சுடச்சுட சூப் ஸ்டோரி

சுடச்சுட சூப் ஸ்டோரி

பெரிய விருந்துணவு என்றாலே சூப்புடன் தொடங்கினால் தான் நிறைவாக இருக்கும். பசியை தூண்டுவது மட்டுமல்ல, உணவின் சுவை மொட்டுகளையும் தூண்டி, விருந்தை சுவையாக்குகிறது சூப்.

உணவுக் கலாச்சாரத்தில், இன்றியமையாத உணவு வகை பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது, சூப். மேற்கத்திய உணவு மரபில் பிறந்திருந்தாலும், உலகம் முழுவதிலும் அனைவரின் விருப்பத்திற்கு உகந்த உணவாக இருப்பது சூப் வகைகள். திக், தின், ஸ்பைசி, நான்-ஸ்பைசி என்று நான்கு வகைகளில் சூப்கள் தயாரிக்கப்படுகின்றன. உணவு வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரை, சூப்பின் வரலாறு பழமையான சமையல் கலை வரலாற்றிற்கு ஈடான ஒன்றாகும்.

ஒவ்வொரு நாட்டின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப, சூப் தயாரிக்கும் முறை மாறுபடுகிறது. பிரெஞ்சு வார்த்தையான ‘சூப்பே’வில் இருந்து பெயர்பெற்றதே, இன்றைய ‘சூப்’ என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். பதினெட்டாம் நூற்றாண்டில், பிரான்ஸில் தொடங்கப்பட்ட ரெஸ்டரன்ட்டுகளில் முதன்முதல் பரிமாறப்பட்ட உணவு, சூப் தான். இங்கிலாந்தின் சவுடேர், ஸ்பானிஷ் காஸ்பாச்சோ, ரஷியன் போர்ஸ்ஷட், இத்தாலிய மினிஸ்டரோன், பிரெஞ்சு ஆனியன் போன்ற சூப்கள், உணவுப் பிரியர்களிடையே பிரபலமானவை.

ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு என ஒவ்வொரு பகுதிக்கும், வித்தியாசமான சூப் தயாரிப்பு முறைகள் உள்ளன. ஆசியாவில், தாய்லாந்து, இந்தோனேஷியாவில் தயாரிக்கப்படும் கான்சோம்மீ வகை சூப்கள் மிகவும் புகழ்பெற்றவை. சிக்கன் அல்லது பீப் இறைச்சி ஸ்டாக்கில், தக்காளி, வெங்காயம், முட்டையின் வெள்ளைக்கரு, நறுமணப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

கொரியா, வியட்நாம் நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தில், சூப் மீல் என்னும் ஒருவகை மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. கிரில்டு மீட், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் முதலியவற்றைக் கொண்டு பிரத்யேகமாக தயார் செய்யப்படுகின்றன என்கிறார் ஸ்பைஸ் இட் ரெஸ்டரன்ட்டின் தலைமை ஷெப் நிஷாரக். தாய்லாந்து சூப் வகைகளில், பெரும்பாலும் பாரம்பரிய முறையில் தேங்காய்ப் பால் சேர்க்கிறார்கள். பர்மாவின் கௌசே நூடுல்ஸ், தேங்காய்ப் பால் மற்றும் நறுமணப் பொருட்களால் தயாரிக்கப்படும் ஒருவகை சூப். இதன் சுவையும் மணமும், அனைவரையும் கவர்ந்த ஒன்று.

இறைச்சி மற்றும் வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படும் பிரெஞ்சு ஆனியன் சூப், பிரட் மற்றும் பாலாடைக்கட்டி சேர்த்து தயார் செய்யப்படுகிறது. பிரான்ஸை பின்புலமாகக் கொண்டிருந்தாலும், 1960களில் அமெரிக்காவில் பிரெஞ்சு உணவுகள் மீண்டும் எழுச்சிபெற தொடங்கியபோது, பிரெஞ்சு சூப்கள் அனைவராலும் விரும்பப்படும் உணவாக மாறியது. பிரெஞ்சு ஆனியன் சூப், எப்போதும் ஸ்டார்ட்டராகவே பரிமாறப்படுகிறது. இறைச்சி சேர்த்து சமைக்கப்படும் இந்த சூப், தண்ணீர் போன்றே காணப்படும். பால் சேர்த்து சமைக்கப்படுவதும் உண்டு. சூப்பை சிறிது திட நிலைக்கு மாற்ற, முட்டை அல்லது மாவு சேர்த்தும் சமைக்கின்றனர் என்கிறார் நிஷாரக்.

பிரெஞ்சு நாட்டில் உள்ள மார்செல்லி நகரில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மீன் சூப், போய்லபைசி என்றழைக்கப்படுகிறது. மற்ற வகை மீன் சூப்களில் இருந்து போய்லபைசி வேறுபட காரணம், இதில் சேர்க்கப்படும் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் ஆகும். போய்லபைசி சூப், வித்தியாசமான முறையில் பரிமாறப்படுகிறது. முதலில் மீன் சேர்த்து சமைத்த குழம்புடன், பிரட் சேர்த்து வழங்குகின்றனர். பின்னர், பெரிய தட்டில் மீன் வைத்து தருகின்றனர். குழம்பு மற்றும் மீன், தனித்தனியே பெரிய தட்டில் பரிமாறப்படுகிறது.

உணவு விருந்துகளில் முதன்மையானதும் முக்கியமானதுமான சூப் வகைகள், நாடுகளின் உணவுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. தமிழகத்தில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது தயாரிக்கப்பட்ட மிளகுத்தண்ணி, காலப்போக்கில் முள்ளிகாதாவ்ணி சூப் என்று பிரபலமடைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு செல்லும்போது, மிளகுத்தண்ணி தயாரிப்பு முறை இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் பரவியது. முள்ளிகாதாவ்ணி சூப், சைவம் மற்றும் அசைவ முறைகளில் தயார் செய்யப்படுகிறது. சிக்கன், மட்டன் மற்றும் வெஜிடேரியன் சூப் என மூன்றும் கிடைக்கிறது.

வெஜிடேரியன் சூப்பில் பருப்பு வகைகள், வெள்ளரி, தேங்காய் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. நான்-வெஜிடேரியன், சிக்கன் அல்லது மட்டன், கிரீம், வெங்காயம், ஆப்பிள், பாதாம், தேங்காய்ப் பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவைவிட, ஐரோப்பியர்களிடம் இந்த சூப் மிகவும் பிரபலம் என்கிறார் நிஷாரக்.

பால் மற்றும் கிரீம் சேர்த்து தயாரிக்கப்படும் சூப் வகைக்கு, சாவ்டர் என்று பெயர். கடல் உணவுகள் மற்றும் வெஜிடேரியன் முறையில் சாவ்டர் சூப்கள் தயார் செய்யப்படுகின்றன. சூப்பின் கெட்டித்தன்மைக்காக பிஸ்கட்டுகள் இவற்றுடன் சேர்க்கப்படுகின்றன. நியூ இங்கிலாந்து கிலாம் சாவ்டர் எனும் சூப் வகை, கடல் சிப்பி, உருளைக்கிழங்கு, கிரீம், பால், வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதேபோன்று மீன் சாவ்டர், கார்ன் சாவ்டர் சூப்களும் தயாரிக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு சாவ்டர் சூப், பாலாடைக்கட்டி சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g