளவு வசதிகள் கொண்டதாக இருக்கிறது. மத்திய அரசின் பெரும்பாலான அலுவலகங்கள், வங்கிகள் இயங்குகின்றன. வெளியிருந்து பலரும் பணிக்காக வந்து வசிக்கிறார்கள். ஒரே ஒரு கோவிலும் உண்டு.

Mahal என்பது அவர்களது மொழி என்றாலும், மலையாளம் தான் அலுவல் மொழி. தவிர, இந்தி அனைவரும் அறிந்த மொழி. மக்கள் அனைவரும் பழங்குடியினர் என்பதால் உயர் கல்விக்கான அரசின் உதவி அனைவருக்கும் உண்டு. உயர் கல்விக்கு கொச்சின் அல்லது இதர இடங்களுக்குச் செல்லும்போது, அரசின் உதவித் தொகை கிடைக்கிறது. பெண்களும் ஆண்களும் கல்வியறிவில் சமமாக இருக்கிறார்கள். எண்பத்தி எட்டு சதம் கல்வியறிவு. வீட்டுக்கு ஒருவர் மருத்துவர், பொறியாளர் என சகலரும் படித்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களுக்கு மீன்பிடி தொழிலும், தேங்காய் விற்பனையும்  வருமானம் தரக்கூடியவை. அவற்றை மட்டும் நம்பி வாழ்ந்தாலும், கொச்சினிலிருந்து தான் சகல அத்தியாவசிய பொருட்களும் வரவேண்டும். தீவுகளுக்கான மின்சாரம் டீசல் மற்றும் சோலார் வழியே கிடைக்கிறது. நீர் தேவைகளுக்கு கடல் நீரை சுத்திகரித்து, பொது விநியோகம் செய்கிறது அரசு. அவர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் உண்டு. மற்றபடி அதிகாரிகளின் ஆட்சிதான். எங்கு திரும்பினாலும் பிரதமரது முகம் தாங்கிய பேனர்களும் கட்-அவுட்களும் காண முடிகிறது.

கலா அகாடெமி தான் எங்களது நிகழ்வுகளை ஒருங்கிணைத்து இருந்தார்கள். அவர்களுக்கு இந்த அளவுக்கு அதிகாரம் இருக்குமா என்று வியக்கும் அளவுக்கு நிகழ்வுகள் இருந்தன. ஒரு இலக்கிய நிகழ்வு தலைமை செயலகத்தில் நடக்குமா என்ன? கலா அகாடமியின் அலுவலர்களில் சரிபாதி இஸ்லாமிய பெண்கள். தலைமை செயலகத்திலும் அலுவலர்கள் அவர்கள்தான். எல்லா துறைகளிலும் இஸ்லாமிய பெண்கள் பணியில் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்த போது வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்த சாகித்ய அகடெமியின் செயலாளரை குறுக்கிட்ட தங்கல் கோயா என்பவர், “நானும் கூட எழுத்தாளர் தான். பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பல கதைதொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். அதேபோல பல பெண்கள் இங்கே கதை, கவிதைகள் எழுதி புத்தகங்கள் போட்டிருக்கிறார்கள். அத்தனையும் எங்களது வாழ்க்கை அனுபவம் சார்ந்த படைப்புகள். இதுவரைக்கும் அவை கண்டு கொள்ளப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த போது அதிலிருந்த உண்மை எங்களை குற்றஉணர்வுக்கு தள்ளிற்று. மலையாளம் மற்றும் இந்தியில் அவர்கள் எழுதினாலும் அவர்களது நிலமும் வாழ்வும் அனுபவமும் முற்றிலும் வேறல்லவா? இதுவரை லட்சதீவின் ஒரு படைப்பாளி குறித்து எங்காவது யாராவது அறிந்திருகிறோமா? என்று வெட்கமாக இருந்தது. ராவ் உடனடியாக அவரிடம் வருத்தம் தெரிவித்து அவரையும் மேடைக்கு அழைத்து அவரது கதையை வாசிக்க சொன்னார்.

கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் என்பதால், மீன் உணவுகள்தான் பிரதானம். ஆனால் இந்தி எப்படி பொதுமொழியோ, அதுபோல வட இந்திய உணவுகள் அதிகமாக கிடைக்கிறது. பன்னீர், சப்பாத்தி, டால் என வட இந்திய உணவுகள் தான் ! கேரளா மொழி பேசினாலும், கேரளா அருகில் இருந்தாலும் கேரளா உணவுகள் குறைவுதான்.  பொதுவாக விருந்தினர் என்பதால் வட இந்திய உணவுகளையே தருவதாகவே நினைக்கிறேன்.

பின்னர் இரவு நேரங்களில் கன்னட எழுத்தாளர் ஜெயஸ்ரீயும் நானும் தெருக்களில் கடற்கரைகளில் அலைந்து கொண்டிருந்தோம். அமைதியான லகூன்கள் மௌனமாக படுத்திருக்கும் புலியைபோல இருந்தன. வெள்ளை நிற மணல் நிலவொளியில் மின்னும் அழகு சொக்க வைத்தது. தீவில் நாய்கள், பாம்புகள், குரங்குகள், காக்கைகள், குறிப்பாக குற்றங்கள் இல்லவே இல்லை. 0% க்ரைம் ரேட். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இல்லவே இல்லை. கடலோர எல்லைப் பணிகளுக்காக மட்டும் தான் காவல்துறை மற்றும் ராணுவம் அங்கு இருக்கிறது. திருட்டும் கிடையாது. “திருடுனவன் எங்கே ஓடி போவான்? இருக்கறதே நாலு தெரு. தப்பிபோக கப்பல் வார வரைக்கும் காத்துகிடக்கணும்” என்றுச் சொல்லி சிரித்துக் கொண்டோம்.

இந்தியாவில் பவளப்பாறைகள்அதிகம் உள்ள இடம் லட்சத்தீவுகள். கடல் வளங்களில் மிக முக்கியமானவை. பவளப்பாறைகள் அதிகம் என்பதால், அலைகளின் சீற்றத்தை அவை கட்டுக்குள் வைக்கின்றன. இதனால் 2004 சுனாமியினால் லட்சத்தீவு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டிலிருந்து வெளியில் வந்தால் கடல்தான். சுனாமி பயம் இல்லையா அல்லது புயல் வராதா என்றால் அங்குள்ள மக்கள் சிரிப்பில் பதிலளிக்கிறார்கள். “இது அரபிக்கடல்! பசிபிக் கடல் என்றால்தான் பயம்” என்கிறார்கள்.

அலங்கார மீன்களும், டுனா மீன்களும் அதிகம் கிடைக்கின்றன. மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை கடும் மழை இருக்கும். அக்காலங்களில் மீன் பிடிக்க இயலாது. வெளிமாநிலங்கள் இடமிருந்து கப்பல் போக்குவரத்து தடை படும் சந்தர்ப்பங்களும் உண்டு. அப்போதெல்லாம் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காது என்பதால், மீனை பதப்படுத்தி மழைக்காலத்து உணவாக சேமிக்கிறார்கள். மாசிகருவாடு பெரிய அளவுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது. கடற்கரையில் நீண்ட மரப்பலகைகளில் காவலுக்கு யாருமில்லாமல் மீன்கள் உலர்த்தப்பட்டு கிடப்பதை காண முடிகிறது.

கடற்கரை ரிசார்டில் நடந்த இரவு விருந்தில், இஸ்லாமிய பெண்கள் மாப்பிளா பாடல்களுக்கும், ஆண்கள் சூபி நடனங்களும் ஆடினார்கள். இசையோடு கூடிய நடனம். மனதை இதமாக்கிற்று. அவர்களும் இஸ்லாமியர்கள் தான். தங்களுக்கான இசையை, நடனத்தை அவர்கள் வசமாக்கி வைத்திருக்கிறார்கள். வாழ்கையையும்தானே.

நிகழ்ச்சி முடித்து கிளம்பும் நாளில் கப்பல் வழியாக விமானநிலையம் அடைந்தோம். விமான நிலையத்தில் செக்கின் செய்யும் போதுதான், கப்பலில் எனது பையை விட்டுவந்தது புரிந்தது. உடனே கலா அகாடெமி பொறுப்பாளர்கள் பொறுமையாக தேடிப்போனார்கள். நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். நான் விட்ட அதே இடத்திலிருந்து, அந்த பெட்டியை அவர்கள் எடுத்து வந்தார்கள். அதன்பின்னர் தான் எனக்கு மூச்சே சீரானது.

ஒரு புதிய உலகத்தை கண்டு கொண்ட மகிழ்ச்சியோடு கிளம்பினேன். சுற்றுலா பயணியாக என்னால் சில நாட்கள் இருக்க முடியும் ஆனால் அந்த நிலபரப்பில், அந்த ஊரின் பிரஜையாக அங்கயே வசிக்க நிச்சயமாக இயலாது. தொலை தூர நிலபரப்பு. அங்கிருந்து கிடைக்கும் பொருட்களை நம்பி வாழ்தல் அத்தனை எளிதல்ல. சுற்றுலாவாக புது இடத்தில் பயணிக்க சிறந்த இடம் லட்சத்தீவுகள்….!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g