தமிழ் சினிமாவின் தி பெஸ்ட் காஸ்டியூம் டிசைனர்கள் இவர்கள் தான்!

தமிழ் சினிமாவின் தி பெஸ்ட் காஸ்டியூம் டிசைனர்கள் இவர்கள் தான்!

கபாலி படத்தில் கேங்ஸ்டர் ரஜினியின் அந்த கெத்தான கோட் சூட்?! அறம் படத்தில் கலெக்டர் நயன்தாராவின் அந்த எளிய புடவையும் போட்-நெக் பிளவுஸும்?! வீரம் படத்தில் வில்லேஜ் வீரராக அஜித் அணிந்த வேட்டி சட்டை?! காக்க காக்க ஜோதிகாவின் எத்னிக் ஆடைகள்?! விண்ணைத் தாண்டி வருவாயா த்ரிஷாவின் சாரி ராம்ப்….இப்படி ஒரு கதாபாத்திரத்தை நினைக்கும் போது அவர்களின் காஸ்ட்யூம் நினைவுக்கு வருகிறது இல்லையா…அதுதான் காஸ்டியூம் டிசைனர்களின் வெற்றி.

கேரக்டரைசேஷனுக்கு ஏற்ற உடைகளை வடிவமைத்து, அந்த கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. கிரியேட்டிவிட்டி, ரிசர்ச், உழைப்பு என மூன்றும் சேர வேண்டும்.  ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் மட்டுமே நாம் பார்க்கிறோம். கபாலியாக, மதிவதனியாக நம் மனசுக்குள் நிற்க, அவர்களின் காஸ்ட்யூம் பெரும் பங்காற்றுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனர்கள் யார் தெரியுமா?

அனுவர்தன்:

ரஜினிக்கு ‘காலா’, கமலுக்கு ‘பிக் பாஸ்’ என தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் காஸ்ட்யூம் டிசைனர் இவர். சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ படத்தில் அஜித் அணிந்திருந்த ஸ்டைலிஷ் உடைகள் இவரின் கைவண்ணம் தான். இயக்குநர் விஷ்ணுவர்தனின் மனைவி. தொடக்கத்தில் இயக்குநராக வேண்டும் என்பது இவரின் லட்சியம். ஆனால் காஸ்ட்யூம் டிசைனராவது நிச்சயம் என்பது சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக இருக்கும் போதுதான் அவருக்கு புரிந்திருக்கிறது. காஸ்ட்யூம் டிசைனராக முதல் படம் இந்தியில் ‘அசோகா’. தவிர, விஷ்ணுவர்தனின் அனைத்துப் படங்களுக்கும் இவரே டிசைனர். புதிது புதிதாக ஃபேஷனை அப்டேட் செய்ய வெளிநாடுகளுக்கு ஊர் சுற்றுவது பிடித்த விஷயம்.

நளினி ஸ்ரீராம்:

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான படம் ‘ரோஜா’. இந்த லிஸ்ட்டில் இன்னொருவரும் இடம் பெறுகிறார். அவர், ஆடை வடிவமைப்பாளர், நளினி ஸ்ரீராம். மணிரத்னத்துடன் மூன்று படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அயன், எங்கேயும் காதல், இப்படி பல படங்கள் இவரது டிசைன்களால் தனித்துவம் பெற்றிருக்கின்றன. தற்போது ஆடை வடிவமைப்புத் துறையில் ஒளிரும் பலரும் இவரின் மாணவர்கள். நயன்தாராவின் பெர்சனல் காஸ்ட்யூம் அட்வைசர் இவர் என்பது கூடுதல் தகவல்.

நிரஞ்சனி அகத்தியன்:

படத்திற்கு ஆடை வடிவமைப்பு மிகப்பெரிய பலம். கேரக்டரின் வலிமையை கெட்-அப்களில் கூட்டுவது  நிரஞ்சனி அகத்தியனுக்கு கை வந்த கலை. கபாலியில் ரஜினிக்கு லினன் ஆடைகள், ராதிகா ஆப்தேவின் உடை என எல்லாமே டாப் கிளாஸ். பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதில் கிட்டியிருந்தாலும்,  நிலைத்து நிற்பதற்கு நிறையவே உழைத்திருக்கிறார். படித்தது பி.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா. தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீர் ஆர்வத்தில்  டிசைனிங் வேலையைத் தேர்ந்தெடுத்தார் நிரஞ்சனி. ஆடை வடிவமைப்பாளர் நளினி ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த இவருக்கு, முதல் வாய்ப்பு விக்ரம் பிரபுவின் ‘சிகரம் தொடு ’ படம். பிறகு வெளியான ‘காவியத் தலைவன்’ இவருக்கு பல விருதுகளை வாங்கிக் கொடுத்தது.

சத்யா:

சினிமாவுக்கு இவர் வந்த கதையே சுவாரஸ்யமான ஒன்று. கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதுதான் சத்யாவின் கனவு. அது நிறைவேறாமல் போக சினிமாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சினிமாவில் நடிகராகிவிட்டால் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட முடியும் என்பதால், அடிக்கடி சின்னச்சின்ன கேரக்டர்களில் திரையில் முகம் பதித்தார் சத்யா. நடிப்பு கிரிக்கெட்டுக்காக என்றால், இவரின் லட்சியம் காஸ்ட்யூம் டிசைனிங். பிரபல டிசைனர் வாசுகி பாஸ்கரிடம் பணியாற்றி தொழில் கற்றவர். ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’, ‘பிரம்மன்’ என தொடங்கிய பயணம், விஜய்க்கு ‘பைரவா’ படத்தில் ஆடை வடிவமைக்கும் வாய்ப்பை தந்தது. ரஜினிமுருகனில் கிராமத்து நாயகனாக சிவகார்த்திகேயனையும், ரோமியோ ஜூலியட்டில் கிளாமர் பாயாக ஜெயம்ரவியையும் காட்டினார். லோக்கலில் கிடைக்கும் டெனிம் ஆடைகளை வாங்கி, அதை ஆல்டர் செய்வது சத்யா ஸ்டைல். பைரவாவில் விஜய் ஆடைகள் இந்த ஸ்டைலிலேயே தயார் செய்திருக்கிறார் சத்யா. தற்போது இவரே டிசைன் செய்த ஆடைகளை கொண்ட, ஆண்களுக்கான  பொட்டிக்கையும் திறந்துவிட்டார்.

பூர்ணிமா ராமசாமி:

1930-களில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர்கள் எந்த மாதிரியான உடைகள் அணிந்திருப்பார்கள் என்பதை பரதேசி படத்தின் மூலம் அப்படியே கண்முன் நிறுத்தியவர், பூர்ணிமா ராமசாமி. இவரின் அறிமுக படம் பாலாவின் ‘பரதேசி’. சிறப்பு என்னவென்றால் முதல் படத்திலேயே ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை வென்றவர். ஜோதிகாவின் ரீ-என்ட்ரி படமான ‘36 வயதினிலே’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ என இரண்டிலும் ஜோதிகாவை வித்தியாசப்படுத்தி காட்டியவர் பூர்ணிமா. இறுதிச்சுற்று, விஐபி என பல படங்களில் பணியாற்றிவிட்டார். இவர் காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மருமகள். தவிர, பிரபல நாயுடுஹால் நிறுவனரின் மகள். பிறந்ததிலிருந்தே துணிகள் சார்ந்த பார்வையும் விருப்பமும் இவருக்கு அதிகம். உடைகள் மீதான பிரியம் இவரை ஆடை வடிவமைப்பாளாராக மாற்றியது. ஒவ்வொரு படத்திலும் பணியாற்றுவதற்கு முன்பு, அப்படம் சார்ந்து புத்தகங்கள் படிப்பது, பயணம் செய்வது மூலமாக சிறந்த ஆடைகளை சாத்தியப்படுத்துகிறார் பூர்ணிமா ராம்சாமி.

வாசுகி பாஸ்கர்:

மங்காத்தா படத்திற்காக அஜித்தின் சால்ட் & பெப்பர் லுக்கை முடிவு செய்தவர் ஆடை வடிவமைப்பாளர், வாசுகி பாஸ்கர். அப்படம் வெளியான பிறகு சால்ட் & பெப்பர் லுக் டிரெண்ட் ஆனது. வெள்ளை முடியுடன் வெளியே வர கூச்சப்பட்ட பலரையும், கெத்தாக உலாவ விட்டதில் வாசுகி பாஸ்கருக்கு மிகப்பெரிய பங்கு. இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகள் வாசுகி பாஸ்கர். ஃபேஷன் டிசைனிங் இவரின் கனவு. பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படம் இவரின் கனவை நிஜமாக்கியது. முதல் படமே பாரதிராஜாவுடன் என்பதால், பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. ஆனால் சினிமாவில் பணியாற்றுவதற்கு ஆரம்பத்தில் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதனால் உறவினர் வெங்கட் பிரபு படங்களில் முதலில் பணியாற்றத் தொடங்கினார். ‘சென்னை 28’ இரண்டாம் பாகம் வரையிலும் வெங்கட் பிரபுவிற்கு இவரே டிசைனர். தற்போது அரவிந்த்சாமி, த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை 2’வில் பணியாற்றி வருகிறார். சினிமா மட்டுமல்லாது, கமர்ஷியல் விளம்பரங்கள், மேடை நாடகங்கள், ஃபேஷன் நிகழ்ச்சிகள் என பல பரிமாணங்களில் வண்ணங்களைப் பரவவிடுகிறார் வாசுகி பாஸ்கர்.

கவுதமி:

2000-களில் சினிமாவைத் துறந்து சின்னத்திரையில் ஐக்கியமானார், கவுதமி. இந்திரா சீரியல், டிவி நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளர் என பல பரிமாணங்களுக்குப் பிறகு, கமல்ஹாசன் படங்களின் காஸ்ட்யூம் டிசைனராக பரிணமித்தார். தசாவதாரம் படத்திற்காக பல பாராட்டுகளும் விருதுகளும் இவருக்கு குவிந்தன. விஸ்வரூபம் படத்திற்காக தமிழ்நாடு அரசு விருதினையும் பெற்றார் கவுதமி. காஸ்ட்யூம் டிசைனிங்கில் இவரின் ஆர்வத்தை கண்டுபிடித்து, அதற்கு வடிவம் கொடுத்தவர் கமல்ஹாசன். தற்போது கமல்ஹாசனுடன் ஏற்பட்ட பிரிவால், மீண்டும் ஆடை வடிவமைப்பாளராக தொடர்வாரா என்பது சந்தேகமே.

முத்து பகவத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g