#டிரெண்டிங்# ஜீன்ஸ் பேன்ட்டை தலைகீழாக அணிய முடியுமா?

#டிரெண்டிங்# ஜீன்ஸ் பேன்ட்டை தலைகீழாக அணிய முடியுமா?

ஜீன்ஸ் பேன்ட்டின் சமீபத்திய டிரெண்ட் நம்மை அசர வைக்கிறது. பார்த்தவுடனே பற்றிக் கொள்ள வைக்கிறது. என்ன டிரெண்ட் தெரியுமா?

ஜீன்ஸ் பேன்ட்டை  தலைகீழாக அணிய முடியுமா? என்ன தலைகீழாகவா… எப்படி முடியும் என தலை சுற்றுகிறதா? அட, அதுதாங்க இப்போதைய டிரெண்டே!

நம் பழைய ஜீன்ஸ் பேன்ட்களுக்கு உயிர் கொடுப்பதற்காகவே வந்த ஸ்டைல் இது எனலாம். தனித்துவத் தோற்றத்தை அளிக்கும் இந்த பேன்ட், கையிலேயே வடிவமைக்கப்படுகிறது. காண்பதற்கு வழக்கம்போல் இல்லாமல், ஹெம்லைன் என்று சொல்லக் கூடிய பேன்ட்டின் அடிப்பகுதி இடுப்பிற்கும், வழக்கமான ஜீன்ஸின் பாக்கெட், பெல்ட் லூப் பகுதி அடியிலும் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது.  ஸிப், முற்றிலும் உள்ளுக்குள் மறைக்கப்பட்டுவிடுகிறது. சட்டென காண்போருக்கு, தலைகீழாக பேன்ட்டை மாற்றி அணிந்து விட்டாரோ என்று சில நிமிடம் கவனிக்க  வைக்கிறது.

இந்த பேன்ட் ஸ்டைலை முதன்முதலில் நியூயார்கைச் சேர்ந்த டிசைனர் கெல்ஸி ஷொஃபீல்ட் ( Kelcie Schofield ) என்பவர்தான் வடிவமைத்திருக்கிறார். சி.ஐ.இ., என்பது இவரின் பிராண்ட் பெயர்.  இது பெண்களுக்கான பிராண்ட். இதனை உருவாக்குவதற்கு வின்டேஜ் ஜீன்ஸ் என்று சொல்லப்படும் 1960, 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் ஹிட் அடித்த ஜீன்ஸ்  பேட்டர்ன்களை தேர்வு செய்து, அவற்றை மறு ஆக்கம் செய்திருக்கிறார். இதனால் பழமையை மீட்டெடுத்த விதமாகவும், அதேவேளை இன்றைய தலைமுறைகளின் விருப்பத்திற்கு ஏற்ற ஸ்டைலாகவும் மாறி, இந்த ஸ்டைல் ஹிட் அடித்து விட்டது. இந்த சி.ஐ.இ., பிராண்டில் நான்ஸி ஷார்ட், எல் ஷார்ட்ஸ், லூக்காஸ் ஜீன்ஸ், வில் ஜீன்ஸ், மைக் ஜீன்ஸ் என, பல வகைகளில் வித்தியாசமான நிறச் சாயங்களை அளித்து நமக்கு அளிக்கின்றனர். இதில் தொடை முதல் கெண்டைக்கால் வரை, அனைத்துவித நீள அளவுகளிலும் கிடைக்கின்றன.

என்னதான் பிராண்டுகள் இத்தகைய ஸ்டைலை அளித்தாலும் , நம் திறமையாளர்கள் தாங்களாகவே டிசைனர்களாக மாறி, தங்களிடமிருக்கும் பழைய ஜீன்ஸ் பேன்ட்களை கத்தரித்து , தைத்து அணிந்து அசத்துகின்றனர். நீங்களும் இந்த ஸ்டைலை ஃபாலோ செய்ய நினைத்தால், யுடியூபில் பல செய்முறை வீடியோக்கள் கிடைக்கின்றன. அதைப் பார்த்து முயற்சி செய்யுங்கள். கூட்டத்தில் தனித்தவராகக் கலக்குங்கள்.

ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g