துணையிடம் சொல்லக்கூடாத 6 வாக்கியங்கள்

துணையிடம் சொல்லக்கூடாத 6 வாக்கியங்கள்

பொதுவாக நாம் கூறும் வார்த்தைகள் ஒரு உறவை வளர்க்கவும் உதவும், முறிக்கவும் உதவும். முக்கியமாக, தம்பதியருக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சில வார்த்தைகள், இருவரையும் காயப்படுத்தி விடும். முதலில் பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவதற்கு பதில், வாழ்க்கைத் துணைவரிடம் பேசக்கூடாத நச்சு வார்த்தைகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்…

உன் மீது நம்பிக்கை இல்லை

நீ பொய்யானவன்/பொய்யானவள் என்று முத்திரை குத்தி பேசும்போது, தம்பதியர் இடையே நம்பிக்கை குறைந்துவிடும். வெற்றிகரமான  மண வாழ்க்கையின் அடித்தளமே, நம்பிக்கை  தான். துணை மீது இருக்கும் நம்பிக்கையின்மையை  அடிக்கடி வெளிப்படுத்தினாலோ அல்லது மற்றவர்களிடம் இதை பற்றி கூறும் போதோ, நிச்சயமாக தம்பதியரிடையே இடைவெளி அதிகமாகும். அப்படியே துணை பொய் சொல்வதாக தோன்றினால், துணையிடம் ’நீ  கூறுவதில் உண்மையாக குறை இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்று சொல்வதே சிறந்த அணுகுமுறை. உண்மையை சேகரித்த பிறகு துணையிடம் கேட்கும் போது, புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.  மேலும் இப்படி நிதானமாக கேட்பதால் துணை மீது நேரடியாக குற்றம் சாட்டுவது போல் தோன்றாது மற்றும் அவர்களின் மனமும் புண்படாது.

என்னை நீ உண்மையாக நேசிக்கிறாயா ?

இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தும் போது  துணையின்  நேசத்தை பரிசோதிப்பது போன்ற உணர்வையே தரும். உங்கள் எதிர்பார்ப்பை தெரிவிப்பதற்கான மோசமான வழியாகும். உங்கள் துணையின் அன்பை நிரூபிக்க துண்டுவதால்,  அவர்களுக்கு ஒருவிதமான அழுத்தம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த மாதிரி வழியில் ஒரு துணை  தன் அன்பை நிரூபிக்க விரும்ப மாட்டார்கள், மாறாக மோதலை உருவாக்காமல் வேண்டுகோளாக வெளிப்படுத்துவதே சிறந்த வழி. உதாரணத்திற்கு, உங்கள் துணையை நம்புகிற விதமான, இணைக்கும் விதமான வாக்கியத்தை பயன்படுத்துங்கள்.  துணையிடம் ’உன்னுடன் நேரம் செலவு செய்வதை மிஸ் பண்ணுகிறேன், இந்த வார இறுதியில் அவுட்டிங் போக திட்டமிடலாமா என்று சொல்வதன் மூலம், உங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் நிறைவேற்ற வாய்ப்புகள் அதிகம்.

உருப்படியான கரியரை தேர்ந்தெடு

இப்படி கூறுவதன் மூலம் கரியர் சார்ந்து குறைத்து மதிப்பிடுவதாக துணையை உணரச் செய்கிறீர்கள். திருமண உறவுக்குள் மரியாதை என்பது நிபந்தனையின்றி வழங்க வேண்டியது அவசியம். உதாரணத்திற்கு, பணி சார்ந்து கலந்துரையாடும் போது, ‘நான் என் பணியை எப்படி வேண்டுமானாலும்  செய்து கொள்கிறேன்,  நீ என்ன சொல்கிறாய் என்பது பற்றி எனக்கு கவலையில்லை’ போன்ற வாக்கியங்கள் துணையை எதிர்மறையாக மதிப்பீடு செய்வதாகும். பொதுவாக ஒருவருடைய கரியர் என்பது ஆளுமையோடு தொடர்புடையதால் பாஸிடிவ்வாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் பேசுவதே நல்லது. அப்போது தான், தம்பதிகளிடையே நல்ல பிணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். மாறாக குறைத்து மதிப்பிடும் போது உறவுக்குள் கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை உருவாகும்.  அதன்பிறகு அதை சரிசெய்வது என்பது இருவருக்கும் கடினமாக செயலாகும்.

எதுவாக இருந்தாலென்ன?

இந்த வாக்கியத்தை கூறும் போது  உங்கள் துணைக்கு முக்கியத்துவம் கொடுக்காததாகவும், நிராகரிப்பதாகவும் தோன்றும். ‘என்ன நடந்தாலென்ன’, ‘எதுவாக இருந்தாலென்ன’ போன்ற வார்த்தைகள் உறவில் உற்சாகமோ,  நேர்மறை எண்ணங்களோ இல்லாத ஒரு சூழலை உருவாக்குவதோடு, தம்பதிகளுக்குள் ஒரு அதிருப்தியை உண்டாக்கும். இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டால், பொதுவாக கணவர்கள் தங்கள் மனைவியை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை  திருப்தியாக உணர்கிறார்கள். ஆதலால் பிரச்னைகள் வரும் போது, ஒரு சிறிய புன்னகை மற்றும் துணையை அணைப்பது மூலமாக சண்டையிடும் மனோபாவம் குறைந்து, நிதானமாக பேசி தீர்க்கும் சூழல் இயல்பாகவே உருவாகும்.

உனக்கு எதுவுமே தெரியாது

முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில், ‘ உனக்கு எதுவுமே தெரியாது’ என்ற வாக்கியம் துணையை தாழ்வாக எண்ண வைக்கும். மேலும் துணையின் கருத்தை, திறனை அங்கீகரிக்காமல் இருப்பதாகும். பொவாக ஒருவரை எதிலும் சிறப்பாக இல்லை என்று கூறும் புண்படுத்தும் வார்த்தைகள், எளிதாக மற்றவரிடமிருந்து விலக வைக்கும் மனநிலையை உருவாக்கும். இந்த வகையான கருத்துப் பரிமாற்றங்கள் எத்தகைய சூழ்நிலையையும் சரி செய்ய உதவாது. துணையை கணிக்கும் போது, விளைவுகளை மனதில் கொண்டு வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே உறவு மேம்பட துணைக்கு கற்றுக் கொடுப்பதும் ஊக்கப்படுத்துவதுமே சிறந்த அணுகுமுறை.

 எனக்கு விவாகரத்து வேண்டும்

சண்டைகளோ, கருத்து வேறுபாடுகளோ வரும் போது, விவாகரத்து வேண்டும் என்ற அடிக்கடி சொல்வது, துணையை நிராகரிப்பதாக உணரச் செய்யும். மேலும் இது திருப்தியில்லாத  மண வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. துணையிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற மனநிலையை வெளிக்காட்டுகிறது. இந்த மாதிரி வார்த்தைகள் கண்டிப்பாக துணையை காயப்படுத்தும். தொடர்ந்து இந்த மாதிரி வார்த்தைகள் உபயோகப்படுத்துவதால், சிறு சண்டையாக முடிய வேண்டிய பிரச்னை, மிகப் பெரிதாக  திசை மாற வாய்ப்புகள் அதிகம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                           – ராதா சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g