ஆரோக்கியமாய் வலம் வர ஆர்கானிக் வாழ்க்கை!

இயற்கையிலிருந்து நாம் வெகு தொலைவு நகர்ந்து வந்து விட்டாலும், அதன் மீதான ஈர்ப்பு, மனிதர்களாகிய நமக்கு என்றுமே குறைவதில்லை.அதற்கான நற்சான்றுதான் பரவும் ஆர்கானிக் பண்பாடு.

பொருள்வயப்பட்ட இன்றைய வாழ்வில், நல்லதை அறியும் நுண்ணுர்ணவையும், நுண்ணறிவையும் இழந்துவிட்டாலும், அதை நோக்கி திரும்ப எப்போதுமே, நாம் தயாரானவர்களாகவே இருக்கிறோம்.நல்லதை, இயற்கையானதை நேசிக்கும் ஆர்கானிக் வாழ்க்கை, நல்வாழ்வின் குறியீடாக, இன்று பரவி வருகிறது. ஆர்கானிக் லைப் ஸ்டைல், பல விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று. உணவுகளில் துவங்கி, வீட்டு உபயோகப் பொருட்கள் வரை, அனைத்திலும் ஆர்கானிக் என்ற சொல் தடம்பதிக்க துவங்கிவிட்டது. ஆர்கானிக் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது ஒரு டிரெண்டாகிவிட்டது. தொடக்கத்தில் காய்கறிகள், பழங்கள், பால் என உணவுப் பொருட்களில் மட்டுமே, ஆர்கானிக் சந்தைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் இன்று பல துறைகளில் ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகரித்து, வெற்றியும் பெற துவங்கியிருக்கிறது.

இதற்கு காரணம், மக்கள் மத்தியில் ஆர்கானிக் என்ற சொல்லுக்கு கிடைத்திருக்கும் நம்பகத்தன்மை. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக நாடுகளிலும் இந்த ஆர்கானிக் ஃபீவர் தொற்றிக் கொண்டிருக்கிறது. ஆர்கானிக் லைப் ஸ்டைல், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து துவங்குகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் பதப்படுத்துவதற்காக, பெரும்பாலும் ‘டாக்சிக்’ கெமிக்கல்களை கலக்குகின்றனர்.

“காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரஷ் ஆக வேண்டும் என்பதால், அவற்றை பளபளப்பாக காட்ட, சில ரசாயனங்களை தெளிப்பர். இதனால், நம் உடல் ஆரோக்கியம் பெரிதாக பாதிப்புக்குள்ளாகும். ஆர்கானிக் பொருட்களில், ‘பைட்டோ’ கெமிக்கல் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலில் எந்தவித நோயும் அண்டவிடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக, ஆர்கானிக் உணவுகளுக்கான சந்தை பெரியளவில் வளர்ந்து வருகிறது” என்கிறார், வேர் ஆர்கானிக் ஸ்டோரின் உரிமையாளர் ஸ்ரீராம்.

சிலர் விவசாயிகளுடன் கைகோர்த்து, ஆர்கானிக் முறையில் காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்து, அதை, ‘இ-காமர்ஸ்’ சந்தைகளின் மூலம், வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளனர். இது இப்போது இருக்கும் நுகர்வு கலாசாரத்தில், மக்களிடம் ஆர்கானிக் பொருட்களை கொண்டு சேர்க்க சிறந்த வழி. தற்போது சந்தையில் மசாலா பொருட்கள், ஓட்ஸ், பிரட், ஹெல்த் டிரிங்க் வகைகள், கீரின் டீ, சமையல் எண்ணெய் என, பல பொருட்களில் ஆர்கானிக் டிரெண்டு பலமாகி வருகிறது. சமீபகாலமாக, வீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைத்து, அதன் மூலம் ஆர்கானிக் உணவு முறையை பின்பற்றும் பழக்கமும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

உணவுக்கு அடுத்த இடம், ஆர்கானிக் ஆடைகளுக்கு!

இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் ஆடைகளுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை சாயங்கள், பருத்தி மற்றும் கைத்தறி துணிகள் பயன்படுத்தி, இவ்வகை ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ஆடைகளிலும் அதன் பிரதிபலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிவமைப்பாளர்களும் ஆர்கானிக் இழைகளை கொண்டு, பருத்தி மற்றும் பட்டு ஆடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியாவின் பல முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் கவனத்தை ஆர்கானிக் ஆடைகள் மீது திருப்பியிருக்கின்றன. குழந்தைகளுக்கான ஆர்கானிக் ஆடைகளின் சந்தை மதிப்பும், நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி ஆர்கானிக் ஷூ வகைகளும், மக்களின் விருப்பமாக தேர்வு செய்யப்படுகிறது. இவை பருத்தி துணிகளைக் கொண்டு கையால் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் உடலுக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் சிறந்த நண்பனாக இருக்கிறது. இதனால், பேஷன் உலகில், ‘எக்கோ’- பேஷன் என்று புதிய டிரெண்டு உருவாகி வருகிறது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, தன் வணிகத்தை பெருக்கிக்கொள்ளும் பேஷன் சமுத்திரம், ஆர்கானிக்கையும் விட்டு வைக்கவில்லை. ஆர்கானிக் முறையில், மக்களை ஈர்க்க தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவர்களை தயார்படுத்துகிறது. ஸ்கின் யோகா, பியூர் எர்த், சோல் ட்ரீ, இன்வேதா போன்ற நிறுவனங்கள், காஸ்மெட்டிக் பொருட்களை ஆர்கானிக் முறையில் தயாரிக்கின்றன. நேச்சுரல்ஸ், பேஜ் த்ரி, கிரீன் டிரெண்ட்ஸ் போன்ற பியூட்டி பார்லர்களும், தங்களுடைய மெனுவில் ஆர்கானிக் பேசியல்களைக் கொண்டு வந்திருக்கின்றன.

‘‘கெமிக்கல் முறையிலான, கிரீம்களை அளிப்பதால், சிலருக்கு ஸ்கின் அலர்ஜி உண்டாகும். ஆனால், ஆர்கானிக் முறையில் பேஷியல்களின் பழங்கள், கடலை மாவு, ஓட்ஸ் மாவு, எலுமிச்சை, மஞ்சள், முல்தாணி மெட்டி என பயன்படுத்துவதால், எந்தவித பக்கவிளைவுகளும் வருவதில்லை. சோப்பு, வாசனை திரவியம் என, எல்லாமே இயற்கை முறையில் கிடைக்கிறது. இதனால் ஆர்கானிக்கை பயன்படுத்தும் போது, யாருமே தயக்கம் காட்டுவதில்லை. ஆர்வத்துடன் பயன்படுத்தவே விரும்புகின்றனர்,’’ என்கிறார் ஆர்கானிக் பியூட்டி பார்லரின் உரிமையாளர் கவிதா. கடந்த ஆண்டு ஆர்கானிக் பொருள் பயன்பாடு குறித்து, சர்வே எடுத்ததில் இந்தியர்கள் அதிகமாக, ஆர்கானிக் முறையை விரும்புவதாகத் தெரிய வந்திருக்கிறது. மேலும், தன்னை காத்துக்கொள்ளும் இந்த ஆர்வம் பெண்களைவிட, ஆண்களுக்கே அதிகமிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் எண்ணிக்கை கூடுதல்.

ஆர்கானிக் வாழ்க்கை, நடுத்தர மற்றும் உயர்தர மக்களைக் காட்டிலும் விவசாயிகளுக்கு வளர்ச்சியை அளித்திருக்கிறது. சிலர் டிரெண்டாக இதை பார்த்தாலும், ஒரு சிலர் ஆர்கானிக் காய்கறி மற்றும் பழங்களை வாங்குவதால், விவசாயிகளுக்கு தங்களால் இயன்ற உதவி செய்வதாகக் கருதுகின்றனர். இதன் பலன் இதோடு நின்றுவிடவில்லை. இதனால் இயற்கையை பேணி காக்கவும், கெமிக்கல் முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான, நம் நிராகரிப்பை வெளிப்படுத்தவும், உடலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழவும் வழி உண்டாகிறது. ஆர்கானிக் பொருட்களால் உண்டாகும் நன்மைகளை விளங்கிக் கொண்டாலும், எல்லாராலும் அவற்றை வாங்கிவிட முடிவதில்லை. காரணம், அதன் விலை. பயன்பாடு பெருகும் போதுதான், உற்பத்திப் பெருகி, சந்தையில் விலை குறையும் என, நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். நல்லவை எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். ஆர்கானிக் அண்டமெல்லாம் பரவ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g