கைக்குழந்தை ஏன் அழுகிறது? 10 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

கைக்குழந்தை ஏன் அழுகிறது? 10 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

கைக் குழந்தைகளின் ஒரே மொழி அழுகை. தனக்கு ஏதேனும் தேவை என்றாலோ, ஏதேனும் பிடிக்கவில்லை என்றாலோ, அவை அழுகையின் மூலமே, நம்மோடு பேசுகின்றன.

அப்போதெல்லாம் குழந்தை அழும் முறையை வைத்தே, அது பசி அழுகையா அல்லது பிரச்னை அழுகையா என்பதை புரிந்து கொள்ளும் நுண்ணுணர்வும் அறிவும் மனிதர்களுக்கு இருந்தது. இன்றைய பெற்றோரோ, குழந்தை அழுதாலே அலறி அடித்து மருத்துவமனைக்கு ஓடுகின்றனர். எல்லா நேரமும் உடல் உபாதைகளால் குழந்தை அழுவதில்லை என்பதையும், குழந்தைகளை சமாதானப்படுத்தும் வழிகளையும் அறிந்து கொண்டால் பதட்டப்படத் தேவையில்லை.

எனக்கு பசிக்கிறது

குழந்தைகள் பொதுவாக அழுதே பசியை உணர்த்துகின்றன. குழந்தை எப்போதும் கொஞ்ச கொஞ்சமாகவே உண்ணும். காரணம் அதனுடைய வயிற்றின் கொள்ளளவு. நீண்ட நேரம் பால் குடிப்பதை போல தெரிந்தாலும், எல்லா நேரமும் அதன் வயிறு முழுமையாக நிரம்பி விடாது. அதனால் சற்று நேரத்திலேயே அது மீண்டும் பசிக்கு அழலாம். இப்போதுதானே குடித்தது என நினைக்காமல், மீண்டும் பால் கொடுத்துப் பாருங்கள்.

எனக்கு ஏப்பம் வருகிறது

பசியாறியப் பின் ஏப்பம் வருவது இயல்பான விஷயம்தான். பால் குடித்தப் பின்னர் ஒரு குழந்தை அழுகிறது எனில், அது ஏப்பத்திற்காக இருக்கலாம். தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் குடிக்கும் போது குழந்தைகள் காற்றையும் சேர்த்து விழுங்குகின்றன. அது வயிற்றுக்குள் இருக்கும் போது, குழந்தை அசவுகரியமாக உணரும். முதுகில் மெதுவாக தட்டுவது, வயிற்றை நீவுவது போன்றவை ஏப்பம் வெளியேற உதவும்.

நான் சோர்வாக இருக்கிறேன்

கைக்குழந்தைக்கு எப்படி சோர்வு வரும் என நீங்கள் நினைக்கலாம். சதா அதை கையில் தூக்கி வைத்திருப்பது, குழந்தையை சோர்வாக்கும். கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என குழந்தை நினைக்கும் போது, நீங்கள் கொஞ்சிக் கொண்டிருந்தால் அது அழத் தொடங்கிவிடும். படுத்திருக்கும் போது அழுதாலும் அதை தட்டிக் கொடுத்தோ பாட்டுப் பாடியோ தோளில் போட்டோ தூங்கச் செய்ய முயற்சியுங்கள்.

உடை அல்லது டயப்பர் பிடிக்கவில்லை

நம் சவுகரியத்திற்கு விலையுயர்ந்த ஆடைகளை போட்டுவிடுவோம். ஆனால் குழந்தை அதை விரும்புவதில்லை. தடிமனான, காற்றுப் புகாத, எடை கொண்ட ஆடைகளை அணிந்திருக்கும் குழந்தைகள் அழ நேரிடும். அதேபோல, ஈரம் படிந்த டயப்பரை மாற்றவில்லை என்றாலும் அழுகையின் மூலம் மாற்றச் சொல்லும்.

என்னை தூக்கு- கவனி-கொஞ்சு

குழந்தைகள் தன்னை பெற்றோர் கைகளில் எடுத்து கொஞ்சி விளையாட வேண்டும் என எதிர்பார்க்கும். அவர்களின் முகத்தைப் பார்ப்பது, குரலை கேட்பது, உடல் சூட்டை உணர்வது, இதயத் துடிப்பை கேட்பது, வாசனையை நுகர்வது குழந்தைக்கு பிடிக்கும். அதனால் நீண்ட நேரம் தனியாக இருக்கும் போதோ அல்லது பெற்றோர் மிஸ் பண்ணும் போதோ, அழுது தன் ஏக்கத்தை வெளிப்படுத்தும். அதுதான் காரணம் என்றால், நீங்கள் தூக்கிய உடனேயே அழுகையை நிறுத்திவிடும்.

அதீத குளிர் அல்லது வெப்பம்

குழந்தை எப்போதும் மிதமான வெப்பத்தில், இளஞ்சூடான சூழலில் இருக்கவே விரும்பும். அதீதக் குளிர் அல்லது வெப்பத்தை அவை விரும்புவதில்லை. இரவுகளில் குழந்தை அழுதால், அதற்கு ஏ.சி.,யால் குளிரவோ, காற்று போதாமையால் வியர்க்கவோ செய்யலாம். பொதுவாக கைக் குழந்தைகள் குளிரை விரும்புவதில்லை என்பதால், ஏ.சி.,யிலேயே வைத்திருக்க வேண்டாம்.

வலி அல்லது மற்ற புற தொந்தரவுகள்

உடலில் ஏதேனும் குத்திக் கொண்டிருக்கலாம். அல்லது கைகளிலோ கால்களிலோ அணிந்திருக்கும் அணிகலன்கள், கயிறுகள் தொந்தரவு கொடுக்கலாம். சில சமயம் தலை முடி எங்காவது சுற்றி வலியை உண்டாக்கலாம். அதனால் குழந்தை காரணமில்லாமல் அழும் போது, அதன் உடலை, உடையை, டயப்பரை முழுமையாக ஆய்வு செய்யுங்கள். தலை முடி, காது எல்லா பகுதிகளையும் சோதனை செய்து அசவுகரியத்தை நீக்குங்கள்.

எனக்கு அழத் தோன்றுகிறது

ஐந்து மாதங்களாகும் போது, குழந்தை மதியம் மற்றும் மாலை வேளைகளில் சும்மாவே அழும். இது இயற்கையானதுதான். அத்தகைய சூழலில் குழந்தையை கொஞ்சுவது, அதனுடன் விளையாடுவது, டிரைவ் போவது, ஏதேனும் ஒரு வித்தியாசமான ஒலியை உருவாக்கி கவனத்தை திருப்புவது போன்றவை தீர்வளிக்கும்.

எனக்கு உடம்பு சரியில்லை

குழந்தையின் அழுகை, அதன் காரணங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படும். உடல் நலனில் பாதிப்பென்றால் குழந்தை வித்தியாசமான குரலில் அழும். அதாவது பலவீனமாக, அவசரத்தை உணர்த்தும் வகையில், தொடர்ச்சியாக அல்லது வீலென கத்தும். உங்கள் உள்ளுணர்வு குழந்தையின் உடல் நலன் குறித்து சந்தேகப்பட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை

கூட்டத்தில் நடுவே வெகு நேரம் இருப்பது, விருந்தினர்கள் வருகை, ஓயாத சத்தம், மாற்றி மாற்றி தூக்குவது, கொஞ்சுவதால் குழந்தை எரிச்சலடையும். தனிமை, அமைதி வேண்டி அது போன்ற சந்தர்ப்பங்களில் அழத் தொடங்கும். எனவே தனியறைக்கு அல்லது பால்கனி, மொட்டை மாடி, தோட்டம் போன்ற இடங்களுக்கு குழந்தையை தூக்கிச் சென்று சமாதானப்படுத்துங்கள்.

– ரோஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g