இனி எல்லாமே ‘இ-சிம்’தான்!

இனி எல்லாமே ‘இ-சிம்’தான்!

சமீபத்தில் இந்திய அரசு, இந்தியாவில் இ-சிம் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, அதிரடியாக களத்தில் குதித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் XS, XS MAX மற்றும் XR ஆகிய மூன்று ஐபோன்களிலும், புதிய தொழில்நுட்பமான இ-சிம் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இ- சிம் என்றால் என்ன? அதன் பயன்பாடு எப்படி இருக்கப் போகிறது?

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் எல்லோரும் டூயல் சிம் பயன்பாட்டுக்கு அப்கிரேடு ஆகிவிட, ஐபோன் பயனாளர்கள் மட்டும் அந்த வசதிக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது டூயல் சிம் (நானோ சிம் + இ-சிம்) வசதியையும் கொடுத்து, இ-சிம் என்கிற புதிய தொழில்நுட்பத்தை ஐபோன்களில் அறிமுகப்படுத்தி, இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

இ-சிம் என்றால் என்ன?

நாம் எல்லோரும் மினி, மைக்ரோ மற்றும் நானோ என்கிற மூன்று வெவ்வேறு வகையிலான சிம்கார்டுகளைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சிம்கார்டுகள், சிம் ஸ்லாட்களில் பொருத்தும்படியாகவும், வெளியில் எடுக்கும் படியாகவும் இருக்கும். ஆனால் இ-சிம் என்பது அப்படியில்லை. இவை, புரோகிராம் மூலம் எம்பெடட் (ஸ்மார்ட்போன்களுக்குள் நிலையாக பொருத்தப்பட்ட சிப் போன்றது) செய்யப்பட்டிருக்கும். இந்த சிம்களை பொருத்த அதிக இடம் தேவைப்படாது. அதனால் மெல்லிய சாதனங்களில் கூட இ-சிம்களை பொருத்த முடியும்.

இனி வெளிவரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் புரோகிராம் செய்யப்பட்ட எம்பெடட் சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது சிம்கார்டுகளை வாங்குவது போல, மொபைல் ஆப்பரேட்டர்களிடம் இ-சிம்கார்டுகளையும் வாங்கலாம். அந்த கார்டுகளில் இ-சிம்கார்டுகளுக்கான எண் மற்றும் QR கோட்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதை ஸ்மார்ட்போன்கள் அல்லது ஐபோன்கள் வழியாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். ஸ்கேன் செய்த அந்த நொடியிலிருந்து, இ-சிம் வசதியை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம் கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. சிம்கார்டு வாங்கிய பிறகும், ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் வராது.

சாதகங்கள்:
* இப்போது இருப்பது போல, சிம்கார்டுகளை ஸ்லாட்டிலிருந்து கழற்றி மாட்ட வேண்டிய அவசியம் இ-சிம் கார்டுகளில் கிடையாது. இதனால் சிம்கார்டுகள் தொலைந்து போக வாய்பில்லை.
* புதிய தொழில் நுட்பம் என்பதால், அதை பிரபலப்படுத்துவதில் நிறுவனங்கள் முனைப்புடன் இருக்கும். அதுமட்டுமில்லாமல், பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ள, புதிய ஆஃபர்களை அள்ளி வழங்குவார்கள்.
* சுண்டு விரல் நகத்தின் அளவை விட, இ-சிம் கார்டுகள் சின்னதாக இருக்கும் என்பதால், ஐபோன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் மட்டுமில்லாமல், சிறிய அளவிளான ஸ்மார்ட் வாட்ச்களிலும் இ-சிம்கார்டுகளை பொருத்த முடியும்.
* அடிக்கடி ஓவர்சீஸ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இ-சிம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் மொபைல் ஆப்ரேட்டர்களின் சிக்னலை ஆட்டோமேட்டிக்காக இ-சிம்கார்டுகள் பெற்றுக்கொள்ளும் என்பதால், அந்த நாட்டின் சிம்கார்டுகளை வாங்குவதில் இருக்கும் சிரமத்தை தவிர்க்க முடியும்.

பாதகங்கள்:
* ஐபோன் அல்லது ஸ்மார்ட்போன்களுக்கு உள்ளேயே, இ-சிம்கார்டுகள் எம்பெடட் செய்யப்படுவதால், வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி இல்லாத போன்கள் தண்ணீரில் தவறி விழும்போது, இசிம்கார்டுகள் வேலை செய்யாமல் போவதற்கோ அல்லது செயலிழப்பதற்கோ வாய்ப்புகள் இருக்கிறது.
* உலக அளவில் இ-சிம் கார்டு சர்போர்ட் செய்யும் ஆப்பரேட்டர்கள் தற்போது குறைவாகவே இருக்கிறார்கள். வோடாபோன் ஏற்கெனவே இ-சிம் வசதியை ஆதரித்து சேவைகளை வழங்கி வந்தாலும், ஏர்டெல் மற்றும் ஜியோ மாதிரியான ஆபரேட்டர்கள் இப்போதுதான் களமிறங்கியிருக்கிறார்கள்.
* தற்சமயம் இந்த தொழில்நுட்பம் பத்து நாடுகளில் உள்ள நெட்வொர்க்குகளில் மட்டுமே வேலை செய்கிறது.
* அனைத்து ஐபோன் மாடல்களிலும், ஆப்பிளின் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடம் இருந்ததால், இந்த வசதி அந்நிறுவனத்துக்கு சாத்தியமாகி இருக்கிறது. அதேபோல, மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தங்களை அப்கிரேடு செய்து கொள்ளும் வரை, உயர் ரக ஸ்மார்ட்போன்களில் மட்டுமே, இ-சிம் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– செ.கார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g