மண வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நேர நிர்வாகம்

மண வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நேர நிர்வாகம்

தம்பதியருக்கு, தங்களுடைய நேரத்தை சரியான முறையில் நிர்வகிக்க தெரியவில்லை எனில், அது படிப்படியாக மண உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தின் மகிழ்ச்சியும், தம்பதியரின் நெருக்கமும் மறைய தொடங்கும். மாறாக, நேரத்தை சரியாக கையாளத் தெரிந்துகொண்டால், மணவாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.

உறவுகளில் தனிச்சிறப்பானது மண உறவு. உடலாலும் உள்ளத்தாலும் இணையும் தம்பதியர், கடைசிவரை அன்புடன் இணைந்திருப்போம் என்றே திருமண நாளில் உறுதி ஏற்கின்றனர். ஆனால், நடைமுறை வாழ்க்கையின் நெருக்கடிகளும், பிரச்னைகளும், திருமண உறவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதும் நிகழ்கிறது. மணமான புதிதில், ஒருவர் மற்றவருக்காக நிறைய நேரம் செலவிடுகிறோம். ஆனால், போகப் போக இது குறைந்துவிடுகிறது.

குழந்தை பிறந்த பிறகு எப்படி அவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது என்று, குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோரை கேட்டால் தெரியும். கைகோர்த்து நடப்பதும், கட்டி அணைப்பதும், கொஞ்சுவதும் அரிதான விஷயங்களாக, கவனமாக திட்டமிட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டிருக்கும். வேலை, குடும்பக் கடமைகள் போன்றவற்றால் துணைவருடனும், குடும்பத்துடனும் செலவிடும் நேரம் குறையும் என்பது உண்மைதான். ஆனால், நேரத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கையாள தெரிந்துகொண்டால், போதுமான நேரத்தை உங்கள் குடும்பத்துக்கும், தனிப்பட்ட முன்னேற்றத்துக்கும் பெற முடியும்.

தம்பதியினருக்கான நேர மேலாண்மை உத்திகள்: 

• அடுத்த நாளுக்கான வேலைகளை, முந்தைய நாளே திட்டமிட்டு நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதனால் அடுத்த நாள் ஏற்படக்கூடிய பதட்டம் மற்றும் குழப்பங்களை தவிர்க்கலாம். இதனால் உங்களின் நேரமும் மிச்சமாகும்.

• உங்களுடைய அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி நிரலை, என்னென்ன வேலைகள் உள்ளன, எப்போது செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்களை, உங்கள் துணைவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான், உங்களிடம் எப்போது பேச முடியும், நீங்கள் எப்போது பிசியாக இருப்பீர்கள் என்பதையெல்லாம் அறிந்து, அதற்கேற்ப அவர்களும் திட்டமிட முடியும்.

• உங்களின் பிசியான வாரத்தில், அன்புக்குரியவருடன் செலவிட, நேரத்தை உருவாக்க கொஞ்சம் முயற்சிகள் தேவைப்படும். அந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம்.

• உங்களுடைய துணைவரின் அன்றைய நாளின் நிகழ்ச்சி நிரலைத் தெரிந்துகொண்டால், அவர் எப்போது ஓய்வாக அல்லது நேரத்தை செலவிடும் சூழலில் இருப்பார் என்பதை அறியலாம். அப்படிபட்ட நேரத்தில் அவரை திடீரென சந்த்தித்து, காபி ஷாப்புக்கோ அல்லது உணவகத்துக்கோ அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சிக் கொடுக்கலாம்.

• வீட்டு வேலைகளில் உங்கள் துனைவருக்கு உதவ முயற்சியுங்கள். அவர் பிசியாக இருக்கும் போது, பள்ளியில் இருந்து திரும்பிய குழந்தைகளை கவனித்துக்கொள்வது அல்லது அவர்களின் வீட்டுப் பாடங்களில் உதவுவது போன்றவற்றை செய்யலாம். இதனால், உங்கள் துணைவருக்கு கூடுதல் நேரம் கிடைப்பதுடன், தேவையற்ற பதட்டமும் பரபரப்பும் தவிர்க்கப்படுகிறது. இது உறவை நெருக்கமாக்கும்.

• பரபரப்பான, ஓய்வற்ற தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபட்டு இளைப்பாற, அவ்வப்போது விடுமுறைக்கு துணைவருடன் ஒன்றாக வெளியில் சென்று வாருங்கள். ஆண்டுக்கு இரண்டு முறையாவது, சுற்றுலா அல்லது பயணம் மேற்கொள்ளலாம்.

• தம்பதியராக உங்களுக்குள் ஒரு பொதுவான ஆர்வம் இருக்கலாம். நீங்கள் ஒன்றாக இந்த வகுப்புக்கு செல்லலாம். இதனால் உறவு நெருக்கமாகும்.

• நண்பர்களை சந்திக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கும் உங்கள் துண்வருக்கும் பொதுவான நண்பர்கள் இருந்தால் ஒன்றாக சந்தித்து மகிழலாம். இருவருக்கும் வெவ்வேறு நண்பர்கள இருந்தாலும், அவர்களை சந்திக்க நீங்களும் உங்கள் துணைவருடன் சென்று வரலாம்.

• உங்களுக்கென தனியாக நேரத்தை ஒதுக்குங்கள். அதேபோல, ஒரு நாளில் குறிப்பிட்ட நேரமாவது, தனக்கென தனியாக நேரத்தைச் செலவிட உங்கள் துணைவருக்கும் வாய்ப்பளியுங்கள். இந்த நேரத்தில் புத்தகம் படித்தல், ஓவியம், விளையாட்டு, ஜிம், ஸ்பா, இப்படி ரிலாக்ஸ் செய்யவும் அமைதிப்படுத்தவும் உதவும் செயல்களில் ஈடுபடலாம்..

• நாள் முழுவதும் வேலையிலேயே மூழ்கி, இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள்.

• முடிந்தவரை, இரவில் ஒன்றாக படுக்கைக்கு செல்லுங்கள். இது எண்ணங்களை பகிரவும், மனம்விட்டுப் பேசவும் வாய்ப்பை உண்டாக்கும். ஒன்றாக உறங்குவது அன்னியோன்னியத்தை அதிகரிக்கும்..

• தினசரி ஒரு வேளையாவது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட நேரம் ஒதுக்குங்கள். இது அன்றைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், குடும்பத்தின் பாசப் பிணைப்பை அதிகரிக்கவும் உதவும்.

• எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் தனிப்பட்ட, அலுவலக நேரங்களை முறைபடுத்துங்கள். சரியான முறையில் திட்டுமிட்டு வேலைகளை செய்தால், நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை குடும்பத்துடன் செலவிடலாம்.

-செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g