செப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’

செப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’

இந்த ஆண்டு ‘உலக இதய தினம்’ அன்று, இதயத்தின் ஆரோக்கியம், நோய்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த’ என் இதயம், உங்கள் இதயம், எல்லோரின் இதயம்’  என்ற முழக்கத்துடன், அனைவரின் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும் என வாக்குறுதி அளிக்கும்படி, உலக ஹார்ட் ஃபெடரேஷன் அமைப்பு  கோரிக்கை விடுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 29 ஆம் தேதி, உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்களை அதிகம் தாக்கும் நோய்களில், இதய-ரத்தநாள நோய்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், சர்க்கரை நோய், உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இந்த நோய்க்கு முதன்மை காரணமாகின்றன.

இந்த ஆண்டு இதய நாளன்று, புதிய உறுதிமொழியை ஏற்கும்படி உலக ஹார்ட் பெடரேஷன் கேட்டுக் கொள்கிறது. ‘சமைத்தல் மற்றும் உணவு இரண்டும் ஆரோக்கியமானதாக இருக்கும், குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிப்பேன், புகைப்பிடிப்பதை, மது அருந்துவதைத் தவிர்ப்பேன், தேவையான உடற்பயிற்சிகள் செய்வேன், எல்லாவற்றுகும் மேலாக, என் அன்புக்குரியவர்களையும் இவற்றையெல்லாம் பின்பற்ற வைப்பேன்’ என்ற உறுதிமொழியை  எடுக்க அறிவுறுத்துகிறார்கள்.

இதன் மூலம், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சிறிய மாற்றங்கள் மூலம், இதய கோளாறுகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மேலும், இது  நம் வாழ்வின் தரத்தை மேம்படுத்துவதோடு, அடுத்தத் தலைமுறைக்கும் சிறந்த உதாரணமாக இருக்கும்.

இதய ஆரோக்கியமே, அனைத்து ஆரோக்கியத்திற்கும் அடிப்படை!

உலகளவில், இதய – ரத்தநாள நோய்களால், ஓர் ஆண்டில் மட்டும், 17.5 மில்லியன் மக்கள் மரணம் அடைகின்றனர். இந்த இறப்பில், 80 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் ஏற்படுகிறது. மேலும்,  புகைப் பிடிப்பதால், ஆண்டுக்கு 6 லட்சம் பேர் இறப்பதாகவும், அதில் குழந்தைகள் 28 சதவீதம் இருப்பதாகவும் கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம். இதில், 10 சதவீதம் பேர், இதய – ரத்தநாள நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

மாரடைப்பு, நோயுற்ற நாளங்கள், இதயத்தின் கட்டமைப்புப் பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், கார்டியாக் அரஸ்ட் போன்ற இதய-ரத்தநாள நோய்களுக்கு பின்வரும் காரணங்கள் தான் முதன்மையானவை என்கின்றனர் மருத்துவர்கள்:  ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன், புகைப்பிடைத்தல், கெட்டக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை நோய்.

சத்துள்ள காலை உணவு, உங்கள் இதயத்தை எப்படி ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது என்பதை விளக்குகிறார், காவேரி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர். கே. பி.சுரேஷ் குமார்.

டாக்டர்.கே.பி. சுரேஷ் குமார்

காலை உணவு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  ஆனால், காலை உணவு எப்படி நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் (AHA) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், காலையில் சாப்பிடும் உணவு, இதய ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துகிறது என்பதற்கு ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்கள்.

 • காலை உணவு உட்கொள்ளும் போது, உடல் ஊக்கம் பெற்று, உங்களுடைய இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படும்.
 • தொடர்ந்து காலை உணவு தவிர்க்கப்படும் போது, சாப்பிடும் முறையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பது மற்றும் சீரணக் கோளாறு காரணமாக, இதயம் பாதிக்கப்படும்.
 • காலையில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரல் பாதிப்பு குறையும்.
 • காலை நேரத்தில், சீரண மண்டலம் வேகமாக செயல்படும். அதற்காக செரிக்க கடினமான உணவுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பழங்கள், காய்கறிகள் எளிதாக சீரணமாகும். இது இதய செயல்பாட்டுக்கு நல்லது.

 என்ன வகையான காலை உணவு சிறந்தது?

காலை உணவை ஆரோக்கியமாக திட்டமிட, இதோ சில ஆலோசனைகள்:

 • நார்ச்சத்து – நார்ச்சத்துள்ள சிறுதானிய வகைகள், பீன்ஸ் வகைகள், பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதோடு, இதயத்திற்கும் சிறந்தது.
 • லீன் புரோட்டீன் – முட்டை, மீன், பருப்பு வகைகள்.
 • கொழுப்பு – எண்ணெய் மற்றும் வெண்ணெய்.

சில உணவுகளை காலையில் சாப்பிடும் போது, இதயம் சிறப்பாக செயல்படும். அதேபோல, நாள் முழுவதும் உடலுக்கு சக்தி கிடைக்கும்.

பிரேக்ஃபாஸ்ட்  டிப்ஸ்

 • ராகி அல்லது கம்பு கஞ்சி.
 • சமைத்த ஓட்ஸுடன் காய்கறிகளின் கலவை.
 • இட்லி அல்லது தோசையுடன் சாம்பார். சிறிது நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • கோதுமை பிரெட்டுடன் வெஜிடபிள் ஆம்லெட்
 • கோதுமை பிரெட் சாண்ட்விச்
 • உப்புமா அல்லது அவலுடன், சாம்பார் அல்லது சட்னி.

காலை உணவை தவிர்ப்பதற்கு பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம், நேரமின்மை என்பதுதான். ஒன்று உணவு தயாரிக்க நேரமில்லை என்று சொல்வார்கள் அல்லது சாப்பிட நேரமில்லை என்று சொல்வார்கள். எப்போதுமே நீங்கள் வயிறு முட்ட சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. பிரேக்ஃபாஸ்ட் என்று சொல்வதற்கு காரணமே, உணவை பிரித்தாவது உண்ணுங்கள் என்பதற்காகத்தான். பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ், பழ ஜூஸ் என, ஒன்றையாவது சாப்பிடுங்கள்.

காலை நேரத்தில்  வெறும் வயிறோடு இருப்பதை தவிர்ப்பது, நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. காலையில் சாப்பிடவில்லை என்றால் இதய கோளாறு வருமா என்று கேட்காதீர்கள். வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் இதுவும் முக்கிய பங்கு வகிப்பதால், உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

இதய கோளாறுகளிலிருந்து காக்கும் 4 வழிகள்

உங்கள் இதயத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் 

 எப்போதுமே நோய்க்கான தகவல்களை அதிகம் சேகரிக்கிறோமே தவிர, உறுப்புகளின் செயல்பாட்டையோ அல்லது வராமல் தடுக்கும் காரணிகளுக்கோ நாம் முன்னுரிமை அளிப்பதில்லை. விளைவு, நோய் வராமலேயே பயம் கொள்கிறோம். மாறாக,  இதய நோயை அறிந்து கொள்வதற்கு இதய உறுப்பின் அடிப்படை செயல்பாட்டை  தெரிந்து கொள்வோம். இதன் மூலம், இதயத்தை  எப்படி பாதுகாக்கலாம் என்பதற்கான அறிவும் சேர்ந்து கிடைக்கும்.

இதயத்திற்கான எரிபொருளை கொடுங்கள்

 வண்டிக்கு தேவையான எரிபொருள் இருந்தால் தான், அதன் செயல்திறனும் சிறப்பாக இருக்கும். அதேபோல், இதயத்திற்கு தேவையான எரிபொருள், அதாவது தேவையான சத்துக்கள், வைட்டமின்கள் உணவுமுறையில் சேர்த்துக் கொண்டால் இதயத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதயத் துடிப்பை சீராக்குங்கள் 

நம்முடைய வயது போலவே இதயத்திற்கும் வயது இருக்கின்றது. அதாவது இன்று பல பேருக்கு, அவர்களின் உடல் வயதை விட, இதயத்தின் வயது அதிகமாக இருக்கின்றது. காரணம் உடலுழைப்பு இல்லாதது, அதீத டென்ஷன், கோபம், படபடப்பு, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. உடற்பயிற்சி, யோகா, தியானம், விளையாட்டு போன்ற நடவடிக்கைகள் மூலம், உங்கள் இதயத்தின் வயதைக் குறைக்கலாம்.

உங்கள் இதயத்தை நேசியுங்கள் 

எப்போதுமே நாம் இதயத்தையும் நேசத்தையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது. அப்படிப்பட்ட  இதயத்தை நேசிக்காமல் இருக்கலாமா? நீங்கள் ஒருவரை நேசித்தால் என்ன செய்வீர்கள், கண்டிப்பாக தீங்கு செய்ய மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.  அவர்களிடம் அன்பாக பேசுவது, பிடித்ததை வாங்கி கொடுப்பது, அக்கறையாக பார்த்துக் கொள்வது, பாதுகாப்பது என பல விஷயங்கள் செய்வீர்கள்.  அதைப் போலவே, ஜங்க் உணவுகளை தவிர்ப்பது, புகைக்காமல் இருப்பது, மனதை அமைதியாக ஆனந்தமாக வைப்பது, அவ்வப்போது இதயத்தை கவனித்து என்ன பிரச்னை என்று அறிவது, உடற்பயிற்சி செய்வது என, உங்கள் இதயத்தையும் நேசிக்க தொடங்குங்கள். அதோடு மட்டுமில்லாமல், உங்கள் அன்புக்குரியவர்களின் இதயத்தையும் சேர்த்து நேசியுங்கள்.

                                                                                                                                                  -ராதா சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g