சுமையில்லா சுற்றுலா: ஆடைத் தேர்வுக்கான ஸ்டைலிங் டிப்ஸ்

சுமையில்லா சுற்றுலா: ஆடைத் தேர்வுக்கான ஸ்டைலிங் டிப்ஸ்

சுற்றுலா செல்லும் போது லக்கேஜ்  சுமையை குறைக்க, ஆடைகளையும் ஆக்சஸரிகளை திட்டமிட்டு எடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளை அளிக்கிறார், ஸ்டைலிஸ்ட் அருள்மொழி. 

இடத்தை உறுதி செய்யுங்கள் – நீங்கள் எந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் தட்பவெட்ப நிலை, நீங்கள் எதற்காகச் செல்கிறீர்கள், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் ஆடை அணிகலன்கள் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கு முதலில் விடையறிந்து, அதற்கு ஏற்ப ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள்.

வண்ணம் மற்றும் ஆடைத் தேர்வு – நீங்கள் தேர்வு செய்யும் டாப் அல்லது பாட்டம், பொதுவான  நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது மற்ற ஆடைகளுக்கும் பொருந்தும் விதத்தில் இருக்க வேண்டும்.

அருள்மொழி                          (ஸ்டைலிஸ்ட்)

நீங்கள் அதிகமாக எந்த இடங்களுக்குச் செல்லப் போகிறீர்கள் என்பதையும் முடிவு செய்து, ஆடைகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக நீங்கள் பார்ட்டி, கண்காட்சி, விளையாட்டு இடங்கள், விசேஷங்கள் என அதிகமாக எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் அதிகம் விரும்பி அணியும் சவுகரியமான உடையாக இருந்தால், உங்கள் சுற்றுலாவை அது மேலும் இன்பமாக்கும். புதிதாக ஒன்றை முயற்சி செய்வதாக நினைத்து உங்கள் உடலமைப்பிற்கும், நிறத்திற்கும் சவுகரியமாக இல்லாவிடில், உங்களின் அன்றைய நாளே வீண்.

மேலாடை மற்றும் கீழாடை இரண்டும், தேர்வு செய்யப்போகும் மற்ற ஆடைகளுக்கும் பொருந்துமாறு தேர்வு செய்யுங்கள். அவ்வாறு செய்வதால் அதிக அளவிலான லக்கேஜ் எடையைக் குறைக்கலாம்.

 

இந்தப் பட்டியலில் கட்டாயம் ஒரு கருப்பு மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் இருக்கட்டும். அது எல்லா ஆடைகளுக்கும் பொருந்தும். குளிர் பிரதேசங்களுக்கும் நன்றாக இருக்கும்.

குளிர் பிரதேசமாக  இல்லாதபட்சத்தில், மெல்லிய ஃபேப்ரிக் ஆடையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  இவ்விடங்களில் ஆடையை துவைக்கவும் காயவைக்கவும் சிரமம் இருக்காது.  மற்ற ஆடைகளோடு மேட்ச் செய்ய ஏதுவாக இருக்கும்.

கட்டாயமாக ஒரு டெனிம் ஜாக்கெட், ஷ்ரக், ஸ்கார்ஃப் இவை மூன்றையும் எடுத்துச் செல்லுங்கள். அவை உங்கள் உடனடி ஸ்டைலிங்கிற்கு உதவும். நீங்கள் தேர்வு செய்யும் அனைத்து ஆடைக்கும் பொருந்துகிற நிறங்களில் அவை இருக்கட்டும். குளிர் பிரதேசமாக இருந்தால் ஜாக்கெட் மற்றும் ஷ்ரக் தவிர்த்து ஜெர்க்கின் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆக்சஸரி தேர்வு  அணிகலன்களை தேர்வு செய்யும் முன், அவை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் எல்லா ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படியிருக்கும் பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று செட்களை வைத்துக் கொள்ளுங்கள். விலையுயர்ந்த அணிகலன்களைத் தவிர்க்கவும்.

காலணிகள் தேர்விலும் பல சொதப்பல்கள் நடக்கும். எனவே நீங்கள் அனைத்து ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் ஃபிளாட் ஷூ, ஃபிளாட் சாண்டல் மற்றும்  ஸ்னீக்கர் இவை மூன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் அனைத்து ஃபிளாட்டாக இருக்க வேண்டும் என்றால்,  நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதே  சுற்றிப் பார்க்கத்தான். அதிகமாக நடக்க வேண்டி வரும்.  இப்படியான சூழ்நிலையில் ஹீல் அணிந்து சென்றால் கால் வலிதான் மிஞ்சும். சவுகரியமான காலணியால் உங்கள் சுற்றுலாவும் இன்பமாக அமையும்.

பெல்ட் தேர்வு செய்யும் முன் பேன்ட் மற்றும் ஸ்டைலிங்கிற்கு ஏற்ப, ஆடைக்கு மேல் அணிந்து கொள்ள என, இரண்டு விதத்தில் பயன்படுமாறு ஒரு பெல்ட் மட்டும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

 

ஸ்டைலிங் ஆப்ஸ் –  தற்போது வெகேஷன் செல்லும்போது எவ்வாறு ஆடைகளைத் தேர்வு செய்வது என யோசனைகள் அளிப்பதற்கென்றே ஆப்ஸ் வந்திருக்கின்றன. டிராவல் ஃபேஷன் கேர்ள், பாலிவோர், ஸ்டைல் புக், ஃபேப் சுகர் அவுட்ஃபிட் பிளானர், மோல்ஸ்கின் ஸ்டைல் ஜர்னல் போன்ற ஆப்ஸ், உங்களுக்கான சிறந்த வெக்கேஷன் ஸ்டைலிற்கு உதவுகின்றன. இந்த ஆப்ஸில் நீங்கள் அணியப்போகும் ஆடைகளைப் புகைப்படம் எடுத்து பதிவு செய்தால், அதுவே உங்களுக்கான மேலாடை மற்றும் கீழ் ஆடைகளுக்கு ஏற்ற சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்து விடும். இதனால் உங்களுக்கும் குழப்பம் குறையும். நேரமும் மிச்சமாகும்.

அதேபோல் எந்தெந்த ஆடையை, எந்தெந்த நாட்களுக்கு அணியப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்து கொள்ளலாம். அப்படி செய்தால், ஒவ்வொரு நாளும் நீங்கள் அணிய வேண்டிய ஆடையை,  அந்த ஆப் உங்களுக்கு நினைவூட்டும்.                                                                                                                                       – ஏ.சிவரஞ்சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g