தம்பதியருக்குள் புரிதலை மேம்படுத்தும், பின்னூட்டம்!

தம்பதியருக்குள் புரிதலை மேம்படுத்தும், பின்னூட்டம்!

திருமணமான தம்பதியரோ காதலர்களோ, இருவருக்குள்ளும் பிடித்த விஷயங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால், வாழ்க்கைத் துணைவர் அல்லது காதலரிடம் பிடிக்காத ஒன்றிரண்டு விஷயங்கள், அந்த உறவின் நெருக்கத்தையே கெடுத்து விடக்கூடும். இந்த பிடிக்காத விஷயங்கள், நடத்தை முறைகள் பற்றி, உங்களுடைய விமர்சனத்தை, அதாவது பின்னூட்டத்தைத் துணைவரிடம் வெளிப்படுத்தத் தெரிந்து கொண்டால், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடரும். இதற்கு கீழ்க்கண்ட எளிய விதிகளை கடைபிடிக்கலாம்.

உன்னை பற்றியதல்ல; நீ செய்ததைப் பற்றியது!

பின்னூட்டம் அளிப்பதில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் இது. அதாவது, உங்களின் விமர்சனமானது, துணைவரின் குறிப்பிட்ட நடத்தையை பற்றியது தானே தவிர, அவரது ஒட்டுமொத்த ஆளுமை பற்றியதல்ல என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. உதாரணத்துக்கு ‘நீ சுயநலம் கொண்ட ஆள்’ என்பதற்கும், ‘சுயநலம் கொண்ட மனிதரைப் போல நீ நடந்துகொண்டாய்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

முதல் வாக்கியத்தில், அந்த குறிப்பிட விஷயம் அவரது குணமாக அர்த்தப்படுவதால், அது மாற்றிக்கொள்ள முடியாதது என்று அர்த்தம் தொனிக்கிறது. இது உங்கள் துணைவரை கோபம் கொள்ளவோ அல்லது பாதிக்கவோ செய்யும். ஆனால், இரண்டாவது வாக்கியத்தில், அவர் அடிப்படையில் இனிமையானவர் தான். ஆனால், அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், அந்த குறிப்பிட்ட விஷயத்தில் அவர் நடந்துகொண்டதுதான் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அர்த்தம் தொனிக்கும். இப்படி குறிப்பாக சொல்வது, அவருக்கு புரிய வைத்து, அந்த சங்கடம் தரும் விஷயத்தை அவர் மாற்றிக்கொள்ள தூண்டும்.

இது என்னைப் பற்றியது, உன்னை பற்றியதல்ல

உங்கள் துணைவர் அப்படி நடந்துகொள்ள அல்லது அப்படி பேச எது காரணம் அல்லது எந்த நோக்கம் என்பது, உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். உங்களுக்கு தெரிந்த விஷயம், அது உங்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு தான். அதேபோல, இந்த விஷயத்தை நீங்கள் அவருக்கு சொல்லாத நிலையில், உங்கள் மனம் புண்பட்டதை அல்லது நீங்கள் வருத்தப்படுவதை, அவர் அறிந்துகொள்ளவும் வழியில்லை. ஆகவே, உங்களின் பின்னூட்டமானது, அவர் என்ன சொன்னார் என்பதையும், அது உங்களிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது என்பதையும் அவருக்கு புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.

இது குறிப்பிட்ட விஷயம் பற்றியது மட்டுமே

நீங்கள் உங்கள் துணைவரின் குறிப்பிட்ட நடத்தை அல்லது விஷயம் பற்றி மட்டும் விமர்சனம் செய்யும்போது,, அவருக்கு அந்த விஷயத்தை மாற்றிக்கொள்வதும் எளிது. உதாரணத்துக்கு, “இந்த வாரம் நீ செய்த விஷயங்கள் எல்லாம், என்னை ரொம்பவே வெறுப்பேற்றிவிட்டது” என்று சொல்லும் போது, பிரச்னை உங்களிடம் தான், அவர்களிடம் இல்லை என்பது போலாகிவிடும். மேலும், உங்களுக்கு பிடித்தபடி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் புரியாது. ஆகவே, அதற்கு பதிலாக, “ஹால் நடுவில் நீ அப்படியே ஷூக்களை போட்டுவிட்டு சென்றது, என்னை கடுப்பேற்றியது’ என்பது போல சொல்லலாம்.

அந்த வாரம் முழுவதும் உங்களுக்கு பிரச்னையாக இருந்திருக்கலாம். இல்லையெனில், நீங்களே அதை சரிசெய்து விட்டிருப்பீர்கள். உங்களின், 10 ஆண்டு திருமண வாழ்க்கையில், நீங்கள் இதைச் சொல்வது இப்போதுதான் முதன் முறையாக இருக்கலாம். ஆனால், உடனடியாக உங்கள் துணைவர் நிலைமையை புரிந்துகொண்டு, அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கிவிடுவார்.

இப்போது நடந்த விஷயம் பற்றி மட்டுமே…

சிறந்த பின்னூட்டமென்பது, உடனடியாக அளிக்கப்படுவது அல்லது குறைந்தது அந்த காலகட்டத்திலேயே வெளிப்படுத்துவதே. உங்களை தொந்தரவு செய்த அந்த விஷயம் நடந்து ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு கழித்து, அதைப் பற்றிப் பேசுவது உதவாது. அண்மையில் அவர் நடந்துகொண்ட விதம், இப்போது நடந்துகொள்வது பற்றி மட்டுமே பின்னூட்டம் அளியுங்கள். எவ்வளவு சீக்கிரமாக சொல்கிறீர்களோ, அந்த அளவுக்கு சிறப்பானது.

சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும்

தவறான நேரம் எதுவென நாம் அறிந்திருப்போம். நீங்கள் மட்டுமோ, நீங்கள் இருவருமோ கோபமாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கலாம். அல்லது சோர்வாக, பசியிலோ எங்காவது போகும் அவசரத்திலோ இருக்கலாம். இப்படிபட்ட சூழ்நிலைகள் அமைதியான, கவனமான பின்னூட்டத்தை அளிக்கவோ அல்லது சொல்லப்படுவதைக் கேட்டு நேர்மறையாக செயலாற்றவோ விடாது. இப்படிபட்ட சூழ்நிலைகளில் பின்னூட்டம் அளிப்பதை தவிர்ப்பதே சரி. அல்லது உங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, பின்னர் வெளிப்படுத்தலாம்.

பதிலாக, நீங்கள் இருவரும், ரிலாக்ஸ் ஆகும் வரையில் அல்லது பேசுவதற்கு தயாராகும் வரை காத்திருங்கள். வார இறுதி அல்லது அன்றைய தினம் மாலை நேரத்தில் பேசுவது சரியாக இருக்கும். அப்போது டிவி, போன், புத்தகம் எல்லா இடையூறுகளையும் தவிருங்கள், உங்கள் கருத்தை அமைதியாக எடுத்துச் சொல்லுங்கள்.

செயல்படத் தூண்டும் பின்னூட்டங்களை அளிப்பது ஒரு திறமை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு திறமையையும் கற்றுக்கொள்வதற்கும், வளர்த்துக் கொள்வதற்கும் நேரம் தேவைப்படுவது போல, இதற்கும் கொஞ்சம் காலம் தேவைப்படும். பழகப் பழக இதில் தேறி விடுவீர்கள். அப்போது இருவரின் புரிதல் மேம்பட்டு காதலும் உறவும் நெருக்கமாகும்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g