உலக கருத்தடை தினம்: கருக்கலைப்பின் துயரிலிருந்து விடுபடும் வழிகள்!

உலக கருத்தடை தினம்: கருக்கலைப்பின் துயரிலிருந்து விடுபடும் வழிகள்!

படித்தவர்களாக இருந்தாலும் கருத்தடை என்று வரும் போது ஒருவிதத் தடுமாற்றம் வரத்தான் செய்கிறது.  கருத்தடை என்றால் என்ன? கருத்தடை எப்பொழுது, ஏன் அவசியம்? கருத்தடை என்பது பெண்களுக்கு மட்டும்தானா? என்று பல கேள்விகளும், குழப்பமும் பலருக்கும் உண்டு. இந்த விஷயங்கள் பற்றி பேசவோ, சிந்திக்கவோ கூட இன்றைய தலைமுறை கூச்சப்படுகிறது என்பதே நிதர்சனம். இன்றைய தினம் கூச்சத்தை விலக்குங்கள். கருத்தடை குறித்தத் தெளிவை பெறுங்கள்.

கருத்தரிப்பதென்பது பெண்களுக்கு இயற்கை அளித்த வரம். வேண்டாத கர்ப்பமென்றால், அதுவே அவர்களுக்கு சாபம். கரு உருவான பின் கலைப்பதை விட, கரு உருவாகாமல் பார்த்துக் கொள்ளும் கருத்தடையே பெண்களுக்கு நன்மை செய்யக் கூடியது. விரும்பாத நேரத்தில் உருவாகும் கர்ப்பம் ஆண், பெண் என இருபாலரின் மன நிம்மதியையும் கெடுத்து  அமைதியை சீர் குலைக்கும். பொதுவாக இரண்டு சூழல்களில் தான் வேண்டாத கர்ப்பம் உருவாகிறது.

சூழல் 1:

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் இளம் காதலர்கள். ஓர் உணர்ச்சி வேகத்தில் மனதைப் போலவே உடலையும் ஒன்றாக்கிவிட்டார்கள். எதிர்பாராமல் நிகழ்ந்தது, அவர்களுக்கே எதிராகிவிட்டது. அந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள். இந்நிலையில் இருவரின் எதிர்காலம் என்னவாகும்?

சூழல் 2:

திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகிவிட்ட தம்பதியினர். இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பம்! நாம் இருவர் நமக்கு இருவர் என திட்டமிட்டு வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், தம்பதியருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி. மனைவி மீண்டும் கர்ப்பமாகிவிட்டார்.

திருமணத்திற்கு முன்னரோ, திருமணத்திற்கு பின்னரோ…எதுவாயினும் வேண்டாத கர்ப்பம்  துயரத்தையே அளிக்கும். ஒழுக்க அளவுகோலை தூர வைத்துவிட்டுப் பார்த்தால், திருமணத்திற்கு முன்னர் கருத்தரித்தல் என்பது அப்பெண்ணுக்கு பெரும் கேடாகவே முடிகிறது. யாரிடமும் சொல்ல முடியாமல், வழிகாட்டுதலும் பெற முடியாமல் பருவ வயதினில் இருக்கும் பெண்கள் கூட, கருக்கலைப்பு எனும் கொடுமைக்கு ஆளாகின்றனர்.  இந்தியாவில் பத்து மில்லியன் பெண்கள் ஆண்டுதோறும் ரகசியமாக அபார்ஷன் செய்து கொள்வதாக ஓர் ஆய்வுக் குறிப்பிடுகிறது.

இப்படியான வேண்டாத கருக்கலைப்புக்கு கருத்தடை குறித்த அறிவின்மையும், கருத்தடை சாதனங்களின் போதாமையுமே காரணம். பெரும்பாலும் அலட்சியம், கவனக் குறைவு, திட்டமிடல் இல்லாதது, அவசரம் போன்ற சூழலியல் காரணங்களே வேண்டாத கர்ப்பத்திற்கு காரணமாகின்றன. ஆண்களைப் பொறுத்தவரை,  இன்பத்திற்கு இடையூறு என்ற கருத்தை வைத்திருக்கின்றனர். அவர்கள் கருத்தடையில் எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்வதில்லை. உறவு கொள்வது மட்டுமே தன் வேலை என்றளவில் தான், இந்திய ஆண்களின் மனநிலை இன்றும் இருக்கிறது. இதனால் உடலுறவின் இன்பத்தை ஆண்களும் துன்பத்தையும் பெண்களும் சுமக்க நேரிடுகிறது. மேலும், உடலுறவினால் பரவ வாய்ப்புள்ள பால்வினை நோய்களை தடுப்பதிலும், சில கருத்தடை சாதனங்கள் உதவுகின்றன.

கருத்தடையின் வகைகள்

கருத்தடைக்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. தற்காலிக கருத்தடை, நீண்டகால கருத்தடை நிரந்தரமான கருத்தடை  என, கருத்தடையை மூன்று வகைகளில் வகைப்படுத்தலாம்.

தற்காலிக கருத்தடை என்பது  கருத்தரிக்காமல் பாதுகாக்க, உடலுறவின் போது பயன்படுத்தும் முறையாகும். கருத்தடை உறைகள், கருத்தடை மாத்திரை, கருத்தடை பட்டை (Patch), கருத்தடை ஊசி போன்றவை தற்காலிகக் கருத்தடையாகக் கருதப்படுகின்றன. நீண்டகால கருத்தடை என்பது சில வருடங்களுக்கு கருத்தரிப்பதிலிருந்து காப்பதற்கான வழிமுறைகளாகும். காப்பர்- T, இம்ப்ளான்ட் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை. நிரந்தர கருத்தடை என்பது குடும்பக் கட்டுப்பாட்டிற்கென செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள்.  இனி, ஒவ்வொரு கருத்தடை வழிமுறைகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

கருத்தடை உறை – காண்டம்

விலை குறைவானதும், எளிதில் கிடைக்கக் கூடியதுமான கருத்தடை சாதனம் காண்டம் எனப்படும் உறை. ஆண், பெண் என இருபாலருக்குமான ஆணுறை மற்றும் பெண்ணுறை கிடைக்கிறது. உடலுறவின் போது கருத்தடை உறை அணிந்துகொண்டால் கர்ப்பம் தடுக்கப்படுகிறது. ஆணுறுப்பிலிருந்து வெளியேறும் விந்து, பெண்ணுறுப்பில் சேராமல் தடுக்கிறது ஆணுறை. அதுமட்டுமின்றி, எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் தொடர்பான நோய்கள் பரவாமலும் தடுக்கிறது.  கருத்தடைக்கு எளிமையான சிறந்த வழி இதுதான். உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது.

ஆனால், ஆணுறை அணிந்தால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது என்ற மூட நம்பிக்கையால், பெரும்பாலான ஆண்கள் அதை புறக்கணிக்கின்றனர். சரியாக அணியவில்லை என்றால், உடலுறவின் போது உறை நழுவி விடும் அல்லது கிழியும் வாய்ப்பு ஏற்படலாம்.   ஆனால் மிக அரிதான சூழலிலேயே இது நடக்கிறது என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரிக்காமல் துணையைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருந்தால், ஆணுறை அணிய தயங்க மாட்டார்கள். சிலர் பழக்கமில்லை என்பார்கள். தொடர்ந்து அணியும் போது ஆணுறை அணிவதில் உணரும் அசவுகர்யம் நீங்கிவிடும் என்பதே உண்மை. மிக முக்கியமாக, ஆணுறைகள் பாலியல் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன.

பெண்ணுறைகளைப் பொறுத்தவரை, அது நம் நாட்டில் இன்னும் பரவலாகவில்லை.  பெண்களுக்கான மற்ற பல கருத்தடை வழிகள் இருப்பதால், இவற்றை அதிகமாக பெண்கள் பயன்படுத்துவதில்லை.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளே இன்று பெண்கள் பரவலாக  பயன்படுத்தும் கருத்தடை முறையாக இருக்கிறது. இம்மாத்திரைகள், கருமுட்டை வெளியேறுவதையும், விந்துவின் செயல்பாட்டையும் தடுக்கும் வேலையைச் செய்கின்றன. குழந்தை பேறை தடுக்கும் என்றாலும், எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் கலந்த மாத்திரைகள் தான் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. 21 நாட்கள் அல்லது 28 நாட்கள் சாப்பிடக்கூடிய மாத்திரைகள் கிடைக்கின்றன. தவிர, உடலுறவு மேற்கொண்ட 24 மணிநேரத்திற்குள் எடுத்துக் கொள்ளப்படும் அவசர நிலை மாத்திரைகளும் கிடைக்கின்றன. எந்தவிதம் என்றாலும், மருத்துவரின் ஆலோசனைப் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சிறந்தது. மினி பில் (Mini-pill) எனப்படும் ஈஸ்ட்ரோஜன் மாத்திரைகளும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

கருத்தடை ஊசி 

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்வதன் மூலமும் கருவைத் தடுக்க முடியும். இது பெண்களுக்கானது. இது கருமுட்டை வெளியாவதை தடுப்பதோடு, மாதவிலக்கு ஏற்படுவதையும் நிறுத்திவிடுகிறது. மேலும்,  விந்தணுக்கள் கருப்பையில் நகர முடியாத நிலையை ஏற்படுத்தும். இதனால் பெண் கர்ப்பம் அடைய முடியாது. ஊசி போடுவதை நிறுத்தினால் சில மாதங்களில் மாதவிலக்கு சீராகி கர்ப்பம் அடைய முடியும். இத்தகைய ஊசிகளில் சில நம்பகமான பிராண்ட்கள் 99% அளவுக்கு கர்ப்பத்தைத் தடுக்கின்றன. ஆனால் தொடர்ந்து ஹார்மோன் ஊசியைப் பயன்படுத்துவதால், ஹார்மோன் அளவில் மாறுபாடு, கருப்பையில் நீர்க்கட்டி, சீரற்ற மாதவிலக்கு, மார்பகங்கள் இளகுதல் அல்லது மார்பகங்களில் வலி போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும். அரிதான சூழல்களில் பயன்படுத்த மட்டுமே இது ஏற்றது.

பேட்ச் 

மிக எளிமையான வழிமுறை இது. உடலில் வயிறு, பின்புறம், முதுகு, கைகள் உள்ளிட்ட எந்த  இடத்திலாவது, கான்ட்ராசெப்டிவ் பட்டைகளை ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த பேட்சிலிருந்து வெளியேறும் கருத்தடை மருந்து, சருமத் துவாரங்களின் வழி உடலினுள் செல்லும். அது கர்ப்பம் ஆவதைத் தடுத்து நிறுத்தும். வாராவாரம் இந்த பட்டையை மாற்ற வேண்டும். வாட்டர் ப்ருப் என்பதால் குளிக்கும் போதும் பிய்த்துக் கொள்ளாது. மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து, சீரான இடைவெளியில் பயன்படுத்தவேண்டியது அவசியம். இதுவும் ஹார்மோன் பட்டைகளே என்பதால் அடிக்கடி பயன்படுத்தினால், உடலின் இயற்கையான ஹார்மோன் சமநிலையில் பாதிப்பை உண்டாக்கக்கூடும். உடலில் சில தொந்தரவுகளும் உருவாகும்.

வளையம்

வஜைனல் ரிங் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கருத்தடை வளையத்தை,  மாதவிலக்கின் முதல் நாள் பெண் உறுப்பினுள் செலுத்திவிடவேண்டும். அடுத்த 21 நாட்களுக்கு எந்த கவலையும் இல்லை. சரியாக 21 வது நாள், வளையத்தை வெளியே எடுத்துவிட வேண்டும். அதிலிருந்து ஒரு வாரம் வளையம் இல்லாமல் இருக்கலாம். மீண்டும் மாதவிலக்கு நாளில் வளையத்தை பழைய முறைப்படி உட்செலுத்திக் கொள்ளுங்கள்.  ஒருவேளை இந்த சுழற்சியை நீங்கள் மறந்து வளையத்தை வைக்காமல் போயிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். எப்போது நினைவுக்கு வந்தாலும் வளையத்தை உள்ளே வைக்கலாம். ஆனால், அதிலிருந்து ஒரு வாரம் ஆணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவு கொள்ள வேண்டும். ஏழு நாட்களுக்கு பிறகு ஆணுறை தேவைப்படாது.

மாதத்திற்கு ஒரே ஒரு வளையம் போதுமானது. இது மிகவும் பாதுகாப்பான செயல்முறை. 99% கரு உருவாகாமல் தடுக்கிறது. ஆனால் இது பாலியல் நோய்களில் இருந்து பாதுகாக்காது. பயன்படுத்தும் முறையும் எளிமையானதுதான். வளையத்தை பிறப்புறுப்புக்குள் செலுத்தி, வசதியான வகையில் பொருத்திவிடுங்கள். உடலுறவின் போது வளையம் இருப்பதை இருவருமே உணர்வீர்கள் என்றாலும், அதில் ஒரு பிரச்னையும் இல்லை.   பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்படும் இந்த வளையம் வெளியேற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள், கரு உருவாவதைத் தடுக்கிறது. பயன்படுத்தும் முறையில் ஏதேனும் குழப்பம் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இதுவும் ஹார்மோன் சார்ந்தது என்பதால், மேலே குறிப்பிட்ட உடல் தொந்தரவுகள் வரலாம். ஆனால் பெரிதளவில் இதனால் பாதிப்பில்லை.

காப்பர்- டி உள்ளிட்ட ஐ.யு.டி., சாதனங்கள்

நீண்ட காலத்திற்கு கர்ப்பத்தை தடுக்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் பெண்கள் மத்தியில் அதிகமாக பயன்படுத்தப்படும் வழிமுறைகளில் ஒன்று. காப்பர் மற்றும் பிளாஸ்டிக் கொண்ட ‘T’ வடிவ கருவி, கருப்பையினுள் செலுத்தப்படுகிறது. இந்த காப்பர்- டி சாதனமானது கருப்பைச்சுவரின் சளிப்படலத்தை அடர்த்தியாக்கி, விந்தணுக்கள் கருப்பைக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்துகிறது. காப்பர்- டி கருவியை மருத்துவரே கருப்பைக்குள் செலுத்த முடியும்.  மூன்று வருடம் முதல் பத்து வருடம் வரை, கருவுறுதலிலிருந்து விடுதலை பெற இந்த காப்பர்-டி சிறந்தது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் முறையாக செக் அப் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.  காப்பர்-டி இடமாற்றம் அடைந்திருந்தால் கண்டுபிடிக்க இது உதவும்.

சிலருக்கு ரத்தப்போக்கு, வலி, நோய்த்தொற்று உள்ளிட்ட பிரச்னைகள் பக்க விளைவுகளாக ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனை படியே பொருத்திக்கொள்ள வேண்டும். இது பாலியல் நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்காது.

அறுவைச் சிகிச்சைகள்

இனி குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கும் ஆண்களும், பெண்களும் செய்து கொள்ள வேண்டிய நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை இது. ஆண்களுக்கு வாசக்டமி, பெண்களுக்கு டியூபக்டமி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

பெண்களுக்கு செய்யப்படும் டியூபக்டமி என்பது, ஃபல்லோபியன் குழாயை இடையில் துண்டித்து முடிச்சிடும் அறுவைச் சிகிச்சையாகும். இதனால், சினைப்பையில் இருந்து வெளியேறி வரும் அண்ட அணு (கருமுட்டை), ஃபல்லோபியன் குழாயை கடந்து விந்தணுவுடன் சேர்வது தடுக்கப்படுகிறது. இதனால் கருவுறுதல் நடைபெறுவதில்லை.

ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாஸக்டமி என்பது, விதைப் பையில் உருவாகும் விந்தணுக்கள், விந்து நாளங்கள் வழியாக வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு, விந்து நாளங்களை துண்டித்து முடிச்சிடப்படும் எளிய அறுவை முறையாகும். அறுவை சிகிச்சை செய்த அன்றைய நாளே, வீடு திரும்பலாம். பொதுவாக இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால், ஆண்களால் இயல்பான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதைப் போல ஒரு மூட நம்பிக்கை நிலவுகிறது. சில திரைப்படங்கள் அதுபோன்ற காட்சி அமைப்புகளால் தவறான நம்பிக்கையை பரப்பிவிட்டன. ஆனால் அது உண்மையல்ல. வாசக்டமி, ஆணின் உறுப்புகளில் எவ்வித பாதிப்பையும் உண்டாக்குவதில்லை என்பதை மனதில் பதியுங்கள்.

இயற்கை வழியையும் பின்பற்றுங்கள்!

கருவிகள் இன்றி, இயற்கையான முறையில் கருத்தடை மேற்கொள்வது பற்றிய அறிவும் நமக்கு தேவை. எவ்வித செயற்கையான கருவிகளும் இல்லாமல், உடல் மொழியை அறிந்து, அதற்கேற்றவாறு உடலுறவு கொள்ளும் போது, கருத்தரிப்பை தடுக்க முடியும்.

ரிதம் காலண்டர் முறை :

பெண்களின் மாதவிடாய் காலத்தின் அடிப்படையில் உடலுறவு மேற்கொள்ளுதல். பொதுவாக பெண்களுக்கு, 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதன் அடிப்படையில் மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்குப் பிறகே, கருத்தரித்தலுக்காக கருமுட்டை வெளியெ வரும்.  மேலும், மாதவிடாய் ஏற்படுவதற்கு 1 வாரத்திற்கு முன்பே, கருமுட்டை வலிமை இழந்துவிடும். இதனடிப்படையில், மாதவிடாயின் முன்பும், பின்பும் 1 வாரம் பாதுகாப்பான நேரம். அந்த நேரங்களில் உடலுறவு கொண்டால் பெரும்பாலும் கர்ப்பம் உண்டாகாது. எனினும், இது முழுமையான பாதுகாப்பு முறையல்ல. மேலும், இதைக் கடைபிடிப்பதும் சற்று சிரமமாக இருக்கும்.

வெளியே எடுத்தல் 

உடலுறவு கொள்ளும் போது, விந்து வெளியேறும் தருணத்தில், பெண்ணுறுப்புக்குள் அதை  செலுத்திவிடாமல், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடும் போது, விந்தணு கருப்பைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. கட்டுப்பாடும், சமயோஜித சிந்தனையும் இதற்கு மிகவும் அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே இந்த செய்முறை கைகொடுக்கும். மேலும், இது முழுமையான கருத்தடுப்பு முறை கிடையாது. இதில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

– நீலன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g