ராம்ப் வாக்கில் ஜொலித்த மணமகள் ஆடைகள்!

ராம்ப் வாக்கில் ஜொலித்த மணமகள் ஆடைகள்!

கடந்த வாரம் சென்னை ஐ.டி.சி கிராண்ட் சோலா ஹோட்டலில், சென்னையின் டாப் பிரைடல் ஃபேஷன் டிசைனர்களுக்கான பிரைடல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

வண்ண விளக்குகளுக்கிடையே தேவதைகள் அணிவகுப்பு என்று வருணிக்கும் அளவிற்கு பிரமாண்ட ஆடைகள், கலைநயமிக்க நகைகள் என மாடல்கள் மேடையை அலங்கரிக்க, ரசிகர்களின் ஆரவாரம் அரங்கத்தை அதிர வைத்துவிட்டது. சென்னையில் நடக்கும் பிரமாண்ட பேஷன் ஷோக்களில், மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோவும் ஒன்று. இந்நிகழ்ச்சி சென்னையில்  ஃபேஷனைக் கொண்டாடும் பிரைடல் கோட்யூர் டிசைனர்களுக்கான மாபெரும் கொண்டாட்ட விழா. இந்நிகழ்ச்சியை, ஷான் அண்ட் டென் நிறுவன இயக்குநர் ஷண்முகப் பிரியா மற்றும் வெடிங் வாவ்ஸ் மாத இதழும் இணைந்து நடத்துகின்றனர்.

இதில் இந்தியாவின் டாப் டிசைனர்களான ரஹானா பஷீர், ஷ்ரவன் குமார், வாணி ரகுபதி விவேக், சந்தோஷ் குமார் என பல டிசைனர்கள் கலந்து கொண்டனர். கூடுதலாக டிசைனர்களின் ஆடைகளை பிரத்யேகமாக அளிக்கும் டிசைனர் பொட்டிக் ஸிங்பி,   பச்சையப்பாஸ் சில்க்ஸ், என். ஏ.சி ஜுவல்லர்ஸ் என, ஒரு திருமணப் பெண்ணிற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் சங்கமித்த ஒரு நிகழ்ச்சியாக இது நடந்தேறியது.

இவை எல்லாவற்றையும் விட, நிகழ்ச்சியின் ஷோஸ்டாப்பர்கள் தான் காண்போரை குதூகலிக்கச் செய்துவிட்டனர். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி, சஞ்சிதா ஷெட்டி,  சஞ்சனா நடராஜன், வாணி போஜன் , அஜ்மல் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் டிசைனர் ரஹானா பஷீர்,  க்யூசா ஈகிள் என்கிற தீமில் ஆடைகளை வடிமைத்திருந்தார். அதாவது ஆகாந்தஸ் தாவரங்களின் வடிவங்களால் ஈர்க்கப்பட்டு அதன் வடிவமைப்பை அப்படியே ஆடைகளில் ஓவியமாக்கியிருக்கிறார். ரஹானாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த நடிகை இஷா தல்வார், அவரது கலெக்‌ஷன்களை அணிந்து அணிவகுத்தார்.  சிவப்பு நிற லெஹங்காவில் தங்க நிற எப்ம்பராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது.  இஷா நிஜமாகவே ஒரு மணப்பெண்ணைப் போல ஜொலித்தார். ஆடைக்கு ஏற்ற குந்தன் அணிகலன்கள் மிகப் பொருத்தம்.

நடிகை பிரியா பவானி ஷங்கர், ஸிங்பி பொட்டிக்கின் ஷோஸ்டாப்பராக மேடையை அலங்கரித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தற்போதைய டிரெண்ட் வெல்வெட் ஃபேப்ரிக்கில் வடிவமைத்த கவுன் அல்லது லெஹங்கா ஆடைகள்தான். அதற்கு ஏற்ப ஸிங்பியின் பிரத்யேக வெல்வெட் லெஹங்கா ஆடையை அணிந்து, அழகு தேவதையாக தோன்றினார். கருப்பு நிற வெல்வெட் ஆடைக்கு ஏற்ப, தங்க நிற மோட்டிவ்ஸ்  பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அதற்கு ஏற்ப நெக்லஸ் மற்றும் காதணிகள் அணிந்து, பொன் சிரிப்புடன் ராம்ப் வாக் செய்தார் பிரியா.

திருமண பட்டிற்குப் பெயர்போன பச்சையப்பாஸ், தனது புது பிரின்ட்களை அறிமுகப்படுத்தியது. ருத்ரா, மயில் என ‘கிளாசிக் முதல் கான்டெம்ப்ரரி’ என்கிற கருவில்,  காஞ்சிப் பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தியது. கூடுதலாக வைப்ரன்ட் நிறங்களான ஊதா, சிவப்பு, பச்சை போன்ற வண்ணங்களை பயன்படுத்தி புடவையை நெய்திருந்தது, ஜொலிக்கும் பட்டின் பொலிவைக் கூட்டியது. இதன் ஷோஸ்டாப்பராக சஞ்சனா நடராஜன், மேடையில் ராம்ப் வாக் செய்தார்.

இப்படி ஒவ்வொரு டிசைனர்களும்  தங்களின் திறமை மற்றும் கிரியேட்டிவிட்டியை உரமாக்கி, ஆடைக்கு மட்டுமன்றி அணியப்போகும் பெண்ணிற்கும் அழகு சேர்த்திருக்கின்றனர்.

ஏ. சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g