சென்னைக்கு அருகிலுள்ள, அழகிய இயற்கை சுற்றுலா தலங்கள்!

சென்னைக்கு அருகிலுள்ள, அழகிய இயற்கை சுற்றுலா தலங்கள்!

சென்னை நகரை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு இடங்கள், ஆன்மிகத் தலங்கள், இயற்கையான இடங்கள் என, பலவேறு இடங்கள் இருக்கின்றன. இவற்றுள், சென்னையில் இருந்து, 100 கி.மீ., தொலைவுக்குள் இருக்கும் இயற்கைய்ழகு நிறைந்த இடங்கள் மட்டும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. குடும்பத்துடன் அவசியம் காண வேண்டிய இடங்கள் இவை.

பழவேற்காடு ஏரி & பறவைகள் சரணாலயம்

சென்னையில் இருந்து பொன்னேரி வழியாக ஆந்திரம் செல்லும் வழியில், 60 கி,மீ., தொலைவில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி, இந்தியாவின் உவர் நீர் கொண்ட இரண்டாவது பெரிய உப்பங்கழி என்பது குறிப்பிடத்தக்கது. கடல், உப்பங்கழி, சதுப்புநில என வித்தியாசமான சூழலை இங்கே காணலாம்.

இந்த ஏரியின் நடுவில் உள்ள நிலம் பறவைகள் சரணாலயமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிளெமிங்கோ பறவைகள் கூட்டமாக இங்கு வருகின்றன. இதுதவிர, கூழைக்கடா, ஹெரான், கிங்பிஷர், நாரைகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகளையும் இங்கு பார்க்கலாம்.

அருகில் சில மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. ஆர்வமிருந்தால் சென்று பார்க்கலாம். ராக்கெட் ஏவுதளம் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவு அருகில் தான் உள்ளது. படகுச்சவாரிக்கும், கடலுணவுகளை சுவைக்கவும், டிரெக்கிங் போகவும் இங்கு வாய்ப்புண்டு. பழைய கோவில், தேவாலயம், பழங்கால டச்சு கட்டுமானம் உள்ளிட்டவையும் உண்டு. பறவை ஆர்வலர்களுக்கும், சென்னை பெரியமேடு நிறுத்தத்தில் இருந்து நேரடி பேருந்து வசதி உண்டு. ரயிலில் செல்வதென்றால், 10 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கும் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து போக வேண்டும். போட்டோகிராபியில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் ஏற்ற இடமிது.

தடா அருவி

மாசுபடாத நீரில் நாள் முழுவதும் ஆட்டம் போடவேண்டுமா? இயற்கையான சூழலில் தனிமையை செலவிட வேண்டுமா? நண்பர்களுடன் டிரெக்கிங் போக வேண்டுமா? இவற்றுக்கு பொருத்தமான இடம், உப்பலமடுகு அருவி என்று அழைக்கப்படும் தடா அருவி. சென்னையில் இருந்து ஆந்திரம் செல்லும் வழியில், சுமார் 92 கி.மி., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்துக்கு அருகில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அழகிய அருவியில் குளிப்பது, ஆனந்த அனுபவமாக இருக்கும். பளிங்கு நீரும், பசுமையான காடும் தடாவின் அடையாளம். அருவி உருவாகும் மலைப்பகுதிக்கு செல்வது சற்று கடினமான பயணமாக இருக்குமென்பதால், சாகச பிரியர்களுக்கு பிடிக்கும்.

சாலை வழியாக செல்வது எளிது. பேருந்தில் செல்வதாக இருந்தால், கோயம்பேட்டில் இருந்து காளஹஸ்தி போகும் பேருந்தில் சென்று வரதபாளையத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஆட்டோ வசதி உண்டு. ரயில் செல்வதாக இருந்தால் சூலூர்பேட்டையில் சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். இயற்கை சூழலில் ஒரு நாளை உற்சாகத்துடன் செலவிட தடாவுக்கு பயணிக்கலாம்.

சத்ராஸ் (எ) சதுரங்கப்பட்டினம்

சென்னைக்கு அருகில் இருக்கும் மிகவும் அழகிய கடற்கரை சுற்றுலா தலம் சத்ராஸ். சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ., தொலைவில், மாமல்லபுரத்துக்கு தெற்கே அமைந்துள்ள இந்த கடற்கரையில், சவுக்குத் தோப்புகள் அழகைக் கூட்டுவதுடன், அந்த இடத்தை நிழலால் நிரப்புகின்றன. மனம் மயக்கும் இயற்கைக் காட்சிகளை வெளிப்படுத்தும் இது தம்பதியராக கண்டுகளிக்க ஏற்ற இடம்.

தவிர, இங்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த டச்சு கோட்டையும் உள்ளது. ஒரு காலத்தில் ஏற்றுமதி கேந்திரமாக இருந்ததால், அதன் அடையாளமாக தானிய களஞ்சியம், தொழுவம், யானைகளை ஏற்ற உதவிய கட்டுமானங்கள், கல்லறை உள்ளிட்ட கட்டுமானங்கள் உள்ளன. குடும்பத்துடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல ஏற்ற இடமிது.

கோனே அருவி

சென்னைக்கு அருகில் இருக்கும் மற்றொரு சிறந்த சுற்றுலா தலம், கைலாச கோனே அருவி என்றழைக்கப்படும் கோனே அருவி. புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் வழியில், 95 கி.மி., தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி, உங்களின் சோர்வை நீக்கி உற்சாகம் ஊட்டக்கூடியது. 30 மீ., உயரத்தில் இருந்து அலையலையாக பாறைகளில் வழிந்து, அடியிலுள்ள குளத்தில் வீழுகிறது. பளிங்கு போன்ற இந்த அருவி நீரில் மருத்துவ குணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கைலாச கோனேவுக்கு, சாலை வழியாக செல்லலாம். புத்தூருக்கு 10 கி.மீ.,க்கு முன்பாக பிரிந்து செல்லும் சாலையில் பயணித்தால், பசுமையான வனப்பகுதியில் இது அமைந்துள்ள இந்த அருவியை அடையலாம். இங்குள்ள பழமையான சிவன் கோவில் பிரசித்தமானது. இது ஆன்மிகத் தலமாகவும் இருப்பதால், திருப்பதிக்கும் சென்று வரும்போது, இதையும் பார்த்துவ்ட்டு உற்சாகம் பெற்று வரலாம்.

நாகலாபுரம்

வார இறுதியில் செலவிட மிகவும் பொருத்தமான இடங்களில், நாகலாபுரமும் ஒன்று. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில், 105 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம், இயற்கை அழகு நிரம்பிய வனப்பகுதி மட்டுமல்ல; ஆன்மிகத் தலமும் ஆகும். சிறந்த ‘டிரெக்கிங்’ பயண வழித்தடமாக இருப்பதால், எப்போதும் இளைஞர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. இது மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது.

உடலின் ஒவ்வொரு செல்லையும் உற்சாகம் கொள்ள வைக்கும் நாகலாபுரத்தின் மலை உச்சியில் இருந்து, அங்குள்ள அதிசய குளத்தையும், பரந்து விரிந்த மலைப்பகுதியையும் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இங்குள்ள மற்றொரு அற்புதம், 15ம் நூற்றாண்டை சேர்ந்த வேத நாராயண சுவாமி கோவில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். சென்னையில் இருந்து சாலை வழியே பயணித்தால், 2-3 மணி நேரத்தில் சென்றடையலாம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இந்தியாவிலேயே பரப்பளவில் சிறிய பறவைகள் சரணாலயமாக இருந்தாலும், இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல் தான். சென்னையில் இருந்து 78 கி.மீ., தொலைவில், மதுராந்தகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இடப்பெயர்ச்சி காலத்தில், இந்தியாவில் இருந்தும், உலகின் பல பகுதிகளில் இருந்தும், 115 இனங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து, திரும்பிச் செல்கின்றன.

இங்கு வந்து தங்கிச் செல்லும் பறவைகளுக்கு ஆதாரமே, இங்குள்ள ஏரி நீர் தான். புதுவிதமானப் பறவைகளை பார்ப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கும். குழந்தைகளுடன் சென்று காண வேண்டிய இடமிது. நவம்பர் – மார்ச் காலகட்டம் பறவைகளை காண சிறந்த சீசன். மேலும், பறவைப் பார்த்தல், போட்டோகிராபி ஆர்வமுள்ளோருக்கு பொருத்தமான இடம்.

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g