இ.சி.ஆர்., சாலையில் இளைப்பாற சிறந்த இடங்கள்!

இ.சி.ஆர்., சாலையில் இளைப்பாற சிறந்த இடங்கள்!

சென்னை திருவான்மியூரில் தொடங்கி, மாமல்லபுரம் வரையில், கிழக்குக் கடற்கரை சாலையில் காண வேண்டிய சுற்றுலா இடங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிறந்த இடங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

கலாக்‌ஷேத்ரா தொடங்கி மாமல்லபுரம் வரை, கலாச்சாரம், பொழுதுபோக்கு தீம் பார்க்குகள், கலைப்பொருட்கள் கண்காட்சி, கிழக்குக் கடற்கரை, படகுத்துறை, உயிரியல் பூங்கா, வரலாற்றுச் சின்னங்கள் என, பல வகையான இடங்கள் உள்ளன. இவற்றை ஒரே நாளில் சுற்றிப் பார்ப்பது என்பது சாத்தியமில்லை. ஆகவே, வார இறுதி நாட்களில் சில இடங்கள் என திட்டமிட்டுப் பார்க்கலாம்.   மாமல்லபுரம் வளாகம் மிகப் பெரியது என்பதால், அதைத் தவிர்த்து மற்றவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

கோவளம் கடற்கரை

சென்னையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் கோவளம் கடற்கரை, சென்னையின் அழகிய இடங்களுள் ஒன்று. கடலையும், நீர் சாகச விளையாட்டுகளையும் ரசிப்பவர்களுக்கு சிறந்த இடம் கோவளம். நீச்சல், விண்ட் சர்பிங், படகு செலுத்துதல் உள்ளிட்ட நீர் விளையாட்டுகளின் மையமாக உருவாகியுள்ளதால் இளைஞர்களை அதிகம் கவரும்.

முதலைப் பண்ணை

இந்தியாவின் மிகப்பெரிய முதலைப் பண்ணையான இது, உலகின் பெரிய ஊர்வன விலங்கு பண்ணைகளில் ஒன்று. கரியால் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான முதலைகள், பாம்புகள், கடல் ஆமைகள் மற்றும் நீர்ப் பறவைகளின் இருப்பிடமாக இந்தப் பண்னை உள்ளது. மேலும், பாம்புகள் பற்றி விழ்ப்புணர்வு அளிக்கும் செய்முறை விளக்க நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

பார்வையாளர் நேரம் : காலை, 8:30 – மாலை 5:30 வரை. திங்கட்கிழமை விடுமுறை.

கட்டணம் : பெரியவர்களுக்கு – ரூ.60/-, பத்து வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு – ரூ.30/-

நைட் சபாரி : மாலை, 7:00 முதல் 8:30 மணி வரை. இதற்கு கட்டணம் : பெரியவர்களுக்கு – ரூ.200/- , 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு – ரூ.100/-

தட்சிணசித்ரா

தென் மாநிலங்களின் பழம்பெரும் கலாசாரத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பளிக்கிறது, தட்சிணசித்ரா. இது கிழக்குக் கடற்கரை சாலையில், எம்.ஜி.எம்., டிஸ்ஸீ வேர்ல்டுக்கு அருகில் உள்ளது. தென் மாநிலங்களில் பாரம்பரிய கிராம அமைப்பு, பழைய பாணி வீடுகள், பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை முறைகள், கைவினைக் கலைஞர்களின் கலைத்திறன் எல்லாவற்றையும் இங்கே நேரில் காணலாம். பாரம்பரிய உணவுகளை இங்கு சுவைக்க முடியும் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

பார்வையாளர் நேரம்: காலை 10:00 – மாலை 6:00 மணி வரை, செவ்வாய் விடுமுறை

கட்டணம் : பெரியவர்களுக்கு ரூ.110/- சிறுவர்களுக்கு (5-12 வயது) – ரூ.30/-, மாணவர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

சோழமண்டலம் கலைஞர்களின் கிராமம்

ஈஞ்சம்பாக்கம் அருகில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் ஓவியர்கள், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்கள், அங்கேயே தங்கி தங்கள் கலைப் படைப்புகளை உருவாக்கி, விற்பனைக்கும் வைக்கின்றனர். படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் பார்ப்பது அற்புத அனுபவமாக இருக்கும். திறந்தவெளி அரங்கம், புத்தகக் கடை, கைவினைப் பொருட்கள் கடை ஆகியவை இங்குள்ளன. நிரந்தர கலைக்கூடம். கிரானைட், மரம், தாமிரம் மற்றும் பித்தளை பொருட்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் என, ரம்மியமான சூழலை இங்கு அனுபவிக்கலாம்.

பார்வையாளர் நேரம் : காலை, 9:00 – மாலை, 6.:30 வரை

கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ.20/- சிறுவர்களுக்கு ரூ.5/-

3டி கிளிக் ஆர்ட் மியூசியம்

எது உண்மை, எது ஓவியம் என்று வித்தியாசம் காணம் முடியாத அளவுக்கு, வியப்பூட்டும் 3டி ஓவியங்கள் நிறைந்த இந்த அருங்காட்சியகம், வி.ஜி.பி., தீம் பார்க்குக்கு அருகில் உள்ளது. பார்வையாளர்கள், ஓவியங்களுடன் கலந்துணரும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. மிகவும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் கலைக்கூடம் இது.

கட்டணம் : பெரியவர்களுக்கு, ரூ.150/- , சிறுவர்களுக்கு – ரூ.100/-

இந்தியா சீ ஷெல் மியூசியம்

மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள இதுவே, இந்தியாவின் முதல் கடல் சிப்பி மற்றும் சங்கு அருங்காட்சியகமாகும். அரிசி மணி அளவுக்கு சிறிய சிப்பி முதல் உலகிலேயே பெரிய சங்கு வரை, உலகக் கடற்கரைகளில் சேகரிக்கப்பட்ட எண்ணற்ற சிப்பிகளும் சங்குகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கடல்வாழ் உயிரினங்களின் காட்சிக்கூடமும் உண்டு.

கட்டணம் : அருங்காட்சியகத்துக்கு – ரூ.100/- , அக்வாரியம் – ரூ.50/-, இரண்டையும் பார்க்க – ரூ.130/-

முட்டுக்காடு படகுத்துறை

வங்கக் கடலின் காயல் நீர்ப் பகுதியான முட்டுக்காடு, சென்னையில் இருந்து 31 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. வெவேறு வகையான படகுச் சவாரிகள், நீர்ச்சருக்கு உள்ளிட்ட விளையாட்டுகள் ஆகிய செயல்பாடுகளுக்கு சிறந்த இடமாக உள்ளது. உணவகம் மற்றும் இளைப்பாறும் வசதி இருக்கிறது. சீசன் காலத்தில் வலசை வரும் பறவைகளையும் காண முடியும். கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகம் விரும்பப்படும் இடமிது. மழைக்காலத்தில் மட்டும் இதைத் தவிர்க்கலாம்.

விஜிபி யுனிவர்சல் கிங்டம்

எல்லா வயதினருக்கும் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும், சிலிர்ப்பூட்டும் சாகச உணர்வையும் அளிக்கும் தீம் பார்க் இது. சென்னையின் அடையாளங்களுள் ஒன்று. ‘சர்க்கஸ் டிரெய்ன், அல்லாடின், டேஷிங் கார், கோ கார்டிங், வாட்டர் சூட், டெலிகாம்பட், பலூன் ரேசர், டால் கிங்டம், பிளெயிங் மெஷின், ஜங்கிள் கார்’ என, குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற பலவகையான விளையாட்டுகளும், சாகச செயல்பாடுகளும் அனுபவிக்கலாம். தவிர, இசை, நடனம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும். உணவக வசதியும் உண்டு.

நுழைவுக் கட்டணம்: ரூ.450/- முதல்.

நேரம்: காலை 11:00 – மாலை, 7:30 வரை

எம்.ஜி.எம்., டிஸ்ஸீ வேர்ல்ட்

சிறியவர்கள், பெரியவர்கள் என, அனைவரையும் மகிழ்விக்கும் ஏராளமான விளையாட்டுகள், சாகசங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இருப்பதால், குடும்பத்துடன் ஒரு நாளை இன்பமாக செலவிட ஏற்ற இடம் இது. பல்வேறு ரைடுகள், அரங்கங்கள், நீர் விளையாட்டுகள், பிரபல விருந்தினர்களின் நிகழ்ச்சிகள் என முழுமையான பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக இருக்கின்றது.

பார்வையாளர் நேரம் :
வார நாட்களில் – காலை, 9:30 – மாலை, 5.:30 வரை.
விடுமுறை மாற்றும் வார இறுதி நாட்கள்: காலை, 10:30 முதல் மாலை, 7:30 வரை.
கட்டணம் : பெரியவர்களுக்கு, ரூ.549/- முதல். (சிறுவர்களுக்கு, ரூ.449/- முதல்

கலாக்‌ஷேத்ரா

பரதநாட்டியம், கர்னாடக குரலிசை மற்றும் வாத்திய இசை, காட்சிக் கலைகள், பாரம்பரிய கைவினைக் கலைகள் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் என, இந்திய பாரம்பரியத்தையும் கலை வடிவங்களையும் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கலாக்‌ஷேத்ரா நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலை தொடங்கும் திருவான்மியூரில், வங்கக் கடலோரத்தில் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

சென்னைக்குள் ஒரு வனம் என்று சொல்லத்தக்க பசுமை வளாகத்துக்குள், பாரம்பரிய கட்டுமானங்களில் இங்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. வகுப்புகளையும், வளாகத்தையும் நேரில் பார்த்து அறிந்துகொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அருங்காட்சியகம், ஆய்வு மையம், வகுப்புகள், கலைப் பொருட்கள் கண்காட்சி உள்ளிட்டவை இங்குள்ளன.

பார்வையாளர் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை – காலை, 8:30 – மாலை, 4:00 மணி வரை, 1, 3, மற்றும் 5ம் சனிக்கிழமைகளில், பகல், 12:00 மணி வரை.

கட்டணம்: பள்ளி மாணவர்களுக்கு – ரூ.50/-, பெரியவர்களுக்கு – ரூ.100/-

– செலினா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g