டீன் ஏஜ் பிள்ளையை புரிந்துகொள்ள வேண்டுமா?

டீன் ஏஜ் பிள்ளையை புரிந்துகொள்ள வேண்டுமா?

டீன் பிள்ளைகளை கையாளுவது எளிதல்ல தான், ஆனால் முடியாததல்ல. அதற்கான எளிய யோசனைகள் உங்களுக்காக…

காதுகொடுத்துக் கேளுங்கள்

உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசு, உங்கள் நேரம் தான். ஒரு நாளைக்கு குறைந்தது, 30 நிமிடங்களாவது தரமான நேரத்தை அவர்களுடன் செலவிட தீர்மானியுங்கள். இருவருக்கும் ஒத்துவரும் நேரத்தை இதற்கென திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் பேசுவதை நன்றாக கவனிக்கும்போது, அவர்களின் தர்க்கமற்ற சிந்தனைகள், பொதுமைப்படுத்தல்கள், அவர்கள் எடுக்க யோசித்துக் கொண்டிருக்கும் ஆபத்தான முடிவுகள், இவற்றை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஆகவே உங்கள் யூகங்கள், சந்தேகங்களை ஒதுக்கிவிட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். இதன் மூலம், அவர்களுக்கு அறிவுரை, ஆலோசனை சொல்லும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுடன், அவர்களுடனான உறவும் மேம்படுகிறது.

பாராட்டுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்!

*

பெற்றோரால் அடிக்கடி பாராட்டப்படும்போது, பிள்ளைகளின் சுயமதிப்பு அதிகரிக்கிறது. இதுவே அவர்களின் தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரமாகி, ஊக்கம் பெறவும், முடிவெடுக்கும் திறமை, உறவுகள், தன்னைப் பற்றிய மதிப்பீடு இவற்றை வளர்த்துக்கொள்ள உதவும். ஆகவே, சரியான சந்தர்ப்பங்களில் அவர்களை பாராட்ட தவறாதீர்கள். விளையாட்டு ஆர்வங்கள், பொழுதுபோக்குகள், ஆடை அணியும் ஸ்டைல்கள், இவற்றில் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுமதிப்பதன் மூலம், அவர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறீர்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறும் வாய்ப்பை அதிகரிக்கிறீர்கள்.

சொல்லிக் கொடுங்கள், விலகி இருக்காதீர்!

*

மது, போதை, செக்ஸ், இவை பற்றி உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் பேசுங்கள். இதில் எதிலாவது அவர்கள் ஈடுபட்டிருந்தால், உடனடியாக பெரிதாக ரியாக்ட் செய்யாதீர்கள். ‘கூடாது’ என்று தடுத்தால், தங்களின் பிரச்னைகள் பற்றி மீண்டும் உங்களுடன் பேசுவதையே தவிர்த்துவிடுவார்கள். ஆகவே, அமைதியாக நட்பாக அணுகி, மது, போதையின் தீமைகள் பற்றி விளக்குங்கள், அனுபவங்களை எடுத்துரையுங்கள். நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறவராக நீங்கள் செயல்பட வேண்டும். எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் அணுகுமுறைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு எந்த விஷயத்தைப் பற்றியும், உங்கள் டீன் ஏஜ் பிள்ளையுடன் பேசும் சுமூக உறவு வேண்டும். அந்த உறவை, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமையுங்கள்.

டீன் ஏஜ் உலகை புரிந்துகொள்ளுங்கள்

சக நண்பர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென மெனெக்கெடுவதால், கடுமையான அழுத்தத்தை பிள்ளைகள் எதிர்கொள்கிறார்கள். இதனால் இவர்களின் முடிவெடுக்கும் திறனும், முன்னுரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் வேகமான மாற்றங்களுக்கு ஆட்படும் சூழ்நிலையால், பல நேரங்களில் எதிர்மறையான முடிவுகளை எடுக்கிறார்கள், சோஷியல் மீடியாவில் நேரத்தை வீணடிக்கிறார்கள். இதுவே அவர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் நிலையில், பெற்றோர், ஆசிரியர்கள் வைத்துள்ள எதிர்ப்பார்ப்புகளும் சேர, டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அழுத்தம் மேலும் கூடுகிறது. உங்கள் டீன் ஏஜ் பிள்ளையின் பிரச்னைகளையும் போராட்டங்களையும் புரிந்துகொண்டு, அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க நீங்கள் உதவலாம்.

கண்காணியுங்கள்

*

உங்கள் டீன் ஏஜ் மகன்/மகள், உங்களுடன் பழக விருப்பமில்லாமல், தனது படுக்கையறைக்குள் கணிணி முன்பாக அல்லது செல்போனுடன் பல மணிநேரம் செலவிடலாம். அவர்களுக்கு பர்சனல் ஸ்பேஸ் தேவைப்படும் அதே வேளையில், அவர்களிடம் அசாதாரணமான மாற்றங்கள் தெரிகிறதா என்பதையும் கண்காணியுங்கள். உங்களுடனான உரையாடலை தவிர்த்தாலோ, அவர்களின் தூங்கும் பேட்டர்ன் அல்லது உணவுப் பழக்கத்தில் மாற்றம் தெரிந்தாலோ, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலோ, காரணத்தைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். தேவையெனில், கவுன்சிலர் உதவியை நாடுங்கள். மனச்சோர்வு, பதட்டம், தன்னை அழித்துக்கொள்ளும் கெட்டப்பழக்கங்கள், இவற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடியது டீன் ஏஜ் பருவம். தங்களின் எதிர்காலம், தங்களின் உண்மையான தேவைகள் பற்றி அவர்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். இதுபற்றிய உங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு, அவர்களை நெருக்கமாக கவனியுங்கள்.

                                                                                                                                                                           – செலினா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g