சீன விருந்துக்கு சைனா டவுன் அழைக்கிறது!

சீன விருந்துக்கு சைனா டவுன் அழைக்கிறது!

பல இந்திய உணவகங்கள் சீன வகை உணவுகளை தயாரித்து வழங்கினாலும், சில உணவகங்கள் மட்டுமே அதை பாரம்பரிய சுவையுடன் உபசரிக்கின்றன. 34 ஆண்டுகளாக, சென்னையில் இயங்கி வரும், சைனா டவுன் ரெஸ்டரன்ட், சீன உணவுகளுக்கான பிரத்யேக உணவகம்.

சைனா டவுனுக்குள் நுழையும் போது, திரைச்சீலைகள், அலங்காரப் பொருட்கள், இசை என அனைத்திலும் சீனாவின் பிரதிபலிப்பு. காண்டோனீஸ், சாங்டங், செஷ்வான் போன்ற சீன உணவு வகைகளை இவர்கள் சிறப்பான முறையில் தயாரித்து வழங்குகிறார்கள். இந்திய உணவுச் சந்தையில் சீன வகை உணவுகளுக்கென, ஒரு சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது. சீன உணவு வகைகள், சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆசிய நாடுகள் உட்பட உலகின் மற்ற பகுதிகளில் உள்ள சீன மக்களிடம் இருந்தும் தோற்றுவிக்கப்பட்ட பாணியை கொண்டுள்ளது. சீன உணவுகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நீட்சியாகவும், உலகப் பண்பாடுகளின் தாக்கம் மற்றும் உள்ளூர் விருப்பங்களை சார்ந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி கண்டு வருகிறது. அன்ஹுய், காண்டோனீஸ், புஜியான், ஹுனான், ஜியாங்சு, சாங்டங், சிஷுவான் மற்றும் ஷேஜியாங் ஆகியவை சீனாவின் எட்டு பிரபலமான உணவு வகைகள். சீன சமையல் வகைகளில் அரிசி, நூடுல்ஸ், காய்கறிகள், மற்றும் சுவையூட்டிகள் ஆகியவையே பிரதானமானவை.

‘‘காண்டோனீஸ், சாங்டங், ஜியாங்சு மற்றும் சஷ்வான் இவை அனைத்தும் சீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த உணவு வகைகள். ஒன்றில் பூண்டும், இஞ்சியும் அதிகமாக இருந்தால், மற்றொன்றில் மிளகும், மிளகாய் விழுதும் பிரதானமாக இருக்கும். வளங்கள், புவியியல், வரலாறு, சமையல் நுட்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை என்று, உணவுகளின் தனித்தன்மை வகைக்கு வகை மாறுபடுகிறது. சைனா டவுன் மெனுவில் சீனர்களின் விசேஷமான உணவுகள் இடம் பெற்றுள்ளன. சாலட்கள், ஸ்டார்டர்ஸ் சூப், நூடுல்ஸ், கடல் உணவுகள் என பட்டியல் மிக நீளம். வெளிநாட்டு விருந்தினர்களை கவரும் வகையில் அவர்களின் ரசனைக்கேற்ப பிரத்யேகமான உணவுகளையும் வழங்குகிறார்கள். டிராகன் சிக்கன், சிக்கன் லாலிபாப், தைச்சின் சிக்கன், அமெரிக்கன் சாப்ஸி முதலிய உணவுகள் சைனா டவுனில் பிரபலமனவை.

ஒரு நல்ல உணவுக்கு நிறம், மணம், சுவை, மற்றும் அழகு ஆகியவை மிக முக்கியம். சீனர்கள் தங்கள் உணவில் காரம், இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உப்பு ஆகிய சுவைகளின் கலவையை விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் உணவில் சோயா சாஸ், ஆய்ஸ்டர் சாஸ், ரெட் சில்லி சாஸ், மஞ்சள் பீன் சாஸ், தக்காளி சாஸ் மீன் சாஸ் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்துகிறார்கள” என்று கூறுகிறார், செப் இளங்குமரன்.

சைனா டவுனுக்கு ஐரேப்பியர்கள், தென் கொரியர்கள், ஜப்பானியர்கள் என, பல வெளிநாட்டு விருந்தினர்களும் வருவதால், அவர்களை கவரும் வகையில் லைவ் கவுன்ட்டர் என்ற கருவைக் கொண்டு, அவர்கள் விரும்பிய சுவைக்கேற்ப விதவிதமான சாஸ்களை கொண்டு கண்முன்னேயே உணவுகளை தயாரித்து வழங்குகிறார்கள்.

அலா கார்ட் மற்றும் பபே என இரண்டு முறைகளிலும் இங்கு உணவுகள் வழங்குகிறார்கள். அலா கார்டில் இடம் பெற்றுள்ள உணவுகள், சுழற்சி முறையில் பபேவில் வழங்கப்படுகின்றன. சைனா டவுனில் உணவுகளில் பயன்படுத்தப்படும் சாஸ்கள் அனைத்துமே ஹோம் மேட் என்பதால், சுவைகளில் தனித்தன்மையை உணரமுடியும் என்கிறார் இளங்குமரன். சிங்கப்பூர் சில்லி இறால், தைச்சின் சிக்கன், ஹூனான் சிக்கன், புக்கட் மீன், சில்லி சிக்கன், க்ளே பாட் ரைஸ், க்வே ட்யோவ் என்ற ஒரு வகை மலேசியன் நூடுல்ஸ், வெஜ் பால் மஞ்சுரியன் முதலிய உணவுகள் இங்கு பிரபலமானவை.

பெரும்பாலும் சைனீஸ் உணவுகள் சோயா மற்றும் ரெட் சில்லி என, இரண்டு பிரதான சாஸ்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இறாலை டீப் பிரை செய்து தக்காளி மற்றும் ரெட் சில்லி சாஸ்களில் பதமாக சமைத்து, சிங்கப்பூர் சில்லி பிரான்ஸை பரிமாறுகிறார்கள். இதன் இனிப்பு மற்றும் காரம் கலந்த சுவை அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒன்று. இறைச்சியை மிளகு, சில்லி பேஸ்ட் , மைதா, கார்ன் மாவுகளில் ஊறவைத்து டீப் பிரை செய்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், டிரை ரெட் சில்லி, ஓய்ஸ்ட்டர் சாஸ், ஸ்டாக் வாட்டர் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தைச்சின் சிக்கனை தயாரிக்கிறார்கள். இது பிரபலமான சைனீஸ் உணவுகளில் ஒன்று.

இதைபோன்று விதவிதமான இனிப்பு வகைகளையும் பபேவில் வழங்குகிறார்கள். ஐஸ் காச்சங், கார்மல் கஸ்ட்டர்ட், மில்க் புட்டிங், தேங்காய் புட்டிங் என வித்தியாசமான டெஸ்ஸர்ட்டுகளை விருந்தினர்களுக்கு பரிமாறுகிறார்கள். இதுதவிர, டைகர் பிரான்ஸ், லாப்ஸ்டர், ஹோல் கிராப் போன்ற சிறப்பான கடலுணவு வகைகளும் சைனா டவுனில் கிடைக்கின்றன. உணவு பிரியர்கள், பாரம்பரியமிக்க சீன உணவுகளை சுவைக்க சைனா டவுன் சிறந்த இடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g