உலகின் அழகு ததும்பும் அற்புத தீவுகள்…

உலகின் அழகு ததும்பும் அற்புத தீவுகள்…

பரபரப்பான பிஸி வாழ்க்கையில் இருந்து தப்பிக்கவும், ரிலாக்ஸாக உணரவும், இப்போது மக்கள் தேர்வு செய்யும் இடங்கள் தீவுகளே. சுற்றுலா பயணியரை ஈர்க்கும் உலகின் அழகிய தீவுகள் சிலவற்றின் அறிமுகம் இங்கே:

பலவான், பிலிப்பைன்ஸ் (Palawan, Philippines)

நீல நிறத்தில் ஜொலிக்கும் நீரினால் சூழப்பட்ட பலவான் தீவு பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ளது.  உலகப் புகழ்பெற்ற இந்த தீவில், நிலப்பகுதியும் நீர்ப்பகுதியும் இரண்டற கலந்து, உலகின் மிக அழகான தீவாக  வர்ணிக்கப்படுகிறது. மின்னும் வெள்ளை நிற கடற்கரைகள், அழகான பவளப்பாறைகள், பசுமையான காடுகளை கொண்டுள்ள இந்த தீவு, உங்களின் விடுமுறை நாட்களை அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிவிடும்.

பிடித்தமான விடுமுறை நாட்களை இது போன்ற அழகான தீவுகளில் கழிக்கும் போது, வாழ்நாளில் மறக்க முடியாத நினைவுகளை தரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பலவான் தீவின் அழகு மீண்டும் பயணிகளை இங்குவர கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போரா போரா, பிரெஞ்ச் பாலினீசியா (Bora Bora, French Polynesia)

ஒரு தேர்ந்த ஓவிய கலைஞன் வரைந்தது போன்ற அழகுடன் காட்சி அளிக்கிறது, எரிமலை தீவான போரா போரா. கண்ணாடி போன்ற தெளிவான தண்ணீரும், கடற்கரைகளும் நீங்கள் வேறு உலகத்திற்கு வந்திருப்பது போன்ற உணர்வை தரும். உள்ளூரில் வசிக்கும் மக்கள் தயாரிக்கும் உணவுகளின் சுவை உங்களின் வாழ்நாள் முழுவதும் மறக்காது. கடல் அலைகளின் இனிமையான சத்தத்துடன் உங்களின் விடுமுறை நாட்களை கழிக்கும் ரம்மியமான இடம் போரா போரா தீவு.

பாலி, இந்தோனேஷியா (Bali, Indonesia)

மனதை மயக்கும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிக்க கலை, இசை, நடனங்களை கொண்ட அழகான பாலி தீவு, இந்தோனேஷியாவில் அமைந்துள்ளது. இந்த தீவில் மிகவும் உயரமான எரிமலைகள் பல உள்ளன. இந்த எரிமலைகள் அனைத்தும் பசுமையான மரங்கள் மற்றும் நீரினால் சூழப்பட்டுள்ளன. எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் தீவு பாலி.

சன் பாத் எடுப்பவர்களில் தொடங்கி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள் வரை அனைவரும் விரும்பும் பாலி தீவில், இந்து கோவில்களும் உள்ளன. அதனால் மத நம்பிக்கை கொண்ட பயணியர், அதிகமாக பாலி தீவுக்கு வருகை தருகின்றனர்.

செஷெல்ஸ் (Seychelles)

இந்திய பெருங்கடலில், ஆப்ரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள செஷெல்ஸ், ஒரு வெப்ப மண்டல தீவுகள் கூட்டமாகும். இயற்கை தனது முழு அழகை வெளிப்படுத்தும் ரம்மியமான பகுதிகளில் இதுவும் ஒன்று. பவளப்பாறைகள், பளிச்சிடும் நீலப் பளிங்கு நீர் என, சுற்றுலா செல்வதற்கு செஷெல்ஸ் தீவுகள் சிறந்த இடம்.

யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுகாக்கப்படும் காடுகள் செஷெல்ஸில் உள்ளன. மிகப்பெரும் ஆமை உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் மற்றும் பல வண்ணங்களிலான பறவைகள் செஷெவ்ஸ் தீவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குவாய், ஹவாய் (Kauai, Hawaii)

ஹாவாயன் பகுதியின் பழம்பெரும் தீவு குவாய் தீவு. இந்த தீவில் ஆச்சர்யமூட்டும் அருவிகள் மற்றும் அதற்கு நிகரான அழகான கடற்கரைகள் உள்ளன. பல வகைகளில் மீன்கள், ஆமைகள் மற்றும் பவளப்பாறைகளால் குவாய் தீவு நிரம்பியுள்ளது. மற்ற தீவுகளுடன் ஒப்பிடுகையில் குவாய் தீவு பார்ப்பதற்கு எளிமையாகவே காணப்படுகிறது. சில பகுதிகளை நடந்தே கடந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜி (Fiji)

உலகப் பயணியரின் பேவரிட் டூரிஸ் இடம் பிஜி. தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள, 300 தீவுக்கூட்டங்களின் தொகுப்பாக பிஜி தீவுகள் அமைந்துள்ளது. வெள்ளை நிறத்திலான வெப்ப மண்டல கடற்கரைகள் உலகெங்கும் உள்ள சுற்றுலாப்பயணியரை கவர்ந்து இழுக்கின்றன. மேலும் கடலில் உள்ள தண்ணீரும் ரத்தினம் போன்று பளபளப்பாக காணப்படுகிறது.

உலகில் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப்பயணியர் பிஜி தீவுகளுக்கு வருவதால், சொகுசான ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் இங்கு உள்ளன. டைவிங், சர்பிங் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் பிஜி மக்கள் உங்களை அன்புடன் வரவேற்பார்கள். அந்த அளவிற்கு பிஜியின் சர்பிங், டைவிங் பிரபலம்.

மாலத்தீவுகள் (Maldives)

இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவுகள் உலகின் மிகவும் அழகான தீவுகள் என்று அனைவராலும் ஏற்று கொள்ளபட்டுள்ளது. வெள்ளை நிற கடற்கரைகள் மற்றும் நீல நிறத்தினலான கடல், சுற்றுலாப்பயணியரை இயற்கையுடன் நெருக்கமாக உணர வைக்கின்றன. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகள் அனைத்தும், அங்கு வரும் பயணிகளை ஸ்கூபா டைவிங் செய்ய தூண்டுகின்றன. அதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான ஆழ்கடல் சாகசப் பயணியர்  மாலத்தீவுகளுக்கு வருகின்றனர்.

மாய், ஹவாய் (Maui, Hawaii)

ஹவாய் தீவுகளின் ஒரு அங்கம் மாய் தீவு. இந்த தீவு சுவாரஸ்யமான கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு பெயர் பெற்றது. சிறந்த கானுயிர் மற்றும் உயர்ந்த பாரம்பரியத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது. கடற்கரைக்கு அருகில் உள்ள உலகத்தரத்திலான ரிசார்ட்களில் ரிலாக்ஸாக நேரத்தை செலவிடலாம்.

மாய் தீவின் சிறப்பு என்னவென்றால், 10,000 அடி உயர எரிமலை, அருவிகள், ஆழமான எரிமலைவாய் மற்றும் பல வண்ணங்களிளான கடற்கரைகள் இங்கு உள்ளன. உலகில் உள்ள சர்பர்ஸ் மற்றும் விண்ட் சர்பர்ஸை(windsurfers) கவர்ந்த மாய் தீவு, ஸ்கூபா டைவிங்கிற்கும் பெயர் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g