வாழ்வை புதுப்பியுங்கள்- விவாகரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமோனி சேவை  

வாழ்வை புதுப்பியுங்கள்- விவாகரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமோனி சேவை  

சமீப காலங்களில், சராசரியாக  25 முதல் 35 வயது வரை உள்ள தம்பதியர்  பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் திருமணமான ஆறு மாதத்திலிருந்து, 2 வருடங்களுக்குள், அதாவது புதுமண தம்பதியர் அதிகளவில் விவாகரத்துக் கோருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகரிக்கும் விவாகரத்து எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, விவகாரத்து ஆனவர்களுக்கான மேட்ரிமோனி சேவையை பல நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. 

விவாகரத்து மற்றும் தனித்து வாழ்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் உள்ளதாக அண்மைக்கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது  7.9 % பேர் திருமணம் செய்து தனித்து வாழ்கின்றனர். சாம்பிள் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (Sample Registration System (SRS)) கணக்கெடுப்பின் படி, தேசிய அளவில் 2.5 % மணமான ஆண்களும், 8.3 % மணமான பெண்களும் தனித்து வாழ்வதாக ரிப்போர்ட் சொல்கிறது.

மறுமண வாய்ப்புகளை உருவாக்கித் தரும் மேட்ரிமோனி நிறுவனங்கள்

 இந்தியாவில் விவாகரத்து ஆனவர்களும், துணையை இழந்து தனித்து வாழ்பவர்களும் மறுமணம் செய்து கொள்வது என்பது இன்றும் சவாலாகத்தான் இருக்கின்றது. ஆனாலும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில், மேட்ரிமோனி நிறுவனங்கள் களம் இறங்குகின்றன.  Secondshaadi.com, DivorceeMatrimony போன்ற இணைய தளங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

விவாகரத்தான லட்சக்கணக்கானவர்களுக்கு  இன்னொரு துணையை தேர்வு செய்ய, DivorceeMatrimony இணையதளம் கடந்த 10 ஆண்டுகளாக உதவி வருகிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும்,  1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மறுமணம் செய்ய பதிவு செய்கின்றனர். ஐ.டி., ஊழியர்கள், மேலாளர்கள், அதிகாரிகள்  என,  ஆண்/பெண் இருவரும் பதிவு செய்ய விரும்புகின்றனர்.

இது தொடர்பாக Matrimony.com நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராம் கூறுகையில்..

“இந்தியாவில் சுமார் 13.36 லட்சம் பேர் விவாகரத்து பெற்றுள்ளனர். சமீப ஆண்டுகளில், ஆண் பெண் இருவருமே இளம் வயதிலேயே அதிகளவில் விவாகரத்து பெறுவது கவலை அளிக்கின்றது. பல்வேறு காரணங்களுக்காக பிரிகின்ற தம்பதியர்  ஒவ்வொருவருக்கும், தங்களின் மண வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்வதற்கான தகுதி இருப்பதாக நினைக்கிறோம்.

அத்தகையவர்களுக்கு உதவும் வகையில் இந்த DivorceeMatrimony இணையதளம் உருவாக்கப்பட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவில் பதிவு செய்கிறார்கள். முறிந்த மணவாழ்க்கையை மறுபடியும் உயிர்ப்பிக்க, உங்கள் துணையை தேடுவதற்கும், தெரிந்து கொள்வதற்கும், முடிவு எடுப்பதற்கும் ஆன்லைன் மூலம் ஒரு சிறப்பான மற்றும் பாதுகாப்பான சேவையை நாங்கள் வழங்குகிறோம்’’ என்றார்.

மறுமணம் செய்ய தடையாக இருக்கும் காரணங்கள்

விவாகரத்துகளும், தனித்து வாழ்வதும் அதிகரித்தாலும், மறுமணம் குறித்து பலருக்கும் எண்ணம் இருக்கிறது. பொதுவாக, மறுமணம் செய்ய தடையாக இருக்கும் காரணங்கள்:

  • ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியடைந்ததால், மறுமுறையும் தோல்வியடையுமோ என்ற பயம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.
  •  தனித்து வாழ்தலில் கிடைக்கும் சுதந்திரம், மண வாழ்க்கையில் கிடைக்காதோ என்ற தயக்கம். மறுபடியும்  ஒரு சுழலுக்குள் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
  • ஒரு தடவை தங்கள் வாழ்க்கையில் ஆணோ, பெண்ணோ சரியாக அமையவில்லை என்றால், இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் தவறாகத்தான்  இருப்பார்கள் என்ற பொது புத்தி.

மறுமணம் செய்யும் முன் ஆலோசனை அவசியம் என்கிறார், உளவியல் நிபுணர் டாக்டர். நப்பின்னை சேரன். 

டாக்டர். நப்பின்னை சேரன்

மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பி,  அதே நேரத்தில் பயமாக உணர்பவர்கள்  ஆலோசனை பெறுவதன் மூலம் தெளிவடையலாம். முதல் திருமணத்திற்கு முன் பெற வேண்டிய ஆலோசனைகள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதேபோல் மறுமணம் செய்து கொள்வதற்கு முன் கண்டிப்பாக ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம், மறுமணம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார் நப்பின்னை.

ஆலோசனையில் எப்படி பயனடையலாம் ?

  •  முதலில் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு விவாகரத்தானதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்க வேண்டும். முதல் திருமணத்தில் நடந்த தவறை புரிய வைப்பது. மறுமணத்திலும் இதே தவறு பிரதிபலிக்காமல் இருக்க சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து புரிய வைப்பது என, உளவியல் நிபுணர் பெரிய அளவில் உதவ முடியும்.
  • சிலர் பிரிந்து சென்ற கணவன்/மனைவியை பழிவாங்கும் நோக்கத்தோடு வேகவேகமாக மறுமணம் செய்வார்கள். இந்த அவசரத்தாலும் பதட்டத்தாலும், சரியான துணை அமையாமல் போகலம். அப்போது மறுமணமும் விவாகரத்தில் முடிய வாய்ப்புகள் உருவாகும். நிபுணர் வழங்கும் ஆலோசனை மூலம் மறுமணம் செய்வதற்கான அவகாசத்தை  எடுக்க வலியுறுத்துவது மட்டுமில்லாமல், ஆண்/ பெண் மனநிலை அறிந்து முடிவெடுக்க தயார்ப்படுத்துவார்கள்.

  • அதேபோல் வயது கூடுகிறதே, சொந்தபந்தங்கள் என்ன சொல்வார்கள் என்ற அடிப்படையில் அவசரப்படாமல், நிதானமாக சிந்தித்து துணையை தேட வேண்டும். உதாரணத்திற்கு, விவாகரத்தான மணமகன், மணமகள் என்றால், அவர்கள் இருவருக்கும் எந்த காரணத்திற்காக விவாகரத்து பெற்றார்களோ, அந்த காரணத்தை வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது.
  • குழந்தையுடன் இருப்பவர்கள் மறுமணம் செய்யும் போது இன்னும் அதிகமாகவே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசி புரிந்து கொள்ள வேண்டும்.  குழந்தையின் மனநலனை பாதிக்காத வகையில் பேசிவிடுவது பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

  • முதல் திருமண முறிவிற்கான காரணங்களை கண்டறிவது. அதாவது கணவன் அல்லது மனைவியின் கோபம், சந்தேக குணம், உடல்/மன/பணப் பிரச்னைகள், பெற்றோர்கள் தலையீடு, ஈகோ, நம்பிக்கையின்மை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அதாவது பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் எதனால் இந்த மணமுறிவு நிகழ்ந்தது என்று கவுன்சலிங் மூலம் கண்டறிந்து, தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை சரி செய்ய முடியும்.
  • மறுமணம் செய்ய விரும்புபவர்கள் இணையதளமோ, சொந்த பந்தங்களோ எந்த வழியாக துணையை தேர்ந்தெடுத்தாலும், தம்பதியர் இருவரும் திருமணத்திற்கு முன்பே உளவியல் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த மாதிரி ஆலோசனைகள் மூலம், தம்பதியரின் ஆளுமை மற்றும் குணங்கள் வெளிப்படுவதோடு, மறுமணம் வெற்றியடையும் வழிகளையும் அறிந்து கொள்ள முடியும்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 -ராதா சாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To type in English, press Ctrl+g