நிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம்! இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.

நிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம்! இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.

மண வாழ்வில் மகிழ்ச்சியை தக்க வைப்பதில், நிதித் திட்டமிடல் முக்கிய பங்காற்றுகிறது. பணத்தை சரியாக கையாளாதது, பணத்தைப் பற்றிய தவறான மனோபாவம், சேமிப்பு மற்றும் செலவு பற்றி தம்பதியருக்குள் வேறுபட்ட கருத்துகள், இவையெல்லாமே மண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பொதுவாகவே, பணத்தை திட்டமிட்டு செலவு செய்வதிலோ, சேமிப்பதிலோ, இளம் தம்பதியர் அவ்வளவு ஆர்வமும் முயற்சியும் காட்டுவதில்லை. எனினும், ஒன்றாக வசிக்கத் தொடங்கி, அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள பழகும் போது, அதன் முக்கியத்துவத்தை படிப்படியாக உணர்வார்கள். இளம் தம்பதியருக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு பணம் தொடர்பான விஷயங்கள் முக்கிய காரணமாக இருப்பதாக, குடும்ப நல ஆலோசகர்கள் கூறுகிறார்கள். புதிதாக திருமணமானவர்கள் மற்றும் இளம் தம்பதியர், தங்களின் நிதியை சரியாக கையாள உதவும் ஆலோசனைகள் இங்கே:

நிதி இலக்குகளை நிர்ணயிங்கள்

உங்களின் எதிர்காலத் திட்டங்களையும் இலக்குகளையும், உங்கள் துணைவருடன் ஆலோசியுங்கள். அவருடையதையும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களின் லைப்ஸ்டைல், லட்சியங்கள், வீடு, கார் போன்ற பெரிய முதலீடுகள், வெளிநாட்டு சுற்றுலா, இடம் மாறுதல் உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். இந்த இலக்குகளை பட்டியலிட்டு, இரண்டு பேருமாக சேர்ந்து, இவற்றை நிறைவேற்ற முன்னுரிமைகளை முடிவு செய்யுங்கள்.

பணத்தைக் கண்காணியுங்கள்

உங்கள் இருவரின் மொத்த வருமானம் மற்றும் செலவுகளை, சில மாதங்களுக்கு தொடர்ந்து கண்காணித்து, எவ்வளவு செலவாகிறது, எதற்கெல்லாம் செலவாகிறது, எப்படி செலவாகிறது என்பதையெல்லாம் அலசுங்கள். மாதா மாதம் செய்யும் நிலையான செலவுகளை பட்டியலிடுங்கள். அன்றாட வீட்டுச் செலவுகளையும் கவனியுங்கள். எழுதி வைக்கக் கடினமாக இருந்தால், இதற்கென இருக்கும் ஸ்மார்ட்போன் செயலிகளை கூட பயன்படுத்தலாம்.

பட்ஜெட் நிர்ணயிங்கள்

உங்கள் நிதி இலக்குகளை மனதில் கொண்டு, ஒரு மாதத்துக்கு இவ்வளவு தான் ஆகுமென்ற, அவசியமான செலவுகளை உள்ளடக்கிய பட்ஜெட்டை நிர்ணயிங்கள். எதிர்பார்க்கப்படும் வருமானங்கள் எவை என்பதை அடையாளம் கண்டு, அவற்றை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வழியையும் திட்டமிடுங்கள். மாதாந்திர செலவுகள், அவசர செலவுகள், முதலீடுகள், இன்ஷூரன்ஸ், சேமிப்பு என, ஒவ்வொன்றுக்கும் தொகையை ஒதுக்குங்கள். படிப்படியாக இவற்றை அதிகரிக்கவும் முயற்சியுங்கள்.

கணக்குகளை கையாளுதல்

திருமணத்துக்கு பிறகு, துணைவருடன் இணைந்து நீங்கள் ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்க விரும்பலாம். ஒரு மாதத்துக்கு எவ்வளவு தொகையை இந்த கணக்குக்கு ஒதுக்க முடியும் என்று கண்டறியுங்கள். உங்களின் நிதிச் சுதந்திரத்தை பராமரிக்க, தனிப்பட்ட வங்கிக் கணக்கையும் பராமரிப்பது அவசியம். வீட்டுச் செலவுகளுக்கு ஜாயின்ட் அக்கவுன்ட்டில் இருந்தும், தனிப்பட்ட செலவுகளுக்கு பர்சனல் அக்கவுன்ட்டில் இருந்தும் செலவிடுங்கள்.

அவசர நிதி அவசியம்

மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை, அவசர நிதிக்கு என்று கட்டாயம் ஒதுக்குங்கள். உங்கள் மாதாந்திர செலவுத் தொகையை போல, இது தோராயமாக மூன்று மடங்கு இருக்கட்டும். அவசர மருத்துவச் சிகிச்சை போன்ற அவசர காலத்தில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். இதை பணமாகவோ அல்லது உடனடியாக பணமாக மாற்றிக்கொள்ளக் கூடிய வங்கி பிக்சட் டெபாசிட் ஆகவோ வைக்கலாம்.

சேமிப்புகளும் முதலீடுகளும்

உங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கும் பணத்தை, சரியான வகையில் பாதுகாக்க வேண்டுமென்றால், நீண்டகால திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் நிர்ணயிக்கும் காலத்தில் பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்பைக் கடந்து, உங்களுக்கு லாபம் தருவதாக அந்த முதலீடு இருக்க வேண்டும். தங்கம், நிலம் தவிர்த்து, ஈக்விடி–லின்க்ட் மியூச்சுவல் பண்ட், யூனிட் லின்க்ட் இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. எனினும், தொழில்முறை நிதி ஆலோசகர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது.

ஆவணங்களை அப்டேட் செய்யுங்கள்

உங்களின் சேமிப்புகள், முதலீடுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மற்றும் பிற ஆவணங்களில், உங்கள் துணைவரை நாமினியாக அல்லது இணை பங்குதாரராக சேருங்கள். பெயர் மற்றும் முகவரிகளில் தகுந்த மாற்றங்களை தாமதமின்றி செய்திடுங்கள்.

தேவைகளை ஒன்றாக்குங்கள்

படிப்புக்கோ, திருமண செலவுக்கோ, சொந்த வீடு வாங்கவோ அல்லது பொருட்கள் வாங்கவோ, தம்பதியரில் ஒருவர் திருமணத்துக்கு முன்பு வாங்கிய கடனை தொடர்ந்து கட்டி வரலாம் அல்லது ஏதாவது நிதிப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம். திருமணத்துக்கு பிறகு, இதை அவரின் தனி பொறுப்பாக பார்க்காமல், இருவரின் பொறுப்பாக பார்ப்பதே சரியாக இருக்கும். உங்களின் குடும்ப பட்ஜெட்டில், அதையும் சேர்த்துக் கொண்டால் தான், ஒருவர் மட்டும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருவர் சுகமாக இருக்கும் முரண்பாடான நிலை ஏற்படாது. எனினும், இந்த விவரங்களை திருமணத்துக்கு முன்பே பேசி முடிவு செய்வது நல்லது.

ஓய்வுக்கால நிதி

ஓய்வுக்காலத்தில், உங்களின் நிதித் தேவையை எப்படி சமாளிப்பது என்பதைத் திட்டமிடுங்கள். உங்கள் இலக்கை அடைய, நீங்கள் மாதாமாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள நிதி ஆலோசகர்களை நாடுங்கள்.

இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸை பொறுத்தவரையில், ஆர்ம்பத்திலேயே தொடங்கி விடுவது நல்லது. ஒருவரோ, இருவரோ, எத்தனை பேர் சம்பாதித்தாலும், குடும்பத்தினர் அனைவருக்குமே இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு மிகவும் அவசியம். உங்களின் தேவைகளின் அடிப்படையில், சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g