ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும் சூப்பர் ஸ்பா தெரபீஸ்!

ஸ்ட்ரெஸ்ஸை விரட்டும் சூப்பர் ஸ்பா தெரபீஸ்!

எப்போதும் பிசியாகவே இருக்கிறோம். ஓய்வும் குறைவு, உடலுழைப்பும் குறைவு. விளைவு… மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, கவனக்குறைவு, உடலுறுப்புகளில் கழிவுகள் தேக்கம், தசைப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, இன்னும் எண்ணற்றப் பிரச்னைகள். இன்றைய நவீன லைப்ஸ்டைலின் பக்க விளைவுகள் இவை. இந்த நிலையில் உடலுக்கும் மனத்துக்கும் உற்சாகம் ஊட்ட ஸ்பா சிகிச்சைகள் பெரிதும் உதவும். உண்மையில் இன்றைய காலகட்டத்தில், ஸ்பா சிகிச்சை என்பது ஆடம்பரமல்ல, ஓர் அத்தியாவசியம்!

ஸ்டார் ஹோட்டல்கள், அதிநவீன அழகு சிகிச்சை நிலையங்கள் போன்றவற்றில் மட்டுமே ஸ்பா மையங்கள் இருந்த காலத்தில், வெவ்வேறு மசாஜ்கள், அரோமா தெரபி, சானா குளியல் எல்லாம் மிகவும் வசதி படைத்தவர்கள் மட்டுமே அனுபவிக்கும் ரிலாக்ஸேஷனாக இருந்தது. ஆனால், இன்று நிறைய ஸ்பா மையங்களை நகர்ப்புறங்களில் பார்க்கிறோம். எல்லோரும் அனுபவிக்கக் கூடியதாக மட்டுமல்ல, எல்லோருக்கும் அவசியமானதாகவும் மாறிவருகின்றன ஸ்பா மையங்கள். அழகை மெருகூட்ட அழகு சிகிச்சைகள் எப்படி உதவுகின்றனவோ, அதேபோல, சோர்வடையும் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை, ஸ்பா சிகிச்சைகள்.

நல்ல ஸ்பாவில் நீங்கள் பெறும் அனுபவமானது உங்களுக்கு அமைதியையும் தெளிவையும் அளிக்கும். இது தினசரி வாழ்க்கையின் பரபரப்புகளுக்கு அப்பால், உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை ஒருமுகப்படுத்த உதவுகிறது. ஆனால், அதற்கு ஸ்பா என்றால் என்ன என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஸ்பா அனுபவத்தை மேம்படுத்தவும், உடலும் மனமும் புத்துணர்வு பெறவும் பின்வரும் ஆலோசனைகள் உதவும்.

ஸ்பா மையத்துக்கு புதியவரா?

அடிப்படையில் அனைத்து ஸ்பா சிகிச்சைகளும் சருமத்தை சுத்தம் செய்தல் (cleanse), இறந்த செல்களை நீக்குதல் (exfoliate), சருமத்துக்கு நீர்ச்சத்து அளித்தல் (hydrate ) போன்ற வேலைகளையே செய்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உங்கள் உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை நீக்கவும் (detoxification) உதவும்.

தற்போது ஸ்பா மையங்கள், பியூட்டி பார்லர்களின் ஓர் அங்கமாகவோ அல்லது தனியாகவோ செயல்படுகின்றன. மேலும் பெரிய ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களின் வெல்னெஸ் மையங்கள் அனைத்திலும், ஸ்பா சிகிச்சைகளுக்கு சிறப்பான இடமுண்டு. ஸ்பா மையங்களில் பல்வேறு வகையான குளியல்கள், அரோமாதெரபி எனப்படும் நறுமண சிகிச்சைகள், ஹாட் டப், மட் பாத், ஹாட் ஸ்பிரிங், ஹைட்ரோ மசாஜ், சானா, ஸ்டீம் பாத், பாடி ராப், மசாஜ்கள், தலைமுடிக்கான சிகிச்சைகள், பெடிக்யூர் மற்றும் மெனிக்யூர், வேக்ஸிங் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மற்றும் சேவைகள் அளிக்கப்படுகின்றன. எல்லா ஸ்பாக்களிலும் எல்லா சேவையும் இருப்பதில்லை. மேலும் ஒவ்வொரு ஸ்பா மையமும் தனக்கென தனி பாணியில் ஸ்பா சிகிச்சைகள் மற்றும் சேவையை வழங்குகின்றன.

முதல் முறையாக ஸ்பா மெனுவை பார்த்தால், கொஞ்சம் திணறித்தான் போவீர்கள். உங்களுக்கு மசாஜ் வேணுமா அல்லது பாடி பாலிஷா? ஸ்வீடிஷ் மசாஜா அல்லது தாய் மசாஜா? ஹைட்ரேட்டா அல்லது டிடாக்சிஃபை சிகிச்சையா? …எது உங்களுக்கு தேவை என்று முடிவெடுக்க முடியாத அளவுக்கு பலவிதமான சிகிச்சைகளும் வசதிகளும் அங்கு இருக்கலாம். இந்த புத்துணர்ச்சி சிகிச்சை பற்றிய அடிப்படை விதியை தெரிந்திருந்தால், உங்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

முதல் முறையாக ஸ்பா சிகிச்சைக்கு வருகிறவர், அடிப்படை சிகிச்சைகளில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும். ஸ்வீடிஷ் மசாஜில் தொடங்குவது சரியாக இருக்கும் என்கின்றனர் பெரும்பாலான ஸ்பா சிகிச்சை நிபுணர்கள். இதையெல்லாம் செய்து பார்த்த பின்னர், இவற்றைவிட மேம்பட்ட தாய் மசாஜ் அல்லது ஆயுர்வேத மசாஜ் அல்லது ஹாட் ஸ்டோன் தெரபி போன்றவற்றுக்கு செல்லலாம்.

ஸ்பா சிகிச்சை: முன்பும் பின்பும்

பெரும்பாலான ஸ்பாக்களில் ஸ்வீடிஷ் மசாஜ் மற்றும் அரோமாதெரபி ஃபுல் பாடி மசாஜ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பா சிகிச்சை தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்குள் சென்று விடுவது நல்லது. அப்போதுதான் உங்களுக்கு தயாராக போதுமான நேரம் கிடைக்கும். 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். விலை மதிப்பான நகைகள் மற்றும் பொருட்களை வீட்டில் வைத்துச் செல்வது நல்லது. செல்போனை அணைத்து வைப்பது இடையூறுகளை தவிர்க்கும். மசாஜின் போது உள்ளாடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலே ஒரு டவல்  சுற்றிக் கொள்ளலாம். சிகிச்சை அளிப்பவர் எந்த பாகத்தில் சிகிச்சை அளிக்கிறாரோ அந்த இடத்தை மட்டுமே திறந்து வைப்பார் என்பதால் தயக்கம் வேண்டாம். அதேபோல எப்படிப்பட்ட ஃபேஷியல் சிகிச்சைகள் அல்லது பாடி டிரீட்மென்ட் மற்றும் உங்கள் சரும வகைக்கு எப்படிப்பட்ட தயாரிப்புகள் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் அங்குள்ள தெரபிஸ்டிடம் ஆரம்பத்திலேயே கேட்டுக்கொள்ளுங்கள்.

முறைப்படி நடக்கும் பெரும்பாலான ஸ்பா மையங்களில், உங்களின் கடந்தகால மருத்துவ வரலாறை கேட்பார்கள். அதற்காக தனியே படிவத்தை நிரப்பித் தரவேண்டும். எந்த உடல் பகுதிகளுக்கு சிகிச்சை வேண்டும், எந்த பாகங்களை தவிர்க்க வேண்டும் என்பதையும், நீங்கள் அதில் குறிப்பிட வேண்டும். சில பெரிய ஸ்பா மையங்களில் மருத்துவர் இருப்பதுண்டு. உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவ ரீதியான சந்தேகங்களை அவரிடம் கேட்கலாம்.

உங்களுக்கு பொருத்தமான ஸ்பா சிகிச்சையை முடிவு செய்த பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது கொஞ்சம் ரிலாக்சேஷன் தான். ஆம், பெரும்பாலான ஸ்பாக்களில் சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாக, உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்க குளிர்ச்சியான ஹெர்பல் பானம் கொடுக்கிறார்கள். சிகிச்சைக்கு முன்பாக குளிப்பது உங்கள் விருப்பம் தான். ஆனால், சிகிச்சையின் போது அப்ளை செய்யும் எண்ணெய், சருமத்துக்குள் ஊடுருவ சருமத் துளைகள் திறந்திருத்தல் நல்லது. குளிக்கும் போது சருமத்தில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை நீக்கப்பட்டு சருமத் துளைகள் திறக்கப்படும்.

பெரும்பாலானவர்கள் மசாஜுக்கு பிறகு சானா அல்லது ஸ்டீம் குளியலை விரும்புகின்றனர். ஏனெனில் அது எண்ணெய்யை உட்கிரகிக்க உதவுகிறது. சானா மற்றும் ஸ்டீம் குளியலுக்கு பின், குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. இது மயக்கமாக உணர்வதை இது தடுப்பதுடன், சிகிச்சைக்கு பின்னர் சருமத் துளைகளை மூடச்செய்யும். உடனடியாக சோப்பை போட்டு எண்ணெயை நீக்குவதோ அல்லது இரண்டு மூன்று மணிநேரம் ஊறவிட்டு பின்னர் வீட்டுக்கு சென்று குளிப்பதும் உங்கள் விருப்பம் தான். ஸ்பா சிகிச்சை முடிந்த பின் வெந்நீர் அருந்துவது உங்களை அமைதியாகவும் ரிலாக்சாகவும் உணரச் செய்யும்.

மசாஜ் என்ன செய்யும்?

மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் செய்கிறது; அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் உணரச் செய்கிறது; மன அழுத்தத்தை குறைக்கிறது; ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அதிக அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை உடல் கிரகிக்க உதவுகிறது; நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும் லிம்பிக் மண்டலத்தை தூண்டுகிறது; தசைப் பிசகுதல், சுளுக்கு இவற்றை நீக்குகிறது, உடல் வலிகளை குறைக்க உதவுகிறது.

மசாஜின் முழு பயனை பெற…

• மசாஜுக்கு முன்பாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
• மசாஜின் போது குறைவான ஆடை அணிவதில் உங்களுக்கு அசவுகரியம் இருந்தால், வெளிப்படையாக சொல்லி விடுங்கள்
• சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு உங்கள் உடல்நலம் குறித்து சரியான தகவல்களை கொடுங்கள்.
• மசாஜ் சிகிச்சையின் போது எங்காவது அதிக அழுத்தம், அல்லது வேகத்தை உணர்ந்தாலோ, அறையின் வெப்பநிலை, இசையின் வால்யூம் அல்லது வெளிச்சம் குறித்து உங்களுக்கு பிரச்னை இருந்தாலோ வெளிப்படையாக சொல்லுங்கள்.
• இது ரிலாக்சேஷனுக்கானது என்பதால் சரியான முறையில் நன்கு சுவாசிக்க மறந்துவிடாதீர்கள்.
• சிகிச்சையளிப்பவரின் கையை உங்கள் மனம் அப்படியே பின் தொடரட்டும். வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், உடலின் உணர்வை அப்படியே அனுபவியுங்கள்.
• உடல் நீர்ச்சத்தை பெறுவதற்கு மசாஜுக்கு பிறகு நிறைய தண்ணீர் அருந்தலாம்.
• சிகிச்சை முடிந்த பின்னர் ஒரு அரைமணி நேரம் அப்படியே அமைதியான சூழலில் கழியுங்கள்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g